
அவருக்கு ஏராளமான ஆசைகள். பார்க்கிற, கேட்கிற, வாசித்து அறிய நேர்கிற எல்லாவற்றின் மீதும் ஆசைப்பட்டார். வரையறைகள் எதுவும் இல்லை. அல்ப ஆசைகள் முதல், அகிலத்தையே ஆள வேண்டும் என்பது வரை, ஆயிரக் கணக்கான ஆசைகள்.
ஒரு ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும்போதே இன்னொன்றின் மீது ஆசை வந்துவிடும். அதிலிருந்து இன்னொன்று, இன்னும் பலது என, ஆசைகள் கிளை விரித்துக்கொண்டே இருந்தன. பல்லாயிரக் கணக்கான ஆசைகள். கணந்தோறும் ஆசைகள் பெருகிக்கொண்டே இருந்ததால், அதில் எதையும் அவரால் அடைய இயலாமல் போனது.
பெருத்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார். மனம் நிராசைகளால் அடைந்து கிடந்தது. அதைத் தாண்டி எதையும் சிந்திக்கவோ, செயல்படவோ இயலவில்லை. மிகுந்த உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் ஆளாகி, மனச் சிதைவு ஏற்படும் அளவுக்கு துன்பப்பட்டார். அதனால் உடலும் பாதிக்கப்பட்டு நலிந்தது.
இறுதியில் நிம்மதி தேடி ஆன்மிக வழிக்கு சென்றார். யோகம், தியானம், ஞானத் தேடல், சேவை, இன்ன பிற ஆன்மிகப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அதன் விளைவாக ஆசைகள் படிப்படியாக விலகி, இறுதியில் ஆசை என்பதே இல்லாத பரிபூரணத் துறவியாக ஆகிவிட்டார்.
அப்போது அவரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவருக்கு ஏராளமான பொன்னும் பொருளும், நில புலன்களும் வழங்கினர்.
"என்ன உலகமடா இது! விசித்திரமான மனிதர்களாக இருக்கிறார்களே... நான் ஆசைப்பட்டு 50 ரூபாய், 100 ரூபாய் கேட்டபோது ஒருவரும் தரவில்லை! எதுவும் வேண்டாம் என்று துறவியாகி அமர்ந்திருக்கிறபோது லட்சக்கணக்கான ரூபாய்களையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம், வைரம், நிலம் மற்றும் பிற சொத்துகளையும் கொண்டுவந்து காலடியில் கொட்டுகிறார்களே!" தனக்குள் சிரித்துக்கொண்டார்.
அந்தக் காணிக்கைகளை வைத்து அவர் ஆசிரமம் தொடங்கி, ஆன்மிகப் பணியிலும், மக்கள் சேவையிலும் ஈடுபட்டார். ஆசிரமம் விரிந்து, நாடு முழுவதும், பின்பு உலகம் முழுவதும் கிளைகள் விரிந்தன. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது.
ஒரு நாள் கடவுள் அவர் முன்பு தோன்றி, "உனது பணிகளை மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ கேள்!" என்றார்.
துறவி புன்னகைத்தார்.
"நீயும் மனிதர்களைப் போலவே இருக்கிறாயே! முன்பு எனக்கு ஆயிரக்கணக்கான ஆசைகள் இருந்தன. அந்த ஆசைகளில் ஒன்று கூட நிறைவேறவில்லை. அப்போது நான் உன்னிடம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டிருக்கிறேன். நீ அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இப்போது எனது ஆசைகள் அனைத்தையும் துறந்து, நிர்மலனாக இருக்கிறேன். இப்போது வந்து, எது வேண்டுமோ கேள் என்கிறாயே!?"
கடவுள் சொன்னார்:
"முன்பு உன்னிடம் இருந்த ஆசைகள் யாவும் தேவையற்றவை. மேலும் நீ அவற்றை அடைய உரியபடி செயல்படவும் இல்லை. அதனால்தான் அவை உனக்கு நிறைவேறவில்லை. அதனால் உனது நிம்மதியும் இழக்கப்பட்டது. இப்போதோ, நீ ஆசைகள் அற்றவனாக இருக்கிறாய். அதனால்தான், மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தர்கள், உன் மூலமாக அதை நிறைவேற்றிக்கொள்ள, உனக்குக் காணிக்கைகள் வழங்குகின்றனர். நானும் அதற்காகவே உனக்கு வரம் தர விரும்புகிறேன்."
"எனக்கு இப்போது எதுவும் வேண்டியது இல்லை."
"நீ விரும்பினால், முன்பு நீ ஆசைப்பட்டது போல, இந்த உலகத்தையே உனக்கு சொந்தமாக்குகிறேன்..." ஆசை காட்டிப் பார்த்தார் கடவுள்.
துறவி புன்னகைத்தார். "ப்ரபஞ்சம் முழுவதுமே இப்போது எனக்கு சொந்தமாகத்தானே இருக்கிறது!”