

1. முருங்கைக் காய் சாம்பார்!
வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காய்கள். வெள்ளியங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம் வைத்த கண் வாங்காமல் முருங்கை மரத்தை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்திருக்கிறான் வீட்டு பரமசிவம்.
‘கண்ணுல தீய வெக்க..!’ மனசுக்குள் கறுவியிருக்கிறான். எனக்குக் கடவுள் கொடுத்த சொத்து..! உன் வீட்டில மொளைக்கலைனா அதுக்கு யாரு என்ன பண்ணுவா?! எல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்! தன்னைப் பற்றியே தானே பெருமை பட்டுக் கொண்டான்.
மாடியில் குடியிருக்கும் மைதிலி கீழிறங்கி வந்தாள். வாடகை சொளையாய் மாசமானா அவிழ்ப்பவள். அவள் மரத்தைப் பார்ப்பது பரம சிவத்துக்குப் பெருசாய்ப் படவில்லை! காசு கண்ணை மறைச்சுடும் தானே!?
மைதிலிதான் வச்ச கண்ணு வாங்காம பார்க்க, பரம சிவன் கேட்டான் 'என்ன முருங்கையை அப்படி பார்க்கிறே…மைதிலி?!"
"ஒண்ணுமில்லை… சாம்பார்ல போட்டா நல்லா இருக்குமே?!" அதுக்குத்தான்.
"அதுக்கென்ன ரெண்டைப் பறிச்சுக்கோ." என்றான் பணத்துக்கு பதில் செய்யும் நினைப்பில்!!.
"பறிச்சும் முடியாது!" என்றாள் மைதிலி!
"ஏன்"
"அதுக்கு கை ராசி வேணும்!" என்றாள் வறட்சியாய்.
"என்ன சாம்பார் சுவைக்கா?" கேட்டான் பரமசிவன்.
"ஆமாம்.. பச்சைப் பாம்பு வாலை இழுத்து உறுவிவிட்டா.. சாம்பார் சுவை கூடுமாம்! ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்" என்றாள் மைதிலி.
"சரி, உறுவித்தான் பாரேன்" சொல்லிவிட்டு உள்ளே போனான்.
இப்படியெல்லாமா ஒரு நம்பிக்கை?!
அவன் குளிக்கப் போனான்.
கொத்தாய் தணிந்து காய்த்துத் தொங்கி இருந்த முருங்கைக் காயை யாருக்கும் தெரியாம பறிக்க இழுத்தாள் மைதிலி. காயோடு காயாய் தொங்கிய நிஜ பச்சைப் பாம்பொன்று கொத்தோடு கைக்கு வந்தது!.
பறிச்ச வேகத்தில் உதற, பச்சைப் பாம்பு வாலு வழுவழுக்கப் பதறிப் போய் "அய்யோ.. அய்யோ.." அலறி கீழே போட்டு ஓடினாள் மாடிக்கு!.
மைதிலி பச்சைப் பாம்பை உருவியதாலோ பயத்தில் அலறியதாலோ பத்து வீட்டுக்கு மணந்தது அன்று அவள் வைத்த திருட்டு முருங்கைக் காய் சாம்பார்!
2. ‘கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!’
அன்று வார விடுமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான் மெமூ ரயில்களிலும், வந்தே பாரத் ரயில்களிலும் பயணம் செய்திருந்தாலும் மால்களில் சுற்றிப் பார்க்க உதவும் ‘டாய் ரயிலில்’ குட்டிகளை அமர வைத்து கூட, பயணிக்கும் சுகம் தனிதான்!.
அடுகடுக்காய் மாடிகள் இருந்த மாலில் ஏறி இறங்கப் படி இருந்தாலும் பதட்டத்தோடு பயணித்தாலும் பக்காவாய் சுகம் கொடுக்கிற ‘எஸ்கலேட்டரில்’ பயணிப்பது பயம் கலந்த சுகத்தைத் தராமலில்லை!.
அருகருகே இரு எஸ்கலேட்டர்கள் இருந்தன! ஒன்று மேலே ஏற; அடுத்து அருகிலேயே இருந்தது கீழே இறங்க!
எல்லோரும் ஒன்றை உதாசீனப்படுத்தி, ஒன்றை மட்டுமே உபயோகப்படுத்தினார்கள். ஏற உபயோகப்படுத்தும் எஸ்கலேட்டரைப் போல் இறங்ககும் எஸ்கலேட்டர் அதிகமாய் யாராலும் பயன்படுத்தப் படவில்லை! ஏன்?
ஏறுவது சிரமம். மூச்சு வாங்கும் என்பதால்தான்! ஏறும் எஸ்கலேட்டர்கள் எல்லாராலும் பயன்படுத்தப்படுகின்றனவா? ஏறும் அளவு இறங்குவது சிரமமில்லை என்று இறங்கும் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லையா?!
ஒலித்த ஏணிப்படிகள் பாட்டு ஒன்றை உறுதி செய்தது.
வாழ்க்கையில் யாராவது ஒருவர் எஸ்கலேட்டராய் துணையிருந்தால்தான் மேலே போவது… உயர்வது எளிது!. அதேசமயம் கீழே இறங்க, இறங்க என்ன? வாழ்க்கையில் விழ.. யாரும் தேவையில்லை! நாமே நம் வீழ்ச்சியை அமைத்துக் கொள்ளகிறோம் என்பதுதானே உண்மை?
‘கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம். அன்புமிக்க ஒரு மனம். நல்லவர்க்கு ஒரு குணம்!'
நல்லவர்கள் வல்லவர்களாய் வளர, அன்புமிக்கவர் குணத்தை ஆதரவாய்ப் பற்றிக் கொள்கிறார்கள். வீழக்கூடியவர்களோ.. தங்கள் மமதை என்ற குணத்தால் தாமே வீழ்ந்து போகிறார்கள்!!.
என்ன ஒன்று, இரு எஸ்கலேட்டர்களிலும் இரண்டும் நிகழ்த்தத் தாங்கள் தயார் என்பதை பச்சை விளக்காலே பறை சாற்றுகின்றன. எதை ஏற்கிறோம் என்பது இறைவன் தீர்ப்பைப் பொறுத்தது!