
இலங்கையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை மகளிர் அணிகள் மோதிய முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கட் தொடர் நடைபெற்றது. தொடரில் கிடைத்த வெற்றி அடிப்படையில் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. நேற்று மே 11, காலை 10 மணிக்கு முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கேப்டனின் தேர்வு மிகவும் சரி என்று, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இலங்கையரின் பந்துகளை விளாச ஆரம்பித்தனர். அதிரடி ஆட்டக்காரரான பிரத்திகா ராவல் ஒருபுறம் நிதானமாக ஆட, மறுபுறம் ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக விளாச தொடங்கினார். 14.5 ஓவரில் இந்திய அணி 70 ரன்கள் எடுத்த போது பிரத்திகா ராவல் அவுட்டாகி வெளியேறினார். நிலைத்து ஆடிய ஸ்மிரிதி 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 11 வது சதமாகும்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்லின் தியோல் 47, ஹர்மன்பிரித் கவுர் 41, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 என்று சராசரியாக ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 342/7 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்த ஸ்கோர் மூலம் இலங்கையில், இந்திய மகளிர் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. மேலும் இது இந்திய அணியின் 4 வது அதிகபட்ச ஸ்கோராகும். இலங்கை அணி சார்பில் சுகந்திகா குமாரி, தேமி விஹங்கா, மால்கி மதரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 343 என்ற கடின இலக்கை அடைய போராட வேண்டி இருந்தது. இலங்கையின் துவக்க ஆட்டக்காரர் ஹாசினி பெரேரா, டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் சமரி அட்டப்பட்டுவும் (51) விஷ்மி குணரத்னேவும் (36) நல்ல துவக்கத்தை கொடுத்தனர். நிதானமாக ஆடிய இலங்கை வீராங்கனைகள் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தனர். விக்கட் இழப்புகள் மெதுவாக இருந்தாலும் ரன்களும் குறைவாக இருந்தது.
நிலாஷிகா சில்வா 48 ரன்களை அடிக்க மற்றவர்கள் பந்துகளை வீணாக்கி கொண்டிருந்தனர். 48.2 ஓவர் முடிவில் இலங்கை அணி தனது அத்தனை விக்கட்டுக்களையும் இழந்து 245 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியாவின் சினே ராணா 4 விக்கட்டுகளையும், அமன்ஜோத் கவுர் 3 விக்கட்டுகளையும் சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். இந்தியா இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றது.
இந்த போட்டியில் சதமடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாகிய ஸ்மிரிதி மந்தனாவிற்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இந்த தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசி 15 விக்கெட்டுகளை தகர்த்த சினே ராணா தொடர் நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முத்தரப்பு தொடரை வென்றதை அடுத்து இந்திய அணி ஐசிசி தர வரிசையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை தொடர்ந்து 3 வது இடத்தைப் பிடித்தது.