அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'அஹோ' என்றால் சிங்கம். பிலம் என்றால் 'குகை'. இது 108 திவ்ய தேசங்களில் 97வது திவ்யதேசமாகும். நரசிம்மர் வெளியான தூண் 2 கிலோ மீட்டரில் உள்ளது. ஆதிசங்கரரை கபாலிகர்களிடம் இருந்து நரசிம்மர் காப்பாற்றிய தலம் இது. இக்கோவிலின் புராணப் பெயர் திருச்சிங்கவேள்குன்றம்.
தல புராணம்:
நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக இது கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி தந்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார்.
பிரகலாதனை காக்க, விஷ்ணு நரசிம்மர் வடிவம் எடுத்து இரண்யனை வதம் செய்த பிறகு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த இடம் தான் இந்த அகோபிலம் எனப்படுகிறது.
தற்போது அகோபிலம் அமைந்துள்ள பகுதி ஒரு காலத்தில் அசுர மன்னன் ஹிரண்யகசிபுவின் அரண்மனை இருந்த இடமாகும். இந்த அரண்மனையில் தான் ஸ்ரீ நரசிம்மர் ஒரு தூணில் இருந்து வெளிவந்து ஹிரண்யகசிபுவைக் கொன்றதாக கூறப்படுகிறது.
திருமாலின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க விரும்பிய கருடனுக்காக இங்கு ஒன்பது வடிவங்களில் நரசிம்மர் காட்சி கொடுத்ததாகவும், அவர்களை கருடன் பூஜை செய்து வழிபட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.
ராமன் சீதையை தேடி வரும்போது இந்த தூணிடம் வேண்டிக் கொண்டதாகவும், இங்கு வழிபாடு செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. மலையடிவாரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 'பார்கவ நரசிம்மர்' ராமபிரானால் வழிபடப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
நவ நரசிம்ம ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த 9 நரசிம்மர் கோவில்களையும் தரிசிக்க நவகிரகங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நவ நரசிம்மர்:
அகோபிலத்தில் ஒரே மலையில் 9 நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. அகோபில நரசிம்மர், சத்ரவட நரசிம்மர், யோகாநந்த நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், பார்கவ நரசிம்மர், வராக நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், பானக நரசிம்மர் மற்றும் மாலோல நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்தத் தலம் உள்ளூர் மக்களால் 'கருப்பு மலைக் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு:
அகோபிலம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கீழ் அகோபிலம் என்றும், மலை உச்சியில் அமைந்துள்ளது மேல் அகோபிலம் என்றும் அழைக்கப்படுகிறது. கீழ் அகோபிலத்தில் பிரகலாத வரதர் கோவிலும், மேல் அகோபிலத்தில் அகோர நரசிம்மரும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர்.
மலை அடிவாரக் கோவிலில் மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம். மலை அடிவாரக் கோவிலில் அமிர்தவல்லி மற்றும் செஞ்சுலட்சுமி தாயாரும், மலைக் கோவிலில் லட்சுமி தேவியும் உள்ளனர். நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்க்கவ தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் இது.
தல சிறப்பு:
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று ஒன்பது நரசிம்மர்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பிரம்மோற்சவம் என்னும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும்.
மலைக்கோவிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட 'உக்கிர ஸ்தம்பம்'(தூண்) உள்ளது.
நரசிம்மர் வெளிப்பட்ட தூண் 85 அடி உயரம் உள்ள ஒரே கல்லால் ஆன தூண். இன்றும் உள்ளது. இதை 'ஜெயஸ்தம்பம்' என்று அழைக்கின்றனர். பூமிக்கு அடியில் 30 அடி பள்ளம் தோண்டி இந்தத் தூணை நிலைநிறுத்தி உள்ளனர். இதன்முன்பு நின்று வேண்ட எண்ணியது நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
இப்பகுதியில் வாழ்ந்த செஞ்சு இன பழங்குடியினர் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக தோன்றியதாகவும், அவரை பெருமாள் திருமணம் செய்து இம்மலையிலேயே குடி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அகோபில மலையில் உள்ள பார்கவ நரசிம்மர் நவக்கிரகங்களில் சூரியனை குறிக்கிறது. யோகானந்த நரசிம்மர் சனி பகவானாகவும், சத்ரவட நரசிம்மர் கேது பகவானாகவும், அகோபில நரசிம்மர் குரு பகவானாகவும், வராக நரசிம்மர் ராகு பகவானாகவும், மாலோல நரசிம்மர் சுக்கிரன், ஜ்வாலா நரசிம்மர் செவ்வாய், பாவன நரசிம்மர் புதன், கராஞ்ச நரசிம்மர் சந்திரன் என 9 நரசிம்மர்களும் நவகிரகங்களை குறிக்கும் வகையில் உள்ளதால் இங்குள்ள 9 கோவில்களையும் தரிசித்தால் நவகிரகங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அடர்ந்த மலைப்பகுதியில் அகோபிலம் நவ நரசிம்மர்கள் கோவில் அமைந்துள்ளதால், மாலை 6 மணிக்கு மேல் இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.