

நண்பர் ஒருவர் தான் படித்தக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கினார். அதற்கு நன்றி கூறும் வகையில் அந்தக் கல்லூரி ஒரு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. தற்செயலாக நான் அதே ஊரில் அச்சமயம் இருந்த காரணத்தினால், அதில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நண்பர், தன் குடும்பத்தினர், அவருடைய வகுப்பு நண்பர்கள், மற்றும் தன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
கல்லூரி வளாகத்திற்குள் நுழையும்பொழுதே ஏதோ ஒரு அறிவார்ந்த சூழலில் நுழைவதுபோல ஒரு பிரம்மை ஏற்பட்டது. தோட்டங்கள், மரங்கள், தாவரங்கள் நிறைந்த ஒரு பரந்த நிலப்பரப்பு மிக்க கல்லூரி அது. அந்தக் கல்லூரியின் நுழைவு தேர்வு, உலக அளவில் இருக்கும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும், மிகவும் கடினமான நுழைவுத் தேர்வு. நுழைவு தேர்வைத் தேர்ச்சி பெறாமல் நுழையும் அரிய சந்தர்ப்பம் இது. அதை நான் கைவிடவில்லை.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
அந்த மழையில் நானும் சற்றே நனைந்தேன்.
ஏற்புறையை நண்பர் வழங்கினார். மூன்று பேருக்கு நன்றி கூறினார். முதலில் தன் பெற்றோர். அவரின் தந்தை எல்லா செல்வங்களையும் (பொருட்செல்வம்) இழந்து, சென்னைக்கு இடம் பெயர்ந்தவர். குடும்பம் இருக்கும் நிலையிலிருந்து மீண்டு ஒரு நல்ல பொருளாதார நிலைக்கு வருவதற்கு கல்வி ஒன்றுதான் வழி என்ற நிலைமை.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, தன் பிள்ளைகள், சென்னை மாநகரத்தில் வளர்ந்து, பல்வேறு மனிதர்களை சந்தித்து, நல்ல பள்ளிகளில் படித்தால், இந்த நிலையிலிருந்து மீண்டு வரலாம் என நினைத்தார். தனக்கு அந்தக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தன் பிள்ளைகளுக்காவது அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்ற எண்ணம்.
தங்களுக்காக எந்த வசதிகளையும் செய்யாமல், இருக்கும் எல்லாவற்றையும் பிள்ளைகளின் படிப்பிற்காகவே விட்டுக் கொடுத்தனர். பெற்றெடுத்தல் என்பது ஒரு செயல் மட்டும் அல்ல. அது ஒரு உணர்வு. தன்னையே தந்து பிள்ளைகளை வளர்ப்பது. நெல்லுக்கு தேவையான நீர், நிலம், சூரிய ஒளி இருக்கும் இடத்தில் விதைகளை விதைப்பது.
அறுவடையை பார்ப்பதற்கு அந்த பெற்றோர் இல்லை. ஆனால், தன் பானையில் மட்டுமில்லாமல், பல பானைகளில் பொங்கிடும் அளவிற்கு அமோக விளைச்சல் தந்தது.
அடுத்த நன்றி தன் பள்ளி ஆசிரியர்களுக்கு. தான் படித்த பள்ளி ஒரு மிக சாதாரண பள்ளி. அந்த பள்ளியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நாலு பேரு தான் தேர்ச்சி பெறுவார்கள். எந்த வசதியும் இல்லாத பள்ளி. அந்த ஆசிரியர்களுக்கு பெரிதாக சம்பளமும் இல்லை. அவர்களிடம் இருந்தது ஒன்றுதான். சொல்லிக்கொடுப்பது. அந்தக் கணக்கு வாத்தியார் கணக்கு சொல்லி கொடுத்த விதத்தால்தான், எந்தவித கோச்சிங் கிளாஸ் இல்லாமலும், அந்தக் கடினமான நுழைவுத் தேர்வை தேர்ச்சி பெற்றது மட்டும் இல்லாமல், எப்படி அந்த அடிப்படை கணக்கு அறிவு தன் வாழ்க்கை முழுக்க பயன்பட்டது என்றும், அந்தக் கணக்கு அறிவால் எப்படி பொருள் ஈட்டுவது மட்டுமில்லாமல், பொருள் சேமித்து, பெருக்க முடிந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
மூன்றாவது நன்றி மனைவிக்கு. தான் வழங்கிய நன்கொடைக்கும் மனைவியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார். சபை நாகரித்திற்காக மட்டும் இல்லாமல், வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டும் இல்லாமல், முழு உணர்வோடு தெரிவித்த நன்றி அது.
தன் குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையிலும் தன் மனைவியை நிலை நிறுத்திய தருணம் அது. மனைவிகள் செய்யும் உதவி பொதுவாக வெளியில் தெரியாது.
ஏன் உள்ளேயே தெரிவதில்லை. தெரிந்தாலும் புரியவில்லை. அவர்கள் குடும்பத்திற்கு செய்வது பெரும்பாலும் ‘டேக் இட் ஃபார் கிராண்டெட்’ என்ற வகையில் சேரும். அவர்கள் செய்வது பெரும்பாலும் எதிர் வினை போலத்தான் தோன்றும். கோபங்களும் திட்டுகளையும் வாங்கித்தான் அவர்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள். தன் மனைவிக்கு தந்த இந்த மரியாதை, திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. இப்பொழுதெல்லாம் திருமண வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் அதிகம் தேவைப்படுகிறது.
நன்றி கூறிய மூவருமே பலனை நினைத்து எதையும் செய்யவில்லை. தன் இயல்பான நிலையில் இருந்துதான் இதை செய்தனர். இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் - இயற்கை, மனிதநேயம், இறைவன், என்றெல்லாம் அவையை நீங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், நம்மால் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகள் இவை. இவற்றை உணரத்தான் முடியும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், மனைவி - மூன்று உறவுகள், மூன்று ஆசிகள். மூன்று உணர்வுகள், மூன்று உண்மைகள். நண்பர் நன்றி கூறியது அந்த மனிதர்களுக்கு மட்டும் அல்ல. அந்த உணர்வுகளுக்கு.
கொடுப்பது என்பது அதுபோலதான். அதுவும் ஒரு உணர்வுதான். கொடுப்பது பொருளைப் பற்றியது அல்ல. நண்பர் இரண்டு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். ஆனால், அது இரண்டு கோடியை பற்றியது அல்ல. கொடுப்பதை பற்றியது.
தானத்தில் சிறந்த தானம் கல்விதானம். இந்த தானம் ஒரு முன்மாதிரி தானம். வேர்களை மறக்காத தானம். நண்பருக்குக் கொடுத்த மூவரும் இதை கொடுக்கிறோம் என்று கொடுக்கவில்லை. அதேபோல்தான் நண்பரின் நன்கொடை. இதை கொடுக்கிறோம் என்று அவர் நினைக்கவில்லை.
திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறும் ‘ஆத்ம சமர்ப்பணம்’. தன்னையே கொடுப்பது. இந்த உலகம் ஒரு ஆத்மா. இந்த வாழ்க்கை, உலக ஆத்மாவில் ஒரு சிறு பகுதி. கொடுப்பது என்பது உலக ஆத்மாவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு சமர்ப்பணம். ஆத்ம சமர்ப்பணம்.
எனது ஆவி யார்? யான் யார்? தந்த நீ கொண்டாக்கினையே
எனது ஆவி யான் என்று யானே உன்னைத் துதித்தேன்
எனது ஆவி உன்னது அன்றோ? யான் யார்?
எனது ஆவி யார்? உன்னை எவ்விடத்து யான் எய்துவனே?
(திருவாய்மொழி)
கொடுப்பதற்காகவே பெருக்கிய பொருளில் ஒரு உன்னதம் உள்ளது. பொருளை பெருக்க ஒரு உன்னத முன்மாதிரிதான் நன்கொடை. தான் நல்லா படிக்கணும், அப்பதான் வேலை கிடைக்கும், அப்பதான் பணம் சம்பாதிக்கலாம், அப்பதான் வீடு வாங்கலாம், நல்ல வாழலாம், என்று போக, நல்லா படிக்கணும்... அப்பதான் பொருள் ஈட்டலாம், ஈட்டிய பொருளைப் பெருக்கலாம், பெருக்கிய பொருளைக் கொடுக்கலாம், என்பதை உணர்த்திய நிகழ்வு இது.
விளைந்த நெல் வயலுக்கு நன்றி செலுத்தியது.