
இந்த மாதம் சூரியன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசியில் பிரவேசிக்கிறான். சூரியன் துலாம் ராசியில் இருக்கும் கால அளவு 29 நாட்கள், 54.12 நாழிகைகள். ஆகவே, இந்த விசுவாவசு வருடத்தில் ஐப்பசி மாதத்திற்கு 30 நாட்கள். அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை.
இந்த மாதத்தின் முக்கிய நாட்கள் அக்டோபர் 20, திங்களன்று தீபாவளிப் பண்டிகை. அக்டோபர் 22 புதனன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பித்து, 27ஆம் தேதி, திங்களன்று, சூரசம்ஹாரத்துடன் விரதம் முடிவடைகிறது. நவம்பர் 5-ம் தேதி, புதன் கிழமை சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்தப் பண்டிகை நாடு முழுவதும், ஆடம்பரத்துடனும், குதூகலத்துடன் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து, கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, விருந்துண்டு கொண்டாடுவார்கள். நண்பர், உறவினர்களிடையே இனிப்புகள் பரிமாறுதல், வாழ்த்துகள் பரிமாறுதல் இதன் சிறப்பு அம்சம்.
மாலையில் கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது வழக்கம். அயல் நாட்டில் வாழும் இந்தியர்களும் தவறாமல் கொண்டாடப்படும் பண்டிகை. நம் நாட்டில் தீபாவளியன்று புதுப்படங்கள் தவறாமல் வெளியிடப்படும். வழக்கம் போல் சின்னத்திரை படங்கள், பாடல்கள் தவிர தவறாமல் பட்டிமன்றம் நடத்துவார்கள். கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரனை வெற்றி கொண்ட நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. ஆகவே, இதனை நரக சதுர்தசி என்றும் சொல்வதுண்டு.
இந்தியாவில் சில மாநிலங்களில் இது ஒரு நாள் பண்டிகை, சிலவற்றில் இரண்டு நாட்கள். சில மாநிலங்களில் இந்தப் பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது அக்டோபர் 18-ம் தேதி முதல் 23 வரை.
அக்டோபர் 18, முதல் நாளன்று பண்டிகை 'தந்தேராஸ்' எனப்படும். இந்த நாள் தங்கம், வெள்ளி, வீட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நல்ல நாள் என்று கருதப்படுகிறது செல்வமும், நோயற்ற வாழ்வும் வேண்டி லஷ்மி மற்றும் தந்வந்திரி தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். அடுத்த நாள் 'யம தீபம்'. அந்த நாளில் கடுகு எண்ணெய் விளக்கேற்றி, மரண பயம் அகல, யமராஜனை வணங்குவார்கள். அடுத்து தீபாவளி. இதனை வட நாட்டில் 'சோடி தீபாவளி' என்பார்கள். தீபாவளியன்று இரவு லஷ்மி பூஜை நடைபெறும். இருட்டை விலக்க அகல் விலக்குகள், மெழுகு வர்த்தி ஏற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் வளர லஷ்மி தேவியை வணங்குவார்கள்.
தொழில் செய்பவர்கள் சிலர் இந்த நாளில் புதுக் கணக்கு தொடங்குவார்கள்.
அக்டோபர் 22, 'கோவர்த்தன பூஜை'. கிராம மக்களை பெரு மழையிலிருந்து காப்பாற்ற, கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி, அதனடியில் அவர்களைத் தங்க வைத்தார். அதனை நினைவு கூர்ந்து இந்த பூஜை நடைபெறுகிறது.
அக்டோபர் 23, 'பாய் டூஜ' தீபாவளி கடைசி நாள். சகோதர சகோதரிகளிடையே உள்ள உறவைச் சித்தரிக்கும் நாள். சகோதரன், ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருப்பதற்காகப் பிரார்த்தனை செய்யும் சகோதரிக்கு, சகோதரன் அவளைப் எப்போதும் பாதுகாக்க உறுதியெடுத்து, பரிசுகள் வழங்கும் நாள்.
கந்தர் சஷ்டி விழா ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் தொடங்கி, ஆறாவது நாளான சஷ்டி திதி அன்று முடிவடைகிறது. இந்த ஆறு நாட்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடைபெறும் என்பது நம்பிக்கை.
முக்கியமாக குழந்தைப் பேறு விரும்புவோர் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள். கந்தர் சஷ்டி விழாவின் முக்கிய அம்சம் ஆறாவது நாள் நடைபெறும் முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்.
சிவபெருமானிடமிருந்து வரம் பெற்ற காரணத்தால், சூரபத்மன் தேவர்களுக்குப் பலவிதமான தொல்லைகள் கொடுத்தான். தேவர்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்த முருகப் பெருமான் ஆறு நாட்கள் சூரபத்மனுடன் போரிட்டு, அவனை வதம் செய்தார். இந்த ஆறு நாட்களையே கந்தர் சஷ்டியாக கொண்டாடுகிறோம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வேறு இரண்டு காரணங்களுக்காக கந்தர் சஷ்டி கொண்டாடப்படுவதாக மகாபாரதமும், கந்தபுராணமும் சொல்கின்றன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
உலக நன்மைக்காக ஒரு புத்திரன் பிறக்க வேண்டும் என்று முனிவர்கள் ஆறு நாட்கள் பெரிய யாகம் செய்தனர். ஒவ்வொரு நாள் யாக முடிவிலும், யாகத்திலிருந்து ஒரு வித்து தோன்றி, ஆறு நாட்களில் ஆறு வித்துக்கள் தோன்றின. ஆறாவது நாளில் இந்த வித்துக்களை ஒன்றிணைத்து முருகப் பெருமான் அவதரித்தார். அவர் அவதரித்த நாட்களை கந்தர் சஷ்டி என்கிறது மகாபாரதம்.
முருகனின் அருளைப் பெறுவதற்காக கச்சியப்பசிவாச்சாரியார் ஐப்பசி மாத வளர்பிறையில் தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து இறை அருளைப் பெற்றார். அசுரர்களின் கொடுமையிலிருந்து காக்க வேண்டும் என்று தேவர்களும், முருகப்பெருமானை ஆறு நாட்கள் வழிபட்டு, அதன் பலனைப் பெற்றனர். இதனைக் கொண்டாடும் விதமாக கந்தர் சஷ்டி கொண்டாடப்படுவதாக கந்தபுராணம் சொல்கிறது.
ஐப்பசி மாத பௌர்ணமியன்று, சிவாலயங்களில், சிவலிங்கத்தை முழுமையாக அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவார்கள். “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்பது பழமொழி. ஆகவே, அன்னத்தை கடவுளின் வடிவமாகப் போற்றி, அன்னத்தை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அன்னாபிஷேகம் செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள். உலகைப் படைத்த கடவுள், உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான உணவையும் படைத்தார். அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் திருநாள் அன்னாபிஷேகம். இதற்குப் பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.
சிவபெருமானைப் போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தன்னை சிவனுக்கு இணையானவராகக் கருதினார் பிரம்மா. அவர் கர்வத்தை அடக்க அவருடைய ஒரு தலையைக் கொய்தார் சிவபெருமான். அதனால், அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னபூரணி சிவனுக்கு உணவளிக்க தோஷம் விலகியது. ஆகவே அந்த நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.