
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் பதினோராம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மகாராஜாவால் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் சங்கரன்கோவில் பகுதியை உக்கிரபாண்டிய மகாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் சைவ பக்தர். அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பது அவரது வழக்கம். அவர் படை வீரர்கள் புடைசூழ யானையில் பயணித்து மதுரையை அடைவாராம். மீனாட்சி, சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு அதே வழியில் அவர் திரும்புவாராம்.
ஒரு சமயம் அவர் மதுரைக்குச் செல்லும்போது இடையில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தில் அவரது பட்டத்து யானை தனது தந்தத்தால் மண்ணைக் குத்தி கீழே விழுந்தது. இதனால் மன்னர் செய்வது அறியாது திகைத்தார். அப்போது புன்னை வன காவல்காரரான மணிகிரிவன் என்பவர் அவர் முன் தோன்றி, ‘அரசே இங்கே புற்றொன்றுடைய புன்னை வனம் உள்ளது’ என்றார். இதையடுத்து அந்த இடத்தை தோண்டும்போது பாம்புகள் சுற்றிக் கிடக்க, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதனால் வியப்பின் எல்லைக்கே சென்ற மன்னர் அரண்மனைக்கு திரும்பி விட்டார்.
அன்றிரவு இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ‘நீ என்னை தரிசிப்பதற்காக மதுரை செல்ல வேண்டாம். இங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபடு’ என்றாராம். இதனால் உக்கிரபாண்டிய மகாராஜா புன்னை வனத்தில் உள்ள காடுகளைத் திருத்தி திருமதில்களும் மண்டபங்களும் கோபுரங்களும் சிறந்து விளங்க சிவாலயம் ஒன்றைக் கட்டுவித்து இறைவன் அருள் பெற்றான் என்பது இக்கோயிலின் தல வரலாறு.
படைப்பின் தத்துவம் குறித்தும், படைத்த பரம்பொருள் குறித்தும் சாதாரண சாமானியர்களுக்கு பல சந்தேகங்கள் எழுவது உண்டு. ஆனால், பல்லுயிரும் படைத்த பராசக்திக்கு சந்தேகம் வருமா? வந்தது. ‘உலகில் பெரியவர் தனக்கு இடப்பாகம் அளித்த உமையொருபாகனா அல்லது பாசமிகு அண்ணன் திருமாலா’ இதுதான். பார்வதி தேவிக்கு உதித்த சந்தேகத்தைத் தீர்க்க ஈசனையே நாடினாள் அன்னை. உமையவளின் சந்தேகத்தை மட்டுமல்ல, உலக உயிர்களுக்கும் ஒரு தத்துவத்தை விளக்க திருவுளம் கொண்டார் சிவபெருமான்.
அவர் பார்வதி தேவியிடம், ‘அகத்திய முனிவர் இருக்கும் பொதிகை மலை பக்கத்தில் புன்னை விருட்ச வடிவமாக அநேகர் தவம் செய்தனர். அங்கே சென்று நீயும் தவம் செய்வாயானால் உனது சந்தேகம் தீரும்’ என்றார். அதன்படி அம்மையும் தற்போது சங்கரன்கோவில் அமைந்துள்ள புன்னைவனப் பகுதிக்கு வந்து தவக்கோலத்தில் எழுந்தருளினாள்.
காலங்கள் உருண்டோட, ஒரு ஆடி மாத உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சிவன் பாதி விஷ்ணு பாதியாக திருவுருக்கொண்டு சங்கரநாராயணராகக் காட்சி தந்தார். சிவன் வேறு, திருமால் வேறு அல்ல, இறைவன் ஒருவருக்குள் ஒருவர்தான் என்பதை உணர்த்தும் தத்துவக் கோலத்தைக் கண்டு தனது சந்தேகம் தெளிந்தாள் தேவி. இப்படி அன்னை கண்ட அரிய திருக்காட்சியை நாமெல்லாம் கண்டு தரிசிக்கும் நன்னாள்தான் வருடம் தோறும் கொண்டாடப்படும் ஆடித்தவசு திருநாள். இந்த நாளில் சங்கரன்கோவில் வந்திருந்து சங்கரநாராயணரையும் கோமதியம்மனையும் வழிபடுபவருக்கு எந்நாளும் துன்பமில்லை.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் அருள்பாலிக்கும் கோமதி அம்பாள் கேட்டதை வழங்கும் வள்ளலாகும். கோமதி அம்பாள் சன்னிதியில் கோமதி அம்பாளுக்கு நேர் எதிரே அற்புதங்கள் நிகழ்த்தும் ஸ்ரீ சக்கர குழி இருக்கிறது. இந்த திருக்குழியில் அமர்ந்து எதை நினைத்து தியானம் செய்கிறோமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாரூர் ஆதீனம் பத்தாவது குருமகா சன்னிதானம் வேலப்ப தேசிகரால் அருளிச்செய்யப்பட்ட செப்பு தகடுகள் இக்குழியில் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர குழியில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது வேலப்ப தேசிகரின் அருள்வாக்கு. இதனால் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீ சக்கர குழியில் அமர்ந்து தியானம் செய்யாமல் செல்வதில்லை.
சங்கரன்கோவில் தனிச் சிறப்புக்கு ஒரு காரணம் இங்கிருக்கும் நாகராஜா கோயில். இந்தக் கோயிலில் பாம்பு புற்று ஒன்று காணப்படுகிறது. அதைச் சுற்றி கோயில் எழுப்பி இருக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகராஜா கோயிலுக்கு பழம், பால் ஆகியவை படைக்கிறார்கள். அதேபோல், இந்த புற்றுமண் மிகவும் விசேஷமானது. இது பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். எனவேதான், இந்தப் புற்றிலிருந்து மண்ணை எடுத்து அருகில் உள்ள தொட்டியில் போட்டு இருக்கிறார்கள். அம்பாள் சன்னிதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிடுகிறார்கள், நெற்றிலும் பொட்டாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தப் புற்று மண் பிரசாதம் பிணிகளுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் பக்தர்கள் மனங்களில் ஆவுடைத்தாயாக கருதப்படுகிறார்கள். அம்பாள் சன்னிதியை சுற்றி உள்ள கிரி வீதியை நூற்றியெட்டு முறை சுற்றினால் நினைத்தது நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவும் ஆடி தவசிற்கு முன்பாகவே அதிகமாக சுற்றி விடுவார்கள். சங்கரன்கோவிலில் உள்ள சங்கரலிங்க சுவாமி சன்னிதியை சுற்றி வந்தால் நம்மை சூழ்ந்த பிணிகள் விலகிப்போகும்.
நாக சுனையில் பாம்பு, தேள், பூரான், கை கால், உப்பு ஆகியவற்றை செலுத்தி விட்டு பக்தியோடு அம்மனை வணங்கினால் விஷ ஜந்துகளில் இருந்தும் நோய்களிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவற்றிற்கு இல்லாத சிறப்பு இந்த ஆவுடை தாய்க்கு உண்டு. தாய் போல் காக்கும் கோமதி தாயின் ஆடி தவசு காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.
சைவ சமய ஆகமப்படி திருநீறும், வைணவ சமய ஆகமப்படி தீர்த்தமும் வழங்கப்படும் ஒரே திருத்தலம் இந்த சங்கரநாராயண சுவாமி கோயில்தான். இக்கோயில் அர்த்த ஜாம பூஜை முடிந்த பின்பு தரப்படும் பிரசாத பாலை தொடர்ந்து முப்பது நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிட்டி விடுகிறது.
சங்கரன்கோவிலில் மூன்று சன்னிதிகள் இருப்பது சிறப்பு. சங்கரலிங்க சுவாமிக்கும், சங்கரநாராயண சுவாமிக்கும், கோமதி அம்பாளுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. அதுபோல், சூரிய பகவானுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. சூரியன் சிவபெருமானை வழிபட்டு இடம் பெற்ற தலம் என்பது வரலாறு. சங்கரன்கோவிலில் அருளும் விநாயகர் ஒரு கையில் பாம்பை ஏந்தி இருக்கிறார். எனவே, இவர் சர்ப்ப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இங்கே அருள்பாலிக்கும் சங்கரநாராயண சுவாமி திருச்சிலையில் ஒரு பாதி சிவனும் மறு பாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது.
சிவன் தலையில் கங்கையை முடிந்திருக்கிறார். ரத்தின கிரீடம் சூடி இருக்கிறார். ஒரு கையில் மழுவும் மறு கையில் அபய ஹஸ்தமும் ஏந்தி இருக்கிறார். கழுத்தில் உத்திராட்ச மாலை போட்டிருக்கிறார் இடுப்பில் புலி தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள். மறு பாதி தலையில் கிரீடம் காதில் மசிய குண்டலம், கையில் சங்கு சிம்ம கர்ணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் மகாவிஷ்ணுவின் வடிவமாகும். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி அற்புதமாக நமக்குக் காட்சி தருகிறார்.
ஆடி தவசு விசேஷம் நாளை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தெற்கு ரத வீதியில் நடைபெறுகிறது. சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்குக் காட்சி அளிக்கும் வைபவம் இரவு 11.30 மணி அளவில் யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்குக் காட்சியளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.
ஆடி தவசு திருநாளில் கோமதி அம்மனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் கோமதி தாயின் அருளைப் பெறுவதோடு, சங்கரலிங்க சுவாமியையும் சங்கரநாராயண சுவாமியையும் வழிபட்டு வாழ்வில் பல வளங்களையும் நலங்களையும் பெறலாம்.