

ஒரு சமயம் அகத்திய முனிவர் சிவபெருமானால் பொதிகை மலையில் இருக்கும்படி கட்டளை இடப்பட்டார். அப்போது அவர் பொதிகை மலையை நோக்கிப் போகும் வழியில் வாதாபி, இல்வலன் இருவரின் கொட்டத்தை அடக்கிவிட்டு உயர்ந்த மேரு மலையின் கர்வத்தையும் அடக்கி, வழியில் சீர்காழியில் இந்திரன் சிவபூஜைக்காக பூக்கள் இல்லாமல் வாடும்போது அவருக்காக காவிரியை உண்டாக்கிவிட்டு, வழியில் திருக்குற்றாலம் வந்தார்.
குற்றாலத்தில் சைவ வைணவ சண்டை அப்போது உச்சத்தில் இருந்தது. சைவ சின்னங்களை அணிந்து வந்தாலே விரட்டிக்கொண்டிருந்தனர். மனிதனாக இருப்பதை விட்டு, மதப்பேய் பிடித்து ஆடிக்கொண்டிருந்தனர் அனைவரும். அகத்தியர் ருத்ராட்சமும் திருநீறும் அணிந்து சென்றார்.
அவரைப் பார்த்ததும், 'உமக்கு இங்கு அனுமதி இல்லை' என்று விரட்டி விட்டனர். அவரும், இவர்களுடன் சண்டை போடுவதை விட நல்ல பாடம் புகட்டினால்தான் சரியாகும் என்று தீர்மானம் செய்துகொண்டு, வந்த வழியே திரும்பினார். சில தினங்கள் கழித்து, திருமண் இட்டுக்கொண்டு ஸ்ரீவைஷ்ணவ கோலத்தில் அவர்கள் முன் சென்று கோவில் இருக்கும் திசையில் நடந்தார்.
அவர்களும், ஆஹா, என்ன தேஜஸான ஸ்ரீவைஷ்ணவர் இவர் என்று அவருடைய முக ஒளியைப் பார்த்து சந்தோஷமாக உள்ளே விட்டனர். பெருமாளுக்கு அவரையே பூஜை செய்யவும் அனுமதி தந்தனர். அகத்தியர் இவர்கள் அனைவருக்கும் சைவ வைணவ பேதம் என்பதே இனி தோன்றக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டு, கருவறைக்குள் சென்று பஞ்சாக்ஷரம் ஜபித்தபடியே பெருமாளின் தலைக்கு மேல் கையை வைத்து ஆட்டியபடியே குறுகு, குறுகு என்று சொல்லிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் பெருமாள் உருவத்தில் இருந்த சிலை, அரக்கு நெருப்பில் உருகி குழம்பாவது போல உருகிக் குழைந்து, சிவலிங்க வடிவத்தில் வந்து நின்றது.
அனைவரிடமும் அகத்தியர், சிவ விஷ்ணு மஹிமைகளை எடுத்துச் சொல்லி, உருவத்திலும் அருவத்திலும் ஆழ்ந்துபோகாமல், உருவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனை அன்பால் தொழும்படி உபதேசித்தார். அன்பால் தொழுவதற்கு சக மனிதர்களிடம் அன்பு பெருக வேண்டும். ஏனென்றால் இறைவனே அனைத்து உயிர்களிலும் நிறைந்து இருக்கிறார் இல்லையா?