இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ தாரகேஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் தர்மா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக இக்கோயில் பாதுகாக்கப்படுகிறது.
புராணத்தின்படி பாண்டவர்கள் தங்களது 14 ஆண்டுகள் வனவாசத்தின்போது பதிமூன்றாவது ஆண்டு மறைந்து கழிக்க வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வனவாசம் தொடர வேண்டும். ஹங்கல் மகாபாரத காலத்தில் ‘விராட்டா’ என்று அழைக்கப்பட்டது.
பாண்டவர்கள் வனவாசத்தின் பதிமூன்றாவது ஆண்டு கழித்த இடம் இது என்று நம்பப்படுகிறது. இடைக்கால கல்வெட்டுகளில் ‘ஹங்கல் விராட கோட்’ மற்றும் ‘விராட நகரா’ என்று அறியப்பட்டது. இந்த நகரத்தில் ‘குந்தினா திப்பா’ - குந்தியின் குன்று எனப்படும் கூம்பு வடிவமேடு உள்ளது. இது மகாபாரதத்துடன் உண்டான அதன் தொடர்பைக் காட்டுகிறது.
கல்யாண சாளுக்கியர்கள் என்ற வம்சத்தினர் 10 முதல் 12ம் நூற்றாண்டு வரை தக்காணத்தில் ஆட்சி செய்தனர். அவர்கள் இட்டகி கடக், லக்கண்டி மற்றும் ஹங்கல் இடங்களில் இந்து சமய ஆலயங்களை அமைத்தனர். கிபி 12ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவர்களால் கட்டப்பட்டதுதான் தாரகேஸ்வரர் திருக்கோயில் என்கிறார்கள்.
ஹொய்சாள கட்டடக்கலை பாணியில் இந்தக் கோயில் சாம்பல் பச்சை நிற குளோரிக் ஸ்கிஸ்டுடன் கட்டப்பட்டுள்ளது மற்றும் திராவிட மற்றும் நாகரா பாணிகளின் தாக்கத்தின் சாளுக்கிய கட்டடக் கலை பாணியை இது பின்பற்றுகிறது. இந்தக் கோயில் நுழைவு வளைவுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முக மண்டபத்தின் முன் கருட கம்பம் எனப்படும் உயரமான கல் தூண் உள்ளது. இது சுமார் பதினைந்து அடி உயரம் கொண்டது.
கோயிலுக்கு வெளியே வட்ட வடிவமான பலிபீடம் உள்ளது. முற்றத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. இந்த ஆலயத்தில் நந்திக்கும் விநாயகருக்கும் தனித்தனி கோயில்கள் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயத்தில் உள்ள எண் கோண மண்டபம் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இக்கோயில் கருவறை, அந்தராளம், நவரங்கம், சபா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கருவறையை நோக்கிய முக மண்டபத்தில் நந்தியை காணலாம். சபா மண்டபம் ஐம்பத்திரண்டு தூண்களால் தாங்கப்பட்டு, நான்கு நுழைவு வழிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய உச்சவரம்பு அழகான தொங்கும் தாமரை மொட்டு வடிவில் எண் கோண அமைப்புடன் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு பிரபலமாக ‘ஹங்கலின் தாமரை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஒன்பது மீட்டர் விட்டம் கொண்டது மற்றும் ஒரு பெரிய கல் ஆறு மீட்டர் விட்டம் கொண்டது. இதன் மேற்கூரை அமைப்பு இந்த அமைப்பை எட்டு தூண்கள் தாங்கி நிற்பது போல் வடிவமைத்து இருக்கிறார்கள். அந்த எட்டு தூண்களுக்கு அடுத்தபடியாக எண் திசை காவலர்களான அஷ்டதிக்கு பாலகர்களைக் குறிக்கும் வகையில் மேலும் எட்டு கல் தூண்கள் அமைந்திருக்கின்றன.
நவ ரங்கத்தில் முதலில் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பக்கங்களின் நுழைவாயில்கள் இருந்தன. வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் உள்ள நுழைவு வாயில்கள் சன்னிதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இது நான்கு நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.
விநாயகர், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரின் சிற்பங்களுடன் கூடிய மகர தோரணம் உள்ளது. கருவறையை நோக்கியிருக்கும் அந்தராளத்தின் நடுவில் நந்தியை காணலாம். ஒரு சிவலிங்கம் மற்றும் பார்வதியின் சிற்பம் அந்தராளத்தில் காணப்படுகிறது. கருவறையில் தாரகேஸ்வரர் பனி பீடத்தில் சிவலிங்க வடிவில் இருக்கிறார். சிறப்பான கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இந்த தாரகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.