
கணவன் சிவனாகவே இருந்தாலும் கோபம் வந்தால் கிளம்பிவிட வேண்டியதுதானே.. இந்த அம்மை - அப்பன் மோதல் நடந்த தலம் வேறெதுவும் இல்லை... நம்ம சிதம்பரத்தில் தான்.
தில்லை எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றித் தெரியாதவர் இருப்போமா? கோவில் என்றாலே அது தில்லை தான் என்ற பெருமை வாய்ந்த இக்கோவிலைச் சுற்றிப்பார்க்க நாளொன்று போதாதே. ஆனால் இந்தக் கட்டுரை ஆடலரசர் கோவிலை விளக்கும் கட்டுரை அல்ல.
முதலாம் பராந்தகன் பொற்கூரை வேய்ந்த கனக சபையில் ஆனந்த நடனமாடும் நடராஜரை நமக்குத் தெரியும். இடதுபதம் தூக்கி ஆடும் அவரின் அந்த pose வெகு பிரசித்தி ஆயிற்றே. அதே கனகசபையில் இன்னொரு ஆடல் pose உண்டு அறிவீர்களா...? அதுதான் பார்வதியைக் கோபமூட்டி காளியாக்கிய pose.
ஆடல் திறனில், ஆடலரசர் பெரியவரா சிவகாமி அம்மை பெரியவளா என்ற சர்ச்சை எழுந்ததும், பிற கடவுளர்கள், தேவர்கள், முனிவர்கள், கணங்கள் முன்னிலையில் அம்மையும் அப்பனும் ஆடல் போட்டியிட்டனர். கனக சபையில் சாதாரணமாகத் துவங்கிய இப்போட்டி கொஞ்சம் 'சிரியஸ்' ஆகிவிட, அம்மையிடம் ஆடலுக்கே அரசரான நடராஜர் தோற்றுவிடலாம் என்ற கட்டம் வந்துவிட்டதாம்.
அப்போதுதான் 'ஊர்த்தவ நடனம்' நிகழ்த்தினார் நடராஜர். ஆடிய போது கீழே விழுந்த தன் குண்டலத்தை வலது கால் விரல்களால் எடுத்துத் தன் வலது காதில் மாட்டிக்கொண்டார் நடராஜர். பின்னர் வலதுகாலினைத் தலைக்கு மேல் தூக்கி நின்றார் அந்த ஆடலரசர்.
இதே போல் பார்வதி தேவியை ஆடச்சொல்லி சவால் விடுத்தார். பார்வதியானாலும் பெண்ணல்லவா. நிறைந்த சபையில் இந்த ஆடலை எப்படிச் செய்வாள்? ஆடும் திறன் இருந்தும் ஆடமறுத்துத் தன் தோல்வியை ஏற்றாள் அம்மை. எனினும் சினம் கொண்டாள். திறமையால் அன்றி குறுக்குவழியில் வென்றுவிட்டதாக சிவன் மீது கோபம்கொண்ட சிவகாமி, தில்லையம்பலத்தில் இருந்து வெளியேறி காளியாகி வந்தமர்ந்த தலம் தான் தில்லை காளி கோவில்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது தில்லை காளி கோவில்.
வாசலிலேயே சக்தியின் சூலாயுதம் தான் நம்மை வரவேற்கிறது. சூலத்தின் முனையில் எலுமிச்சையைச் சொருகிவிட்டு, இடப்பக்கம் உள்ள விளக்குமண்டபத்தில் நெய்விளக்குகளை ஏற்றிவைத்துவிட்டு உள்ளே நுழைந்தால், பிரசன்ன விநாயகரும் முருகப்பெருமானும் நமக்கு அருள இருபுறமும் தனித்தனிச் சந்நதிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களை வணங்கி உள்ளே நுழைந்தால் மேல்திசை நோக்கியபடி சாந்தமே வடிவாய் அமர்ந்திருக்கிறாள் தில்லை அம்மன். பிரும்மதேவர் போல் நான்கு முகங்களோடு அன்பொழுக அருள்மாரி பொழிகிறாள் தில்லை அம்மன். இவள் தில்லை காளி அல்ல.. தொடர்ந்து படியுங்கள்.
தில்லை அம்மனை வேண்டிக்கொண்டு இடப்புறம் வந்தால் கிழக்கு நோக்கி அதாவது தில்லை அம்மனுக்கு எதிர்ப்புறம் பார்த்த படி பிரும்மாண்டமாய் கம்பீரமாய் கோபமாய் எட்டு கரங்களோடு வீற்றிருக்கிறாள் சிவனிடம் கோபித்துக்கொண்டு அம்பலம் விட்டு வெளியேறி வந்துவிட்ட காளி. இவளே தில்லை காளி. குங்குமக் காப்பில் தீப ஆரத்தியில் அவளின் அந்த கோபம் கொப்பளிக்கும் கண்களைத் தரிசிக்கும் போது சிலிர்த்துவிடுகிறது.
காளியின் கோபத்தை பிரும்மதேவர் வேதம் பாடித் தணித்தாராம். அதன்பின்னர் பிரும்மரைப்போலவே நான்கு முகங்களோடு சாந்தரூபிணியாகக் காளி ஏற்ற உருவம்தான் முன்னதாக நாம் தரிசித்த தில்லை அம்மன் திருவுருவம்.
காளியை வேண்டிவிட்டு வெளியே வந்தால் வீரபெருமாள் அருள்கிறார். பிரகாரத்துள் பிரவேசித்தால் தில்லை அம்மன் வீற்றிருக்கும் கோபுரத்தின் மூன்று பக்கங்களிலும் பிரும்ம சொரூபிணி, நாகவைஷ்ணவரூபிணி, கடம்பவன தக்ஷினரூபிணி ஆகிய மூவேறு சக்திவடிவங்கள் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சண்டிகேஸ்வரர், பைரவர், வீணைவித்யாம்பிகை, நர்த்தண கணபதிக்கும் சந்நதிகள் உள்ளன. வீணை வித்யாம்பிகைக்கு நேர் எதிரே கல் ஜன்னல் ஊடாக வீரனாரையும் தரிசிக்கலாம்.
வைகாசி மாதம் இக்கோவிலில் மிகவும் விஸேஷமாம். காப்பு கட்டி தேரோட்டம் தெப்ப உற்சவம் என்று அமர்க்களப்படுமாம்.
பூக்கடைகள், பார்க்கிங் வசதி எல்லாம் உள்ளது. சக்தி தீர்த்தம் ஒன்றும் வெளியே உள்ளது. குளத்தில் திருப்பணி நடக்கிறது.
அடுத்தமுறை சிதம்பரம் போகும்போது நடராஜரோடு மட்டும் திரும்பிவிடாமல் தில்லை காளி, தில்லை அம்மனையும் தரிசிக்கும்படியாக திட்டம் போடுங்களேன். பார்க்கவேண்டிய கோவில்.