சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பத்ரகாளியம்மன் ஆலயம். இது மதுரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் பத்திரகாளி. தல விருட்சம் வேம்பு. தீர்த்தம் பிரம்ம குண்டம், மணிகர்ணி தீர்த்தம்.
1) தல சிறப்பு:
பத்ரகாளி அம்மன் இங்கு அக்னியையே கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலாவரும் கோலத்தில் நின்ற நிலையில் அருளாச்சி செய்கிறாள். தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோவில் அருகில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு அய்யனார் காவல் தெய்வமாகவும், வினை தீர்க்கும் விநாயகப் பெருமானும் அருள் புரிகின்றனர்.
அம்மனுக்கு எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆடை அணிவித்தலை படையலாக கருதி செய்கிறார்கள்.
செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றை இந்த அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்களுடைய குலதெய்வமாக மக்கள் வழிபடுகிறார்கள். இங்கு பத்ரகாளியம்மன் ஆக்ரோஷமான சக்தி உள்ளவராக கருதப்படுகிறார். இங்குள்ள அம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகளில் வெற்றி கிடைப்பதாகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் இந்த அம்மனை வழிபடுகின்றனர்.
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிர கணக்கில் மக்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம், தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை, சித்திரை வருடப்பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, தைப்பொங்கல், சிவராத்திரி என திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
2) காசு வெட்டிப் போடுதல்:
கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி எதுவும் கிடைக்காது ஏமாந்தவர்கள், இங்கு வந்து நீதியின் தேவதையாக காளியைக் கருதி அவள் முன்னால் காசு வெட்டிப் போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. காளியிடம் முறையிட்ட பின்பு கிழக்கு வாசல் வழியாக வெளியேறும் பழக்கமும் உள்ளது.
3) தல பெருமை:
அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமான குதிரை வாகனம் உள்ளது. பொதுவாக கோவில்களில் குதிரை மீது அமர்ந்திருக்கும் அய்யனார், இக்கோவிலில் தனியாக சன்னதியில் காட்சி தருவது சிறப்பான அம்சமாகும்.
மிகவும் பழமையான 1000 ஆண்டுகள் முந்தைய கோவில் இது.
4) அடைக்கலம் காத்த அய்யனார்:
அய்யனார் இங்கு மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் வலது கை நீண்ட சுதையின் மீது அமர்ந்து காட்சித் தருகிறார். இவர் தான் இக்கோவிலின் காவல் தெய்வம். சக்தி வாய்ந்த தெய்வம் என மக்கள் கூறுகின்றனர். அய்யனாருக்கு இருபுறமும் தலையை அரித்து பலியிட்டுக் கொள்ளும் நவகண்ட சிற்பங்கள் உள்ளன. அய்யனாரின் கருவறையில் சப்த கன்னியரும் உள்ளனர்.
5) அம்மனின் தோற்றம்:
இங்கு பத்ரகாளியம்மன் சம்ஹார தேவதையாக காட்சி தருகிறாள். திறந்தவெளியில் நின்ற கோலத்தில் காட்சி தரும் பத்ரகாளி அம்மன் வலக்கையில் திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்னி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்குப் பின்புறம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை உள்ளது. குதிரைகள் காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்தவாறு காணப்படுகின்றன. இங்கு நேர்த்திக்கடனாக காளிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.
6) தல வரலாறு:
பிரளய காலத்தில் மதுரை மாநகர் வெள்ளத்தால் சூழப்பட்டதும் மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்ட வேண்டும் என்று ஈசனிடம் வேண்ட, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்து மதுரையை வளைத்தார் என்று கூறப்படுகிறது. மேற்கே திருவேடகமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த ஈசன் கிழக்கில் மடப்புரத்தில் ஆதிசேஷனின் தலையையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். அப்பொழுது ஆதிசேஷன் வாயிலுள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளியதாகவும், அய்யனார் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை நிழலாகத் தந்து அடைக்கலம் தந்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அய்யனார் 'அடைக்கலம் காத்த அய்யனார்' என்று பெயர் பெற்றார்.
கோவில் காலை 6:00 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.