ஒரு நாள் காஞ்சி மகாபெரியவாளை தரிசனம் செய்ய, ‘ஸிரோமணி’ பட்டம் பெற்ற நாலைந்து பண்டிதர்கள் வந்திருந்தனர். மகாபெரியவா, சாஸ்த்ர விஷயங்களை அவர்களுடன் ஸம்பாஷித்துக் கொண்டிருந்தபோது பேச்சுவாக்கில்...
"இங்க வரவா எல்லாம் நமஸ்காரம் பண்ணினா நான் திருப்பி, ‘நாராயண, நாராயண’ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்றேன். நானோ சன்யாஸி! ஆனா, சம்ஸாரிகள் நீங்க எல்லாம் என்ன சொல்லி ஆசீர்வாதம் பண்ணுவேள்?" என்றார்.
"தீர்காயுஷ்மான் பவ, ஸௌம்ய’ன்னு சொல்லுவோம் பெரியவா" என்றனர் அவர்கள்.
"சரி… அதுக்கு என்ன அர்த்தம்?" என்றார் மகாபெரியவர்.
"ரொம்ப நாள், தீர்க்கமான ஆயுஸோட, சௌக்கியமா இரு’ன்னு அர்த்தம்" என்றனர் அவர்கள்.
அதையே அங்கிருந்த அனைத்து வித்வான்களிடமும் வரிசையாகக் கேட்டார் பெரியவர். அவர்கள் அனைவரும், "அதே அர்த்தம்தான்..." என்று ஆமோதித்தனர்.
மகாபெரியவா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு, ஒரு அழகான புன்னகையோடு, "நீங்க அத்தனை பேரும் சொன்ன அர்த்தம் தப்பு!" என்றார்.
பண்டிதர்களுக்குத் தூக்கி வாரி போட்டது!
“அது எப்படி? கொஞ்சம் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட இதற்கு அர்த்தம் சொல்லிவிடுவார்கள். அவ்வளவு சுலபமான வார்த்தைகள் அவை! அது எப்படி தப்பாகும்! ஒன்றும் புரியவில்லையே” என்றனர் அவர்கள்.
"நானே சொல்லட்டா?" என்றார் மகாபெரியவா.
எல்லோரும் காதை தீட்டிக் கொண்டார்கள்.
"இருபத்தேழு யோகங்கள்ல ஒரு யோகத்தோட பேர், ‘ஆயுஷ்மான்.’ பதினோரு கரணங்கள்ல ஒரு கரணத்தின் பெயர், ‘பவ’ங்கறது! வார நாட்கள்ல, ‘ஸௌம்யவாரம்’ன்னு சொல்லப்படறது புதன் கிழமை! இந்த மூணும், அதாவது 'புதன்' கிழமையில 'ஆயுஷ்மான்' யோகமும், 'பவ' கரணமும் சேந்து வந்தால், அந்த நாள் ரொம்ப ரொம்ப சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு. அதனால, ‘ஆயுஷ்மான் பவ, ஸௌம்ய’ன்னு இந்த மூணும் கூடி வந்தால், என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்குமோ, அதெல்லாம் உனக்கு தீர்க்கமா கிடைக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்றேன்னு அர்த்தம்" என்று முடித்தார் மகாபெரியவர்.
அத்தனை வித்வான்களும் ஒரே நேரத்தில், தண்டம் போல் பெரியவா பாதத்தில் விழுந்தனர். நாலைந்து சிரோன்மணிகள், அஞ்சாறு வித்யா வாசஸ்பதிகள் இருந்தும், கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டிருந்த இத்தனை எளிய வாழ்த்துக்கு, இவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்தைக் காட்டிக்கொடுத்த அந்த ‘ஞான மேரு’வின் முன் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுவதை விட வேறென்ன செய்ய முடியும்?
புதன் கிழமையோடு இந்த யோகமும், கரணமும் சேர்ந்து அமையும் நல்ல நாள் அரிது என்பதால்தானோ என்னவோ, ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’னு சொல்லிச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள்.