

மகாபாரதம் ஒரு புராணம் மற்றும் வரலாற்று காவியம் மட்டுமல்ல , இது மனிதர்களுக்கு நீதியை கற்றுத்தரக்கூடிய ஒரு நீதி நூலாகவும் விளங்குகிறது. மகாபாரதத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஏதேனும் ஒரு வாழ்க்கை பாடத்தை உங்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. முக்கியமாக மகாபாரதம் 6 உண்மைகளை பாடமாக நமக்கு தருகிறது.
கர்மா சாதாரணமானது அல்ல:
கர்மா என்பது நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை உங்களுக்கு தருவது. கர்மா மிகவும் பொறுமையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற பலனை உங்களுக்கு ஒருநாள் கொடுக்காமல் விடாது. அது நல்ல பலனோ, அல்லது கெட்ட பலனோ! சத்யவதி "கங்கை மைந்தனுக்கு கிடைக்கவேண்டிய அரசாட்சியை, தன் எதிர்கால வாரிசுகளுக்காக முறைகேடான வகையில் பறித்தது மட்டுமின்றி , அவருக்கு வம்சம் இல்லாத வகையிலும் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்" என்ற உறுதியையும் வாங்கிக்கொண்டாள்.
வரம் கிடைத்தும் சத்தியவதியின் வம்சத்தை சேர்ந்த எவரும் மகிழ்ச்சியாக ஆட்சி செய்ததில்லை. எப்போதும் அஸ்தினாபுரத்தின் சிம்மாசனம் நிரந்தரமின்றி இருந்தது. அந்த குடும்பத்தின் வாரிசுகள் பெரும்பாலும் துர்மரணத்தை அடைந்தனர். கௌரவர்கள் அனைவரும் அழிந்த பின்னர் சத்தியவதியின் நேரடி வம்சம் முடிவுற்றது. பாண்டவர்களை சத்தியவதியின் நேரடி வாரிசுகளாக கருத முடியாது, அவர்கள் தேவ மைந்தர்கள்.
தர்மம் வென்றே தீரும்:
மகாபாரதத்தின் சிறந்த போதனைகளில் ஒன்று தர்மம் என்றும் அழியாதது. பாண்டவர்கள் தர்மத்தினை கடைபிடித்ததால் இறுதியில் வெற்றியை பெற்றனர். போரின்போது தர்மத்திற்கு எதிரான ஒரு சில செயல்களை, பாண்டவர்கள் செய்ததன் பலனை அவர்களும் அனுபவித்தார்கள். திருதிராஷ்டிரன் மனுநீதிக்கு எதிராக, தன் சகோதரனுக்கு கிடைக்க வேண்டிய அரசாட்சியை பறித்தான். அவனது வம்சத்தினர் பாண்டவர்களின் நாட்டை சூது விளையாட்டின் மூலம் அபகரித்துக்கொண்டனர். இறுதியில் தர்மமே வென்றது! பாண்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய முழு சொத்துகளும் கிடைத்தன.
பெண்ணை இழிவுபடுத்துவது பேராபத்தை தரும்:
பாண்டவர்கள் தங்களின் குழந்தை பருவத்தை வனத்திலேயே கழித்தார்கள். அவர்களுக்கு நாட்டை இழப்பதும், காட்டுக்கு செல்வதும் எந்த வருத்தத்தையும் தராது. அதுபோன்ற சூழல்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பாஞ்சாலியை இழிவு செய்ததை பாண்டவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஞ்சாலிக்கு ஏற்படுத்திய அவமானத்திற்கு, அவள் பழிவாங்கும் விதமாக போரினை துண்டினாள். அதன் விளைவாக கௌரவர்கள் முற்றிலும் அழிந்தார்கள்.
அமைதியாக இருப்பதும் அநீதிக்கு துணை போவதாக அர்த்தம்தான்:
அஸ்தினாபுரத்தின் அவையில் தர்மம் அறிந்த கர்ணன் , பிதாமகர் பீஷ்மர், அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் பாஞ்சாலியை துகிலுரியும்போது தடுக்காமல் இருந்தனர். ஒரு இடத்தில் அநீதி நடக்கும்பொழுது, அதை தடுக்காமல் அமைதியாக இருப்பதும், அந்த அநீதிக்கு துணைபோன குற்றத்தை ஏற்றுக்கொள்வதாகதான் அர்த்தம். எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்கள் ஆயினும், மகாபாரதப் போரில் பீஷ்மர், கர்ணன், குரு துரோணர் ஆகியோர் அழிய காரணம் அநீதியை கண்டு அமைதியாக இருந்ததுதான்.
போரில் இரு பக்கமும் அதிக இழப்புகள் ஏற்படும்:
போர் ஒன்று நடைபெறும்போது அதில் ஒருவருக்கு வெற்றியும் மற்றொருவருக்கு தோல்வியும் கிடைக்கும். ஆனால், இழப்பு என்பது இருபுறமும் கட்டாயம் இருக்கும். போரில் இழப்புகளுக்கு அஞ்ச முடியாது, பெரிய பொருட் சேதமும் உயிர்சேதமும் ஏற்படும். மகாபாரதப் போரில் கௌரவர்கள் கூட்டம் மொத்தமாக அழிந்து போனாலும், பாண்டவர்கள் பக்கமும் பெரிய அளவில் சேதம் இருந்தது. பாண்டவர்கள் பக்கம் அவர்களின் வாரிசுகளான அபிமன்யூ, கடோத்கஜன், உப பாண்டவர்கள் என்றழைக்கப்பட்ட பாஞ்சாலியின் மைந்தர்கள் உள்பட பலரும் அழிந்தார்கள்.
வெற்றி எப்போதும் மகிழ்ச்சியை தருவதில்லை:
பாரதப் போரின் முடிவில் தர்மம் வென்றாலும், பாண்டவர்கள் தங்கள் இழப்புகளை நினைத்து பெரிதும் வருந்தினர். தங்களது உண்மையான மூத்த சகோதரன் கர்ணனின் இறப்பை நினைத்து அதிக கவலைகொண்டனர். அவர்கள் மிகப்பெரிய போரில் தங்களுக்கு உரிமையுள்ள நாட்டை மீட்டாலும் அரசாட்சியில் ஆர்வமின்றி இருந்தனர். சில வருடங்களிலேயே ஆட்சியை அவர்களின் பெயரன் பரீட்சித்து மகாராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு, அனைவரும் தவம் இருக்க கானகம் நோக்கி சென்றனர்.