

எனக்குள் ஒருவனாக இருந்து, வங்கியில் 36 வருடங்கள் சேவை செய்து இப்போது ஒய்வு பெற்று 4 வருடங்கள் ஆகின்றன. மகள் கல்யாணத்திற்கு மனனவி அழகாபுத்தூர் சென்று வர கேட்டுக் கொண்டார்.
பி.எஃப்., கிராஜூவிட்டி மற்றும் PL பண வசதி (Privilege Leave) மூலம் வந்த தொகையில் வட்டியாக ரூ.25000 வருகிறது.
தேவைகளை பூர்த்தி செய்து, விருப்பங்களுக்கு அப்பால் வாழ பழகிவிட்டோம். அழகாபுத்தூர் செல்ல இரு சக்கர வாகனம் வீட்டில் உண்டு. குறைந்தது 1/2 மணி நேரத்திற்குள் கோவிலுக்கு சென்று வர முடியும்.
குடந்தையில் இருந்து 7 கி.மி தூரத்தில் அமைந்த படிகாசு நாதர் கோயில் சொர்ணபுரீசுவரை வணங்கி, பிறகு தாயார் பாதம் (அழகாம்பிகை) தொட்டு பிரார்தனை செய்து கடைசியாக முருகப்பெருமானை (சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பவர்) தரிசித்து வந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
நான் என் உள் உணர்வுக்கு அடி பணிவேன். அதில் பெரும் நம்பிக்கையும் உண்டு.
காரணம், நான் தற்பொழுது நிகழ்கால நிஜங்களை தரிசித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் கிடைக்கும் அனுபவம் என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன்.
இந்த 'உள் உணர்வு' என்னை நானே பரிசோதனை செய்து கொள்வதில் தொடங்கி, தற்சமயம் அந்த உணர்வே இல்லாமல் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அதாவது என் நிகழ்வுகளை ஆராய்வதைவிட அதை பார்வையாளனாக இருந்து கடந்து செல்ல விளைகிறேன். அந்த விதத்தில் என் செயல்கள் சற்று முன்முனைப்போடு செயல்படுவதாக உணர்கிறேன்.
மேலும் என் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் முடிக்க இந்த சுய நினைவு பெரிதும் உதவியாக இருக்கிறது என்றால் அது உண்மையே!
அதே சமயம் எந்த ஒரு செயலும் நடக்க, நடந்து முடிய 'நானே' காரணம் என்று கருதாமல் அது - சுய நினைவு; என்னை ஆட்கொண்டு, சிறிது காலம் இயங்கி பின் என்னை விட்டுப் பிரிவதாக எண்ணுகிறேன்.
என் குருவின் வாக்கியம் இப்போது நினைவுக்கு வருகிறது.
நீ சில சமயங்களில் பார்வையாளனாக இரு;
கடந்து செல்;
சில சமயங்களில் பங்கேற்பவனாக இரு;
செயல் புரி;
அப்போது தான் உன் அகம் தூய்மை பெரும்.
அவரின் பொன்னான சிந்தனைகள்:-
இங்கே யாவரும் யாசிக்கத் தான் பிறந்து இருக்கிறார்கள்; பிழைப்பு நடத்துகின்றனர்;
அரசியல்வாதி வாக்குகளை யாசிக்கிறான்;
ஆசிரியர் அறிவை யாசித்து அருளுகிறார்;
தொழில் நடத்துவோர் நுகர்வோரை யாசிக்கின்றனர்;
தொழிலாளி இறைவனை யாசிக்கிறான்.
காலம் என்கிற சக்கரம் எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
அதுவே உண்மை!!! அதுவே எல்லாம்!!!
சுனாமிக்கு ஏழை, பணக்காரன் என்கிற பேதம் இல்லை. நில பூகம்பத்திற்கு ஏழை, பணக்கார நாடு என்கிற வேற்றுமை இல்லை.
வளமுடன் வாழ்வோம். அன்பு, இறக்கம், ஆதரவு ஆகிய பண்புகள் நம்மை ஆட்கொள்ள அந்த பரம்பொருளை நாடுவோம்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.’
மேலே கூறிய அநுபூதி எனக்கு Mini Bus-ல் பிரக்ஞையுடன் பிரயாணப்பட்டதால் கிடைத்தது.
காலை 10 மணிக்கு தாராசுரம் வீட்டுல் இருந்து புறப்பட்டு குடந்தை பஸ் நிலையம் 10.20 அடைந்தேன்.
10.40- க்கு அழகாபுத்தூர் (Mini Bus) புறப்பட்டது. சாக்கோட்டை தாண்டி சிவபுரம் வழியாக அழகாபுத்தூர்.
நடவே 5 அழகான கிராமங்கள். அவர்களுக்காக இந்த வண்டி தினமும் செல்கிறது.
ஒரு புறம் அரசலாறு; மறுபுறம் வயல், வாய்க்கால், நெல், சாகுபடி என விவசாயம்.
நான் பார்பது வெறும் பார்வைகளே !!!
என் பார்வைக்கு உயிர் கொடுக்கும் ஒவியங்கள் - பஸ், ஓட்டுநர், விவசாயம், விவசாயி. திடீரென்று பஸ் சிவபுரம் தாண்டி நின்றது. ஊர் கூடி தேர் இழுப்பது போல, கிராமமே வந்தது. நாங்களும்தான்!
அந்த பங்கேற்பில் எல்லோருக்கும் மகிழ்ச்சி; பஸ் இனிதே நகர்ந்தது.
பேருந்து ஒட்டுநர் அந்தப் பகுதிகாரரே! நடத்துனரும் ஓட்டுனரும் அந்தப் பகுதி மக்களின் அன்பையும், மரியாதையும் அதிகம் சம்பாதித்து வைத்து இருக்கின்றனர்.
அழகாபுத்தூர் கோயில் பூசாரி எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல், இருப்பதைக் கொண்டு இறைவனை பூஜித்து, பக்தர்களை மகிழ்விக்கிறார்.
இங்கே எல்லா நேரமும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது.
ஆம்! இறைவன் திருவடியில் எல்லோரும் குழந்தைகளே !!!
பேதமை இல்லை; எந்த பேதமும் இல்லவே இல்லை.