

யார் சிறந்த நண்பன்...? நமது ஆபத்துக் காலங்களில் நம்முடன் இருந்து நமக்கு உதவி செய்பவனே சிறந்த நண்பன். அந்த நண்பனே நமக்குச் சிறந்த தோழன்.
எல்லோருக்கும் நல்ல நண்பன், தோழன் அமைவது நம் கையில் இல்லை. எல்லாம் சந்தர்ப்பச் சூழ்நிலையில் அமைகிறது.
நல்ல நண்பர்கள் கிடைத்தால் வாழ்வில் அதை விடப் பெரிது இல்லை.
நண்பனே சிறந்த தோழன்! தோழனே சிறந்த நண்பன்!!
இப்படிப்பட்ட நட்பு எல்லோருக்கும் அமையாது.
நாம் சில நண்பர்களைப் பற்றிப் பேசுவோம்:
வெங்கட் கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். அவருக்குச் சேதுராமன் மற்றும் கண்ணன் நெருங்கிய நண்பர்கள்; உண்மையான நட்பு. சேர்ந்தே சாப்பிடுவார்கள்; சேர்ந்தே டீ, காபி குடிப்பார்கள்.
சேதுராமன் ஊர் பழனி. கண்ணன் சேலம். வெங்கட் ஊட்டி.
வெங்கட் யூனியனில் மிகவும் ஆக்டிவாக வேலை செய்தார். அது தவிர, 'மக்கள் கலாச்சாரக் கழகம்' என்ற அமைப்பில் சேவை செய்து வந்தார். 'ம.க.க.'வைப் பொறுத்தவரை, கலை, இலக்கியம் எல்லாம் மக்களுக்கே என்று முழங்கினார்கள். வளர்ந்து வந்த அமைப்பு. 'மன ஓசை' என்று ஒரு பத்திரிகை வெளியிட்டது; நல்ல வரவேற்பு. வெங்கட்டின் தம்பி நாராயணன் அதில் சிறுகதைகள் எழுதி வந்தார்.
'ம.க.க.' வெங்கட்டை முழுநேரப் புரட்சியாளராகச் சேரச் சொன்னது. இங்கு ஒரு விஷயம் முக்கியம்: வெங்கட்டின் தம்பி நாராயணன் ஏற்கெனவே மத்திய அரசு வேலையை விட்டுவிட்டு, அமைப்பில் முழுநேரப் புரட்சியாளராக சேர்ந்துவிட்டார்.
நாராயணன், வெங்கட் முழு நேர ஊழியராக வர விரும்பவில்லை. ஏனெனில், அமைப்பில் பல பிரச்னைகள் இருந்தன.சரியான நேரத்தில் சரியான உணவு கிடைக்காது, வேலைப்பளு அதிகம், சரியான தூக்கம் இருக்காது.
மேலும், குடும்பம் வெங்கட்டைத்தான் நம்பி இருந்தது. அப்பாவுக்குப் போதுமான வருமானம் இல்லை. இரண்டு பெண்களுக்கும் எப்படியோ கல்யாணம் முடிந்தது. வெங்கட்டைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி அம்மா வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில்தான் வெங்கட் ஒரு தவறான முடிவு செய்தார். கனரா வங்கியில் இருந்து வெளியே வர முடிவெடுத்து, தனது ராஜினாமா கடிதத்தைத் தனது நண்பர் கண்ணனிடம் கொடுத்து, வேறு பகுதிக்கு அமைப்பு வேலையாகப் போய்விட்டார்.
மத்திய கமிட்டி, வெங்கட்டும் முழுநேர ஊழியராக வந்துவிட்டார் என்று நாராயணனிடம் சொன்னதும், நாராயணனுக்குப் பெரிய ஷாக்.
தனது அண்ணன் இந்த அமைப்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைத்தார். மிகவும் கடினமான வேலை, பணக் கஷ்டம், வேலைப் பளு அதிகம்; இதில் வந்து சிக்கிக்கொள்வார் என்று நாராயணன் நினைத்தார்.
நாராயணனுக்கு வெங்கட் முழுநேர அமைப்பாளராக வருவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. மேலும், அம்மா, அப்பா என்ன செய்வார்கள்..? என்றும் நாராயணன் நினைத்தார்.
அமைப்பு விதிகள்படி முழு நேர ஊழியர்களின் குடும்பத்தை அமைப்பே பார்த்துக்கொள்ளும் என இருந்தது. ஆனால், அமைப்பு விதிகள் வெறும் விதிகள்தான்; அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாராயணன் அமைப்பு பற்றி நன்றாகவே அறிந்து இருந்தார். அவரும் அமைப்பைவிட்டு வெளியே வர யோசித்தார்.
இதற்கிடையில், கண்ணன், வெங்கட் வீட்டுக்குச் சென்று வெங்கட் ராஜினாமா பற்றி சொன்னார். அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்.
கண்ணன் தைரியமாகப் பேசினார். அவரால் முடிந்த உதவிகளைச் செய்தார். தனது நண்பன் மற்றும் அவன் குடும்பம் நாசமாகப் போவதை அவர் விரும்பவில்லை. அவர் வெங்கட் அம்மாவிடம் நல்ல யோசனையைத் தெரிவித்தார். வெங்கட் மீதும் அவர் குடும்பம் மீதும் அக்கறை கொண்டு இருந்தார்.
"அம்மா... நான் ராஜினாமா கடிதம் கொடுக்கப் போவதில்லை. அடுத்த முறை இங்கு வெங்கட் வரும்போது, 'நீ வேலையை விட்டால், நான் தற்கொலை செய்வேன்' என்று சொல்லுங்கள். பயம் வேண்டாம்... 'நான் தற்கொலை செய்வேன்' என்று தைரியமாகச் சொல்லுங்கள்!" அம்மாவிற்கு அருகில் இருந்த நாராயணனுக்கும் அவர் தந்த யோசனை நன்றாகவே இருந்தது.
நாராயணன் கமிட்டி மீது நம்பிக்கை இழந்தார். முழு நேரப் புரட்சியாளர்களைச் சேர்ப்பதில் இருந்த கவனம், புரட்சியில் இல்லை. எல்லோரும் ஏமாந்து போகிறார்கள் என்று நாராயணன் நினைத்தார். அதுமட்டும் அல்ல... தான் அமைப்பைவிட்டு வெளியேறி வீட்டிற்குச் செல்ல முடிவு செய்த நாராயணன் வெங்கட்டை யும் இந்த அமைப்பில் இருந்து வெளியே வரச் செய்ய வேண்டும் என்று நல்ல நேரம் பார்த்து இருந்தார்.
அப்போது, அமைப்பு முழு நேர ஊழியர்களைக் கொண்டு சேலத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. முழு நேர ஊழியர்கள் கூட்டம்!
அந்தக் கூட்டத்தில் தான் கலந்துகொள்வது இல்லை என முடிவெடுத்தார் நாராயணன். மேலும், வெங்கட்டும் வெளியே வர வேண்டும் என்று நினைத்தார். அந்தக் கூட்டத்தை புறக்கணிக்கச் சொன்னால் நிச்சயமாக வெங்கட் மறுத்து இருப்பார். அந்தச் சமயம் கண்ணன் கொடுத்த யோசனை அவர் நினைவுக்கு வந்தது. நாராயணன் நடிக்க ஆரம்பித்தார்.
தனது தந்தை தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒரு கடிதத்தைத் தாமே எழுதிய நாராயணன், அதை வெங்கட்டிடம் காட்டி, "நாம் உடனே ஊட்டிக்குச் செல்வோம்" என்று நிர்ப்பந்தம் செய்தார். வெங்கட்டையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்குப் புறப்பட்டார்.
மத்திய கமிட்டி நாராயணனை மட்டுமே போகச் சொன்னது. ஆனால், நாராயணன் "எனக்குப் பயமாக உள்ளது" என நாடகம் நடித்து, வெங்கட்டுடன் ஊட்டிக்குப் புறப்பட்டார்.
ஊட்டி. நாராயணன் பெருமூச்சு விட்டார். நாராயணன், வெங்கட்டிடம் அமைப்பைப் பற்றித் தான் அறிந்த விஷயங்களைச் சொன்னார். அமைப்பின் குறைபாடுகளை விவரித்தார்.
மேலும், "வேலையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டாம். குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும்," என்று சொன்னார்.
அம்மா...! அப்பா...! ஆபத்பாந்தவா...! கண்ணா!
இங்குதான் ஆபத்பாந்தவன் கண்ணன், ராஜினாமா கடிதம் கொடுக்காமல் இருந்தது நல்லதாகப் போச்சு. அவர் கொடுத்து இருந்தால், குடும்பம் நடுரோட்டிற்கு வந்திருக்கும்.
வெங்கட்டை விசாரணை கமிஷன் விசாரணை செய்து, "இனிமேல் ஆஃபீஸுக்குத் தெரியாமல் நீங்கள் லீவு போட்டால், வேலை நீக்கம் செய்யப்படுவீர்கள்," என்று எச்சரித்தது. வெங்கட் மீண்டும் கனரா வங்கியில் பணியில் சேரத் தயாரானார்.
அப்பா! பெரிய பிரச்னை தீர்ந்தது. நட்பு அவரைக் காப்பாற்றி இருந்தது. கண்ணன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து இருந்தால்... நினைத்துப் பார்க்கவே நரகமாக இருந்தது!
சிறந்த நண்பன்! கண்ணன் ஆபத்பாந்தவன்! அவர் புண்ணியத்தில் வெங்கட் வேலையில் சேர்ந்தார்.