பஜகோவிந்தம் பாடலில் ஏன் 'கோவிந்தா' என்று 3 முறை சொல்ல வேண்டும்? இதோ காரணம்!

Adhi sankarar
Adhi sankararcredit AI Image
Updated on
Deepam strip
Deepam strip

ஸ்ரீ ஆதிசங்கரர் பெருமானார், எட்டாம் நூற்றாண்டில் இன்றைய கேரளத்திலுள்ள காலடி என்னும் ஊரில், ஆர்யாம்பாள் - சிவகுரு தம்பதிக்கு மகனாய் அவதரித்தார். இளம் பிராயத்திலேயே கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று, 'சங்கர பகவத்பாதர்' என்று அழைக்கப்பட்டார். அத்வைத தத்துவத்தை உலகிற்குத் தெளிவுபடுத்தியவர் இவரே.

பாரத தேசம் முழுவதும் கால்நடையாகவே மூன்று முறை விஜய யாத்திரை மேற்கொண்டு, நாட்டின் நான்கு திசைகளிலும் மடங்களை ஸ்தாபித்தார். அதன் பின், ஸ்ரீ ஆதிசங்கரர் காஞ்சி மாநகரம் வந்து 'சர்வஞான பீடம்' ஏறியமர்ந்தார். ஸ்ரீ சக்கர வழிபாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்து, அந்தப் பூஜா முறைகளைக் கற்பித்தார். இன்று நாம் கொண்டாடும் பல பண்டிகை வழிபாட்டு முறைகள் அவர் வகுத்துக் கொடுத்தவையே.

தன்னுடைய 32-ஆவது வயதில் சித்தியடைந்த இவர், எண்ணற்ற ஸ்லோகங்களை எழுதியுள்ளார். சிறு வயதில் பிக்ஷை யாசிக்கச் சென்றபோது, ஒரு ஏழைப் பெண்மணி ஒரு நெல்லிக்கனியை மட்டும் அளிக்க, அந்தப் பெண்மணியின் வறுமை தீர மஹாலட்சுமியை வேண்டி அவர் பாடிய 'கனகதாரா ஸ்தோத்திரம்' பொன்மாரி பெய்ய வைத்தது. இது உலகறிந்த அற்புதமாகும்.

தன்னுடைய விஜய யாத்திரையின் போது பல்வேறு திருத்தலங்களில் பல ஸ்தோத்திரங்களை இயற்றினார்:

  • வைத்தீஸ்வரன் கோவில்: வைத்யநாத அஷ்டகம்

  • மதுரை மீனாட்சியம்மன்: மீனாட்சி பஞ்சரத்தினம்

  • ஸ்ரீரங்கம்: ரங்கநாத அஷ்டகம்

  • குருவாயூர்: கோவிந்தாஷ்டகம்

  • காசி: அன்னபூர்ணா ஸ்தோத்திரம் & காலபைரவாஷ்டகம்

தீராத வயிற்றுவலியில் அவதிப்பட்டபோது, திருச்செந்தூர் சென்று முருகப் பெருமான் மீது 'சுப்ரமண்ய புஜங்கம்' பாட, அவரது வலி குணமாயிற்று. இவை தவிர கணேச பஞ்சரத்தினம், சௌந்தர்ய லஹரி, மதுராஷ்டகம், சிவானந்த லஹரி, பஜகோவிந்தம் ஆகியவையும் முக்கியமானவை.

இவருடைய ஸ்லோகங்களின் சிறப்பு என்னவென்றால், அவற்றின் சந்தங்கள் இசையமைத்துப் பாட ஏற்றதாக இருப்பதே ஆகும். ஆதிசங்கரரின் ஸ்லோகம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 'பஜகோவிந்தம்'. இசையரசி திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் காந்தர்வக் குரலில் ஒலிக்காத இல்லமே இல்லை எனும் அளவுக்கு இது பிரபலம்.

இதையும் படியுங்கள்:
​ஏப்ரல் 19 - அட்சய திருதியை: வற்றாத வளத்தின் திருவிழா!
Adhi sankarar

வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்தனை நெறிமுறைகளையும், மெய்ஞ்ஞானத்திற்கான வழிகாட்டுதலையும் இதில் சங்கரர் வழங்கியுள்ளார்.

"பஜகோவிந்தம், பஜகோவிந்தம், கோவிந்தம் பஜ மூடமதே!"

இந்த முதல் ஸ்லோகத்தில் ஏன் மூன்று முறை 'கோவிந்தா' என்று துதிக்க வேண்டும்? துதிப்பது என்பது வெறும் நாவோடு நின்றுவிடக் கூடாது; அது சிந்தையிலும் செயலிலும் ஊடுருவ வேண்டும் என்பதாலேயே மூன்று முறை சொல்லப்பட்டுள்ளது.

'மூட' என்றால் அறிவில்லாதவன் என்று பொருளல்ல; 'அறிவு மூடியிருக்கும் நிலை' என்று ஆதிசங்கரர் விளக்குகிறார். ஆன்மீக ஆர்வம் தோன்றி, அறிவு திறக்கப்பட வேண்டும் என்பதற்காகவே 'நாமஸ்மரணை' செய்யச் சொல்கிறார்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்து அமாவாசைக்குப் பின் வரும் சுக்கிலபட்ச வளர்பிறை பஞ்சமியன்று அவருடைய ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் (2026), ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி திருநாளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com