

ஆடி மாத சிறப்புகள்:
தமிழ் நாட்காட்டியின்படி நான்காவது மாதமான ஆடி மாதம் (பொதுவாக ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை) ஆன்மீகத்தில் சக்தி வழிபாட்டிற்கும், இயற்கைக்கும், விவசாயத்திற்கும் மிகவும் உகந்த மாதமாக கருதப் படுகிறது. இது தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமாகும்.
ஆடி மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். அம்மன் வழிபாடு, நீர் நிலைகளை வணங்குதல் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற ஆன்மீக நிகழ்வுகள் இம்மாதத்தில் விசேஷமாக நடைபெறுகின்றன. அதாவது இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு, அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல், வேண்டுதல்களை நிறைவேற்றுதல், முன்னோர்களுக்கான திதி மற்றும் ஆடிப்பெருக்கு போன்ற முக்கிய நிகழ்வுகள் கொண்டாடப் படுகின்றன.
அதிலும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக ஆடி மாதம் அம்பிகையின் வேண்டிய வரத்தை பெற்ற மாதம் என்பதால் இந்த மாதத்தில் வேண்டிக் கொண்டால் நம்முடைய விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், விவசாய ரீதியாகவும் தமிழ் கலாச்சாரத்தில் ஆடி மாதம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தின் முக்கிய சிறப்புகள் மற்றும் நிகழ்வுகள்:
அம்மன் வழிபாடு: ஆடி மாதம் முழுவதுமே அம்மன் மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுவதால் அந்த நாட்களில் அம்மன் கோவில்களில் சுமங்கலிகள் மற்றும் கன்னிப் பெண்கள் வேண்டுதல்கள் நிறைவேய வழிபாடு நடத்துகின்றனர். அம்மனுக்குரிய மிகச்சிறப்பான மாதம் என்பதால், மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், குறிப்பாக மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல், தீமிதி திருவிழா போன்ற நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
ஆடி செவ்வாய் : ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடிச் செவய்வாயில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள், குழந்தை வரம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க, திருமணம் வரம் கிடைக்க ஆடி செவ்வாயின் பெண்கள் விரதம் இருப்பார்கள்.
ஆடி வெள்ளி : ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவரின் ஆயுள் நீடிக்கவும், தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் விரதம் இருக்கிறார்கள். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
ஆடிக்கிருத்திகை : கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உரியது. ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருக்க துவங்கி ஆறு மாதங்கள் கிருத்திகை விரதம் இருந்து தை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முடிப்பது சிறப்பானதாகும். ஆடி கிருத்திகை அன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி அமாவாசை: ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ஆறு மாதம் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு(தவறியவர்கள்) ஆடி மாத அமாவாசை அன்று முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்க மிகவும் உகந்த நாளாகும். இந்நாளில் கடற்கரை அல்லது நதிக்கரைகளில் மறைந்த முன்னோர்களுக்கு மக்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஆடிப்பெருக்கு (ஆடி 18): ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கொண்டாடும் விதமாக இந்நாளில், இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி போன்ற நதிக்கரைகளில் புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி பூஜை செய்து, புதிய ஆடை மற்றும் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள்.
ஆடிப்பூரம்: ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆண்டாள் அவதரித்ததும் இதே நாளில் தான். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்ததும் இந்த நாளில் தான்.
பார்வதி தேவி அவதரித்த நாளாகக் கருதப்படும் இந்த நன்னாளில், அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளையல்கள் சாற்றி வழிபடுவது வழக்கம். பின்னர் இந்த வளையல்கள் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
ஆடிப்பட்டம் தேடி விதை: விவசாயத்திற்கு உகந்த மாதம் என்பதால் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழி உருவானது. குறிப்பாக இம்மாதத்தில் வீசும் பலத்த காற்று விவசாயத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பழமொழிக்கு ஏற்ப, இந்த மாதத்தில் பெய்யும் மழையை நம்பி விதை விதைக்கும் வழக்கம் தமிழர்களிடம் உள்ளது. அதாவது மழைக்காலத்தின் ஆரம்ப காலம் என்பதால் ஆடி மாதத்தில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல் போன்ற முக்கிய ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.
ஆடி தபசு : ஆடி அமாவாசையை போல் ஆடி பெளர்ணமியும் சிறப்பான நாளாகும். ஆடி தபசு என்பது சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், பார்வதி தேவி கோமதி அம்மனாக உருவெடுத்து சிவபெருமானிடம் தவம் புரிந்து ‘சங்கரநாராயணராக’ காட்சி பெற்றதைக் கொண்டாடும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து சமயத் திருவிழா ஆகும்.
இந்த நாளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படும். அம்பிகையின் கோரிக்கையை ஏற்றி, சிவனும் - விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி அளித்ததும் இந்த நாளில் தான். ஊசி முனையில் தவம் இருந்த அம்பிகைக்கு தனது உடலில் சரி பாதியை கொடுத்து சிவ-சக்தி ஐக்கியமானதும் இந்த நாளில்தான். சங்கரன்கோவிலில் நடைபெறும் ஆடித்தபசு விழாவின்போது பக்தர்கள் கோவிலின் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றி வருவது வழக்கம்; இது 'ஆடிச்சுற்று' என்று அழைக்கப்படுகிறது.
சுப காரியங்கள்: பாரம்பரியமாக இந்த மாதத்தில் திருமணம் போன்ற புதிய சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கப் படுகின்றன. அதாவது தட்சிணாயன காலம் தொடங்குவதால், திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் இம்மாதத்தில் பொதுவாகத் தவிர்க்கப்பட்டு, ஆன்மிக வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது.