ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக இருந்தாலும் அந்த மாதத்தில் ஒரு நாளை தன் மகனுக்காக அம்பாள் ஒதுக்கி வைத்துள்ளார்.
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்து கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் தான் தமிழ் கடவுள் முருகப்பெருமான்.
அவரை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாக சிவபெருமான் கார்த்திகை நட்சத்திரம் அன்று அவர்களைப் போற்றி அன்றைய தினத்தை முருகப்பெருமானின் வழிபாட்டிற்கு உகந்த தினமாக வழங்கினார்.
இந்த கார்த்திகை நட்சத்திரம் தான் கிருத்திகை என அழைக்கப்படுகிறது. கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாக திகழ்ந்து ஒளி வீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயின் மேலாக போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை வழிபட்டால் முருகன் அருள் பன்மடங்கு கிட்டும் என்பது நம்பிக்கை.
சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருள் கிடைத்து நீடித்த ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் பெறலாம். தீராத நோய் நொடிகள் ஆடி கிருத்திகை அன்று முருகப்பெருமானை வழிபட்டு வேண்டினால் தீரும் என்பது நம்பிக்கை .
மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் வருடத்தில் மூன்று கிருத்திகை மிக சிறப்பாக கூறப்படுகிறது .
1) ஆடிக்கிருத்திகை.
2) தை மாதம் வரும் கிருத்திகை.
3) கார்த்திகை மாதம் வரும்பெரிய கார்த்திகை.
இந்த ஆடி மாதம் வரும் கிருத்திகையே முருகப்பெருமானுக்குரிய சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்படுகிறது.
குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.
வழிபாடு
ஆடிக்கிருத்திகை அன்று காலையில் குளித்து சர்க் கோணம் கோலமிட்டு அதில் சரவணபவ என எழுதி விளக்கேற்றி பால் அல்லது பழம் முடிந்ததை படைத்து முருகனின் மந்திரங்களான சஷ்டி கவசம் கந்தர் அலங்காரம் அந்த அனுபூதி மேல்மாறல் திருப்புகழ் இவற்றில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்து ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானை வழிபாடு செய்து வணங்க வேண்டும்.
கிருத்திகை விரதம் இருந்து கடைப்பிடித்து முருகனின் அருளை பெறலாம்.
பலன்கள்
கிருத்திகை விரதம் கடைபிடித்து வழிபாடு செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு குறையும். கர்ம வினை விலகும். திருமண தடை விலகும். சொந்த வீடு அமையும்.
செவ்வாய் திசை நடப்பவர்கள் இந்த கார்த்திகை விரதத்தை மேற்கொண்டு முருகனிடம் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும் முருகனால் அது நிறைவேற்றப்படும்.
என்னதான் முருகப்பெருமான் பிறந்தது விசாக நட்சத்திரமாக இருந்தாலும் கிருத்திகை நட்சத்திரம் அதிலும் ஆடித்திருத்திகை வெகு விமர்சியாக முருகப்பெருமானின் பிறந்தநாளுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை தவறவிடாமல் கோவிலுக்கு சென்று கிருத்திகை விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானின் அருளையும் ஆசியும் பெறலாம்.