மற்றவர்களை திருப்திபடுத்த முயற்சித்தால் தோல்வி தான் மிஞ்சும் – மகாபாரதம் தரும் பாடம்!

மகாபாரதத்தில் ஒரு சிலர் மற்றவர்களை திருப்திபடுத்த முயற்சித்து எப்படி தங்களை இழந்தனர் என்பதை பார்ப்போம்.
Mahabharata Story
Mahabharata Story
Published on
Deepam strip
Deepam strip

நாம் மற்றவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளவும், சொல்பேச்சு கேட்கவும், அனுசரித்து செல்லவும் சிறுவயதில் இருந்து நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. நாம் நல்லவராக இருக்க வேண்டும் என்றால் பலரையும் அனுசரித்து அவர்களை திருப்திப்படுத்தினால் தான் அந்த நல்ல பெயர் கிடைக்கிறது. ஆனால், மற்றவர்களை திருப்திபடுத்த ஆரம்பித்தால் ஒருவர் தன்னுடைய சுயத்தையும் இழந்து, பல தியாகங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது. மகாபாரதத்தில் ஒரு சிலர் மற்றவர்களை திருப்திபடுத்த எப்படி தங்களை இழந்தனர் என்பதை பார்ப்போம்.

பிதாமகர் பீஷ்மர்:

பிதாமகர் பீஷ்மர் தியாகத்தின் மறு உருவமாக போற்றப்படுகிறார். அவர் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற இறுதிவரை பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதாக வாக்களித்தார். அதேபோல் தன் உயிர் உள்ளவரை அரசபதவி ஏற்காமல், அஸ்தினாபுர அரசனுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அஸ்தினாபுரம் சிம்மாசனத்திற்கு தகுதியற்ற அரசர்கள் இருந்தாலும், தகுதியுள்ள பீஷ்மர் தள்ளி நின்றதால் பல நூற்றாண்டு காலமாக குழப்பங்கள் நீடித்தது.

அஸ்தினாபுர அவையில் துருபத கன்னிகை துகிலுரிய படும்போது, அரச விசுவாசம் காரணமாக தர்மத்தின் பக்கம் நின்று தட்டி கேட்காமல் அமைதியாக பீஷ்மர் இருந்தார்.

இதையும் படியுங்கள்:
கர்மா யாரையும் விடாது! மகாபாரதம் சொல்லும் 6 கசப்பான உண்மைகள்!
Mahabharata Story

அவருடைய விசுவாசம் காரணமாக, அதர்மத்தின் பக்கம் நின்று பெரும் போர் நடைபெறுவதை தடுக்காமல் இருந்தார். பீஷ்மர் தன் தந்தையை திருப்திபடுத்தினார். அதனால், அவருடைய மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை இழந்தார். தன் தந்தையின் வம்சம் அழிவதையும் அவரால் தடுக்க முடியவில்லை. பீஷ்மர் அரியணை ஏற்றிருந்தால் மகாபாரதப் போருக்கு அவசியம் இருந்திருக்காது.

குந்தி தேவி:

குந்திதேவி தனக்கு கிடைத்த வரத்தினை பயன்படுத்தி கர்ணனை பெற்றெடுத்தாள். அந்த சூழலில் உலகிற்கு பயந்து அவள் அதை மறைத்தாலும், பின்னால் தன் கணவன் பாண்டுவிடம் தனக்கு கிடைத்த வரத்தினை பற்றி கூறிய போது, கர்ணனின் பிறப்பை பற்றியும் கூறி இருக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் கர்ணன் தன் மகன் என்று அறியும் போது, அதை அஸ்தினாபுர அவையில் வெளிப்படுத்தி இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் துரியோதனன் கர்ணனுக்காக ராஜ்யத்தை விட்டுக் கொடுத்து இருப்பான். குந்திதேவி, கிருஷ்ணர் மற்றும் கர்ணனின் பேச்சைக் கேட்டு, அவர்களை திருப்திப்படுத்த தன்மகன் என்று அறிவிக்காமல் இருந்ததால் போரில் கர்ணனை இழந்தாள்!

சூரிய புத்திரன் கர்ணன்:

நட்புக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த ஒரு மாமனிதன்.

நண்பன் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும், அவனை திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னையும் நண்பனையும் இழந்தவன். யார் என்ன கேட்டாலும் தர வேண்டும், அனைவரையும் திருப்திபடுத்த எண்ணி இறுதியில் தனக்கு கிடைத்த புண்ணியத்தையும் மொத்தமாக தர்மம் செய்தவன்.

கர்ணன் தன் நண்பனின் தீய செயல்களை எதிர்த்து, அவனை நல்வழிப்படுத்தி இருக்கலாம். ஆனால், துரியோதனன் நினைப்பதை செய்து காட்ட வேண்டும் என்ற எண்ணமே கர்ணனுக்கு இருந்தது. கர்ணன் அஸ்திரம் பெற அர்ஜுனனை போல தவமிருந்திருக்கலாம், ஆனால், துரியோதனன் பேச்சைக் கேட்டு பொய்யுரைத்து பரசுராமரிடம் பிரம்மாஸ்திரம் கற்றான். அதனால், முக்கிய தருணத்தில் அஸ்திரம் அவனுக்கு மறந்து போனது.

தர்மன் யுதிஷ்டிரன்:

தர்மத்தின் வடிவமான யுதிஷ்டிரன் முடியாது என்று சொல்ல மாட்டான். அனைவரின் பார்வையிலும் நீதிமானாகத் திகழ வேண்டும் என்ற அவரது ஆசை, அவரை சூழ்ச்சிகளுக்கு எளிதில் ஆளாகும்படி செய்தது. சூழ்ச்சி என்று தெரிந்தும் துரியோதனன் சூது விளையாட கூப்பிட்ட போது மறுக்காமல் ஆடினான். முதல் தோல்வி அடையும் போதே விட்டிருக்கலாம், எதிரியின் பேச்சை மறுக்காமல் விளையாடி மொத்தமும் இழந்தான்.

தன் மனைவிக்கும் அவமானத்தை தேடிக் கொடுத்தான். தோல்வி தொடங்கும் போதே யுதிஷ்டிரன் விளையாட்டில் இருந்து விலகி இருக்கலாம். தீமை வரும் என்று தெரிந்தே பலியாக்கி கொண்டான்.

பாடம் கற்றுக் கொடுத்த கிருஷ்ணர்:

பிறருக்காக தங்களை துன்பத்தில் தள்ளிக் கொண்ட பீஷ்மர் , குந்திதேவி , கர்ணன் , யுதிஷ்டிரன் போன்றவர்கள் கிருஷ்ணரை பார்த்து கற்றுக் கொண்டிருக்கலாம். ஶ்ரீ கிருஷ்ணர் திரவுபதி துகிலுரியும் போது சேலை வழங்கி தடுத்தார். பாண்டவர்களுக்காக அமாவாசை நாளை மாற்றினார். போரில் ஆயுதமேந்த மாட்டேன் என்று கூறி, ஆயுதம் ஏந்தாமல் சங்கொலி எழுப்பி அதன் மூலம் ஆயிரக்கணக்கனோரை வதம் செய்தார்.

இதையும் படியுங்கள்:
கிருஷ்ணருக்கு கர்ணன் மேல் கோபமா அல்லது பாசமா? - மகாபாரதம் சொல்லும் மறைபொருள்!
Mahabharata Story

தேரோட்டியான அவர், அர்ஜூனனை அழிய விடாமல் காப்பாற்றி, எதிரிகளை அழிக்க வைத்தார். போரின் மரபுகளை மீறி, தர்மத்தை காப்பாற்ற தன் வழியில் கிருஷ்ணர் சென்றார். பாண்டவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்தினரின் அழிவை தடுக்கவில்லை. பாண்டவர்கள் தன் பக்கம் இருந்தாலும் யாரையும் அவர் திருப்திபடுத்த முயலவில்லை. போரின் வலியையும் இழப்பையும் யுதிஷ்டிரன் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். யுதிஷ்டிரன் மட்டுமல்ல பீஷ்மர், கர்ணன், குந்தி தேவி ஆகியோரும் இதை இறுதியில் புரிந்துக் கொண்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com