

விஸ்வாமித்திரர் தனது ஆசிரமத்தில் ஏதோ எழுதி கொண்டு இருந்தார். அவர் தான் ராஜா. சத்திரியர். அங்கு வசிஷ்டர் வந்தார். விசுவாமித்திரர் கவனிக்கவில்லை. ஆனால் வசிஷ்டர் கோபமாக “சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்க மாட்டீர்களா… ?” எனக் கோபமாக கேட்டார்.
வசிஷ்டரை கண்ட விசுவாமித்திரர் எழுந்து நின்று “வணக்கம்” சொன்னார்.
“ நான் எழுதுவதில் கவனம் செலுத்தி வந்தேன். அதனால் தங்களை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்… !”
ஆனால் வசிஷ்டர் அவரோடு சண்டை போட வந்தது போல் பேசினார்.
“ ஆமாம்… என்ன எழுதுகிறீர்கள்… ? ”
“ வேதாந்தம்… உபநிஷத்… ! ”
“ நீங்கள் எப்படி எழுதலாம்..? ”
“ எனக்கு ஒன்றும் புரியவில்லை… ! ”
“ நீங்கள் சத்திரியன் தானே..? ”
“ ஆமாம்.! ”
“ உங்கள் பணி ராஜ்யத்தை ஆளுவது தான். நீங்கள் வேதம் சம்பந்தமாக எழுதுவது மிக மிக தவறு. பிராமணன் மட்டுமே வேதம் அல்லது வேதாந்தம் அதாவது உபநிஷத் எழுதலாம்… ! தெரியாதா… ? ”
“ நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. யார் வேண்டுமானாலும் எழுதலாம். சாதி முக்கியம் அல்ல… ! ”
“ நீ சத்ரியன் தானே… ? ”
“ ஆமாம். அதனால் நான் எழுத கூடாது என்று எதில் சொல்லப்பட்டு இருக்கிறது… ? ”
“ இது எதிலும் இல்லை. காலம் காலமாக நடைமுறையில் உள்ளது… ! ”
“ அது தவறு… நீங்கள் என்னை ஒருமையில் பேசுவது அக்கிரமம். நான் ராஜா. சத்திரியன். மதித்து பேசுங்கள்… ! ”
“ என்ன நீ ரொம்ப திமிறாக பேசுகிறாய்… ? ”
“ மீண்டும் ஒருமையில் பேசுவது தவறு… அதுவும் உங்களை போன்ற மிகச் சிறந்த ஞானிகள் பிறரை மதித்து வாழ வேண்டும். இல்லையா… ?”.
“ அது இருக்கட்டும்….உன்னால் எல்லோருக்கும் பொருந்துகிற ஒரு மந்திரம் எழுத முடியுமா? தினமும் மக்கள் காலை, மதியம் மற்றும் அந்திமாலையில் சொல்ல ஒரு தியான மந்திரம் எழுத முடியுமா? ”
“ எதற்காக… ? ”
“ நீ உன்னை ரிஷி என்று சொல்லி கொள்கிறாய்… ! நீ உண்மையில் ரிஷியாக இருந்தால் தியான மந்திரம் எழுது பார்க்கலாம்… !”
“ நீங்கள் வம்புக்கு வருகிறீர்கள்…! ”
“ இருந்து விட்டு போகட்டும்..! ”
விஸ்வாமித்திரருக்கு மகா கோபம் வந்தது. வசிஷ்டர் மரியாதை குறைவாக பேசுகிறார். மேலும் ஒரு தியான ஸ்லோகத்தை எழுத நிர்பந்தம் செய்கிறார்.
“ வசிஷ்டரே… நான் எழுத தயார்… ! ”
“ ம்ம்… நடக்கட்டும்… ! ”
“ ஒரு நாழிகை காத்து இருங்கள்… எழுதி விடுகிறேன்… ! ”
“ ம்ம்… சரி… ! ”
விஸ்வாமித்திரர் தனது கண்களை மூடினார். ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். அவர் மனதில், நினைவில் எல்லோருக்குமான தியான ஸ்லோகத்தில் இருந்தது.
விஸ்வாமித்திரர் முதலில் வசிஷ்டர் மீது இருந்த கோபத்தை மனதிலிருந்து வெளியேற்றினார். மனதில் கடவுளை மட்டுமே நினைத்தார். அவர் கண் முன்னே சூரியன் தோன்றினார். அவர் கண்களை மூடிக்கொண்டு தான் இருந்தார்.
ஒரு நாழிகை ஆகி விட்டது.
விஸ்வாமித்திரர் தனது வாயால் “ ஓம் பூர் புவ: ” எனத் தொடங்கும் மந்திரம் சொன்னார். அந்த மந்திரத்தில் எந்த கடவுளின் பெயரும் இல்லை. மாறாக பேரோளி (ஞாயிறு) இடம் வேண்டினார். "எப்படி உலகில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை தூண்டி விடுகிறீர்களோ அதேபோல் என் சிந்தனையிலும் நேர்மறை எண்ணங்களை தூண்டி விடுங்கள்" என்று சூரியனை பார்த்து (மனக்கண்ணில்) தியானம் செய்து…
மந்திரத்தை எழுதி வசிஷ்டர் இடம் கொடுத்தார்.
அது தான் காயத்ரி மந்திரம்.
வசிஷ்டர்… படித்து விட்டு…
“பிரமாதம் விஸ்வாமித்திரரே … ! நான் தங்களிடம் இருந்து இந்த மந்திரத்தை எழுதி வாங்கவே உங்களுக்கு அவமரியாதை மற்றும் கோபத்தை காட்டினேன்…
பலே விஸ்வாமித்திரரே… நீவீர் வாழ்க வாழ்கவே..
நீங்கள் ரிஷி அல்ல. நீங்கள் ராஜரிஷி… பிரம்மரிஷி!”