
கடவுளுக்கு நீரூற்றுவதை அபிஷேகம் என்று கூறுவர் .எந்த ஒரு கடவுளை வழிபடும் போதும் அவர்களுக்கு அபிஷேகம் செய்வது அதாவது நீரூற்றுவது அவசியம் .பொதுவாக சூரிய பகவான் மற்றும் சிவபெருமானுக்கு மட்டுமே நீரூற்ற வேண்டும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது. ஆனால் வாரத்தில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தெய்வங்களுக்கு நீர் ஊற்றுவதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நீரில் சில சிறப்பு பொருட்களை சேர்ப்பதன் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம்.
சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையில் காலையில் சீக்கிரம் எழுந்து செப்பு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் குங்குமம் மற்றும் சிவப்பு மலர் சேர்த்து சூரிய பகவானுக்கு ஊற்ற வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ்வாறு செய்ய நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளும் நீங்கும்.
சிவபெருமானுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அன்று சிவனுக்கு நீர் ஊற்றுவது மிகவும் சிறப்பாகும். இந்த நீரில் கொஞ்சம் அரிசி சேர்த்தால் பணவரவு ஏற்படும் .உடைந்த அரிசியாக இல்லாமல் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபுராணத்தின்படி, சிவபெருமானுக்கு அரிசி சமர்ப்பிப்பவர்கள் மீது லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.
அனுமனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமையில் செப்பு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் கொஞ்சம் குங்குமம் சேர்த்து அனுமனுக்கு அபிஷேகம் செய்யுங்கள். ஏதேனும் காரணத்தால் அனுமனுக்கு நீர் ஊற்ற முடியாவிட்டால், ஆலமரம் அல்லது கதிரமரத்திற்கும் இந்த நீரை ஊற்றலாம். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
முதன்மை வழிபாட்டுக்குரிய விநாயகருக்கு புதன்கிழமைகளில் நீரூற்றுவது சிறப்பு. இந்த புதன்கிழமை விநாயகருக்கான அபிஷேகம் கெட்ட காரியங்களை நல்லபடியாக மாற்றும் தன்மையுடையது .இந்த நீருடன் கொஞ்சம் துர்வாவையும் சேர்த்தால் விநாயகரின் அருள் எப்போதும் நம்மீது இருக்கும்.
வியாழக்கிழமை விஷ்ணு மற்றும் குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களுக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். ஏதேனும் காரணத்தால் இதைச் செய்ய முடியாவிட்டால், அரச மரத்திற்கும் நீர் ஊற்றலாம், அதில் கொஞ்சம் மஞ்சள் சேர்க்கவும்.
லட்சுமி தேவிக்குரிய வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வது சிறப்பு . அருகில் லட்சுமி கோயில் இல்லையென்றால், வீட்டிலேயே துளசி செடிக்கும் நீர் ஊற்றலாம். இந்த நீரில் கொஞ்சம் ரோஜாப்பூக்களையும் சேர்க்கவும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருந்து மகிழ்ச்சி பெருகி பிரச்னைகள் தீரும்.
சனி பகவானுக்கு உரிய நாள் சனிக்கிழமை .இந்த நாளில் சனி பகவானுக்கு நீரால் அபிஷேகம் செய்வது நல்லது. அதில் கொஞ்சம் கருப்பு எள்ளையும் சேர்க்கவும். சனி பகவான் கோயில் அருகில் இல்லையென்றால், வன்னி மரத்திற்கும் இந்த நீரை ஊற்றலாம்.
ஒவ்வொரு நாட்களும் அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது அனைத்து வளங்களுக்கும் வழிவகுக்கும் என்பது ஐதீகம்.