
ஸ்வாமி ஐயப்பன் எழுந்தருளிய கோவில்களும் அவர் காட்சியளிக்கும் நிலைகளும் பற்றி இங்கு காண்போம்.
1. ஆரியங்காவில் மணந்த நிலையில் இளைஞராக பகவான் இருக்கிறார்.
ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ள இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார் ஐயப்பன். இங்கு சடங்குகளும் பூசைகளும் தமிழ்நாட்டுக் கோவில் முறையில் நடைபெறுவது சிறப்பு. பரசுராமரால் உருவாக்கப்பட்டத் தலங்களில் இதுவும் ஒன்று என்ற நம்பிக்கை உள்ளது.
2. அச்சங்கோவிலில் வனராஜனாக கொலுவிருக்கிறார்.
அச்சன்கோவிலில் அமைந்த சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே ஆரியங்காவு அமர்ந்த நிலையில் இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் தேவியர் மலர் தூவ கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். கல்யாண சாஸ்தா என்று அழைக்கப்படும் இவரை வழிபட திருமணத்தடைகள் நீங்கும்.
3. குளத்துபுழை சேத்திரத்தில் குழந்தை ரூபத்தில் காட்சி தருகிறார்.
குளத்துப்புழை என்னும் இடத்தில் கல்லடை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ பால சாஸ்தா கோவில். இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோவிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது..இது ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
4. பந்தளத்தில் ஐயப்பன் யுவராஜனாக குடும்ப நிலையில் வீற்றிருக்கிறார்.
பந்தளம் என்னும் இடத்தில் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கவேண்டிய திருவாபரணங்கள் எடுத்துச்செல்வது சிறப்பு. கோவிலின் கருவறையில் புலியுடன் நிற்பதுபோல் காட்சி தருகிறார் மணிகண்டன். யுவராஜனாக வளர்ந்த பந்தள அரண்மனையில் அவர் படித்து பயன்படுத்திய ஓலைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
5. சபரிமலை வனத்தில் நித்தியபிரம்மச்சாரி நிலையில் தவமிருக்கிறார்.
வரலாற்றின்படி தேவர்கள் புலிகளாக மாறி வர, புலி மீது பவனி வந்த மணிகண்டன் பந்தள மன்னனாக மறுத்து சுவாமி ஐயப்பனாக 18 படிகள் அமைத்து, தவக்கோலத்தில் காட்சி செய்ய தேர்ந்தெடுத்த மலைதான் சபரிமலை. ஐயப்பன் என்ற சொல்லுக்கு "நான் உனக்குள் இருக்கிறேன்" என்பதுதான் பொருள்.
6. பொன்னம்பல மேட்டில் சூட்சும நிலையில் ஜோதியாக அருள் பாலிக்கிறார்.
மகரவிளக்கு என்பது சபரிமலை பொன்னம்பலமேட்டில் "புனித ஜோதி" ஏற்றப்படும் சடங்கு ஆகும். மலையின் உச்சியில் சுடர் ஏற்றுவது சபரிமலை புனித யாத்திரையின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கிறது. ஒரு அதிசய நிகழ்வாகக் கருதப்பட்ட மகரவிளக்கின் உண்மை பின்னணி நிரூபிக்கப்பட்டாலும் ஐயப்பனை மகரவிளக்கின் சுடரிலே சூட்சும நிலையில் தரிசிக்கவே பக்தர்கள் விரும்புகின்றனர்.
7. எருமேலியில் வேட்டையாடும் வேட்டைகாரர் நிலையில் இருக்கிறார் ஐயப்பன்.
ஐயப்பன் அரக்கி மஹிஷியை இந்த இடத்தில்தான் வதம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. மஹிஷ் என்றால் எருமை . மலையாளத்தில் எருமா என்று பொருள். எருமேலி என்பது எருமகொல்லி என்ற சொல்லில் இருந்த வந்ததாகும். மணிமாலா நதிக்கரையில் உள்ளது எருமேலி நகரம். புகழ்பெற்ற எருமெலி பேட்டத்துள்ளல் சடங்கானது இங்குள்ள வல்லியம்பலம் மற்றும் கொச்சம்பலம் எனும் இரு கோவில்கள் அருகே துவங்குகிறது.