

சக்தியின் ஸ்வரூபமான அன்னையை வணங்கி அவர்களின் ஆசியைப்பெற இந்த நவராத்திரி தினங்களை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிறோம்.
நவராத்திரியை சிறப்பாக நைவேத்தியங்களும், அலங்காரங்களும், பொம்மைகளும் கண்ணையும், மனதையும் நிறைக்கும். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆலம் எடுப்பது பல நல்வரங்களை தர வல்லது.
பொதுவாக கொலுவுக்கு முன் அழகிய ரங்கோலி யும், மாக்கோலமும் இட்டு கொலுபடிகளின் இருபுறமும் விளக்கேற்றி வைத்து பளிச்சென்று மனதை கவரும் அலங்காரங்களோடு அலங்கரிக்க தெய்வீகக் களையோடு இல்லம் மின்னும்.
ஆலம் எடுப்பதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆலம் எடுக்க அம்பாளின் அருள் கிடைக்கும்.
ஆலம் எடுக்கும் முறைகள்:
பூ ஆலம்
ஒரு தட்டில் பசை தடவி அதில் ஒவ்வொரு வரிசையாக பூக்களை வைத்து அலங்கரித்து நடுவில் அகல் விளக்கேற்றி வைத்து தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
முத்து ஆலம்
மைதா பசை தடவிய அழகிய தட்டில் வெள்ளை மணிகளை பெரிதும் சிறிதுமாக வைத்து டிசைன் பண்ணி நடுவில் சென்டட் மெழுகுவர்த்தியோ, அகலோ வைத்து ஆலம் எடுக்கலாம்.
முக்கூட்டு ஆலம்
மஞ்சள், பன்னீர், சந்தனம் இவை மூன்றும் கலந்து நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுத்து வைக்கலாம். பூ இதழ்களை அங்கங்கே இட்டு டிசைன் செய்ய கூடுதல் அழகாக இருக்கும்.
தீப ஆலம்
சின்ன சின்ன கேன்டில் விளக்குகளை மலர் மீது வைத்து நடுவில் பெரிய விளக்கு ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
நவதான்ய ஆலம்
நவதானியங்கள் கொண்டு டிசைன் பண்ணி நடுவில் அங்கங்கே சின்ன அகல்களை வைத்து நடுவில் விளக்கேற்றி ஆலம் எடுக்க சிறப்பாக இருக்கும்.
ஃபெங்சூயி ஆலம்
அலங்கார தட்டை எடுத்துக்கொண்டு அதில் கலர் கலரான கோலிக் குண்டுகளை அல்லது ஃபெங்சூயி கற்களை வைத்து டிசைன் பண்ணி நடுவில் தீபம் ஏற்றி ஆலம் எடுக்கலாம்.
மதுர ஆலம்
சர்க்கரையும், கல்கண்டும் வைத்து நடுவில் விளக்கு வைத்து ஆலம் எடுக்க வேண்டும்.
அட்சதை ஆலம்
அட்சதை, மஞ்சள், குங்குமம் கலந்து இரு நிறங்களில் டிசைன் அமைத்து நடுவில் விளக்கேற்றி ஆலம் எடுக்க மங்களகரமாக இருக்கும்.
ஐவகை பருப்பு ஆலம்
ஐந்து வகை பருப்புகளை ஒரு தட்டில் டிசைன் அமைத்து நடுவில் தீபமேற்றி வழிபட்டு ஆலம் எடுக்கலாம்.
எந்த ஆரத்தி எடுத்தாலும் துளி மஞ்சள் கலந்த அட்சதை எனும் அரிசி இருக்கவேண்டும்.
ஆரத்தி எடுக்கும்போது பாட்டு பாடிக்கொண்டு மூன்று முறை சுற்ற வேண்டும். வலப்பக்கமாக சுற்றி வாசலில் கால் படாத இடத்தில் ஊற்றவேண்டும்.
ஆரத்தி தட்டில் இடும் நாணயங்களை கடவுளின் அருட்செல்வமாக நினைத்து எடுத்து பூஜையில் வைத்து பர்ஸில் வைக்க செல்வம் சேரும்.
ஆரத்தி தட்டை கொலுவுக்கு முன் வைக்கும்போது அதில் பச்சை கற்பூரம், பன்னீர் கலந்து வைக்க அறை முழுவதும் சுகந்த மணம் வீசி மனத்தை மகிழ்விக்கும்.
தெய்வீக அருள் பெற நித்தம் அம்பிகைக்கான ஸ்தோத்திரங்கள், பாடல்களை இசைக்கவோ பாடவோ செய்ய அம்பாளின் அருளால் வாழ்வு சிறக்கும்.