திதிகளில் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் மௌனி அமாவாசை என்று கூறப்படும் தை அமாவாசை கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடியதாக பழம்பெரும் நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. நாளை (29.01.2025) புதன்கிழமை அன்று வரும் மௌனி அமாவாசையில் கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் ஐந்து பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கால சர்ப்ப தோஷ பூஜை செய்யுங்கள்: ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மௌனி அமாவாசையில் கால சர்ப்ப தோஷ பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை நதிக்கரையில் செய்வது சிறந்தது. இந்த பூஜையின் பலனால் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
2. நவ நாக ஸ்தோத்திரம் படியுங்கள்: கால சர்ப்ப தோஷ நிவர்த்திக்கு எளிதான பரிகாரம் நவ நாக ஸ்தோத்திரம் படிப்பது. மௌனி அமாவாசை அன்று காலையில் நீராடிய பிறகு நாக தேவதையின் படத்தை வைத்து அல்லது சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்து முறைப்படி நவ நாக ஸ்தோத்திரம் படித்தால் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கம் குறையும்.
3. நாக நாகினி ஜோடியை நீரில் விடுங்கள்: மௌனி அமாவாசையில் ஓடும் நீரில், அதாவது நதியில் வெள்ளியால் செய்யப்பட்ட நாக நாகினி ஜோடியை விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது கால சர்ப்ப தோஷத்தின் தீய விளைவுகளை நீக்கித் தரும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்வதால் விருப்பங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும்.
4. கால சர்ப்ப யந்திரம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்: மௌனி அமாவாசையில் வீட்டில் கால சர்ப்ப யந்திரம் பிரதிஷ்டை செய்து தினமும் அதை வழிபடுங்கள். தினமும் கால சர்ப்ப யந்திரத்தை வழிபடுவதால் படிப்படியாக இந்த தோஷத்தின் தாக்கம் குறைவதைக் காணலாம்.
5. கோயிலில் நாக சிலை பிரதிஷ்டை செய்யலாம்: உங்கள் அருகிலுள்ள எந்தக் கோயிலிலாவது சிவலிங்கத்தின் மீது நாக தேவதையின் சிலை இல்லையென்றால், அங்கு செம்பினால் செய்யப்பட்ட நாக சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள். மௌனி அமாவாசையில் செய்யப்படும் இந்த பரிகாரம் கால சர்ப்ப தோஷத்தின் தாக்கத்தைக் குறைத்து, உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும்.
மேற்கூறிய 5 பரிகாரங்களைச் செய்ய, கால சர்ப்ப தோஷம் நாளடைவில் விலகி நிறைவு பெறும்.