
இந்து மதத்தில் மௌனி அமாவாசைக்கு மகத்தான முக்கியத்துவம் உண்டு. மௌனி அமாவாசை, ஆன்மீக சுத்திகரிப்பு, மூதாதையர் நினைவு மற்றும் சுய பிரதிபலிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவதும், தேவைப்படுபவர்களுக்கு அன்னதானம் செய்வதும், முன்னோர்களுக்குச் சடங்குகள் செய்வதும் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
இந்தாண்டு, மௌனி அமாவாசை ஜனவரி 28-ம்தேதி இரவு 7:35 மணிக்கு தொடங்கி ஜனவரி 29-ம்தேதி மாலை 6:05 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாள் மகா கும்பத்தின் மூன்றாவது புனித நீராடலைக் குறிக்கிறது.
மௌனி அமாவாசை சடங்குகள்:
1. புனித நீராடுதல்
மௌனி அமாவாசை அன்று கங்கை போன்ற புனித நதிகளில் நீராடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இச்செயல் பாவங்களைக் கழுவி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, சூரிய உதயத்திற்கு முன் நீராடி, நாளின் தொடக்கத்தைக் குறிக்கும் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள்.
2. தொண்டு
மௌனி அமாவாசையின் ஒரு அங்கம் தர்மமும் தானமும். பின்தங்கியவர்களுக்கு உணவு, உடைகள் அல்லது பணம் தானம் செய்வது தெய்வீக ஆசீர்வாதங்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. பலர் தங்கள் தொண்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பசுக்கள் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்குகிறார்கள்.
3. சூரியக் கடவுளை வழிபடுதல்
இந்த நாளில், சூரிய கடவுளுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பிரசாதம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விடியற்காலையில் எழுந்து, குளித்து, உதய சூரியனுக்கு தண்ணீர் வழங்க தயாராகிறார்கள். அதற்கு சிவப்பு சந்தனம், குங்குமம் மற்றும் பூக்கள் கலந்த நீர் நிரப்பப்பட்ட செப்புப் பாத்திரம் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரை வழங்கும்போது 'ஓம் சூர்யாய நமஹ்' என்ற மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வதும், கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி, முன்னோர்களின் நினைவாக அரச மரத்தடியில் வைப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமாவாசை அன்று விரதம் இருந்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் மற்றம் ஏழு ஜென்ம பாங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
4. அமைதியை கடைபிடித்தல்
மௌனி அமாவாசையின் ஒரு தனித்துவமான அம்சம், மௌனத்தைக் கடைப்பிடிப்பது (மௌன் விரதம்) ஆகும். மற்ற சமயங்களில் போலன்றி, மௌனி அமாவாசை அன்று சந்திரனை வானத்தில் பார்க்க முடியாது என்பதால் வழிபடுவதில்லை. சந்திரன் இல்லாதது மன சமநிலையை சீர்குலைக்கும் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்க, மனதை அமைதிப்படுத்தவும், கவனத்தைத் தக்கவைக்கவும் மௌன விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மௌனத்தைக் கடைப்பிடிப்பதால் மனத் தெளிவும், ஆன்மிக வளர்ச்சியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். பல பக்தர்கள் உணவையும் தண்ணீரையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த நாள், புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கும், முக்கியமான பணிகளை மேற்கொள்வதற்கும் அதிர்ஷ்ட நாளாகக் கருதப்படுகிறது. பல இந்துக்கள் இந்த நாளில் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்,
அமாவாசை அன்று, மதுவைப் போலவே, இறைச்சி வாங்குவதும், ருசிப்பதும் எதிர்மறையான விளைவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் அசைவ உணவுகளை சாப்பிடுவது சனியால் ஏற்படும் துன்பங்களை அதிகரிக்கிறது.
கும்பமேளாவின் போது புனித கங்கையில் நீராடுவது இந்து மதத்தில் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மௌனி அமாவாசை அன்று, திரிவேணி கங்கையில் நீராடினால், கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட்டு, முக்தி அல்லது மோட்சம் பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்நாளில் முன்னோர்கள் மற்றும் மூதாதையர்களை போற்றி வழிபட்டால், சகல உலக இன்பங்களையும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவதோடு, பித்ரு தோஷம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.