

இன்னும் கொஞ்சகாலம் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தால் போதும். ஜெயித்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். திருப்பதி மலை ஏறிவிட்டுக் கடை…சியில் முழங்கால் முறிச்சான் என்ற உயரப்படிகள் ஏறும்போது யாரேனும் அலுத்துக்கொள்வார்களா? இந்த ஆண்டு கஷ்டங்கள் விடிந்துவிடும். படிப்படியாக நிலைமை சரியாவதைக் கண்கூடாகக் காண்பீர்கள். சந்தோஷம்தானே?
அலுவலகத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் பிம்பத்தைப் பாதிக்கக்கூடும். வணிகர்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவது பற்றி பரிசீலிக்கலாம். ஆனாலும் உங்களின் வழக்கமான ஜாக்கிரதைத் தன்மையுடன், வழக்கமான நபர்களின் அட்வைஸ்களுடன் துவங்குவது நல்லது. ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நண்பர் அல்லது சகோதரருடன் நிதி விஷயங்களைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல யோசனை கிடைக்கும்.
வியாபாரிகள் - வாடிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் குழு சந்திப்புகளின் போது சிறப்பு கவனம் செலுத்துங்கள். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பெண்களுக்குப் பணிச்சமை குறையும். எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கவேண்டும் என்று பல காலமாகத் திட்டமிட்டு.. அது நடக்காமல் போய்க்கொண்டே இருந்திருக்கும். இந்த ஆண்டு டக்கென்று ஒரே நிமிடத்தில் அவை நிறைவேறும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமிதமும் என்னோற்றான் கொல் என்ற பாராட்டும் தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அக்கம்பக்கத்தினர் புகழும்படியான செயல்கள் செய்வீர்கள். கடந்த ஆண்டுகளைவிட தெய்வபக்தியும் பயபக்தியும் அதிகரிக்கும்.
முன்னைப்போல் இல்லாமல் பொறுமையும் பொறுப்பும் அதிகரித்து, எடுத்த செயலை வெற்றிகரமாகவும் முழுமையாகவும் முடிப்பீர்கள். கடந்த ஆண்டுகளைவிடப் பணப்புழக்கம் அதிகரிக்கும். மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த வளம் இப்போது தெரியும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். குறிப்பாக சுப நிகழ்ச்சி ஒன்றின்போது சண்டை ஏற்பட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உங்களைவிட்டு விலகிய ஒருவர் மற்றொரு விழாவில் சந்தித்து, இணைவார்கள். நேரடியாக மன்னிப்புக் கேட்க மாட்டார்கள். வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் அதை நிரூபித்துவிடும்.
படைப்பாற்றல் துறைகளில் உள்ளவர்கள் இந்த ஆண்டு பயனடைய வாய்ப்புள்ளது. வேலையில் தொடர்ந்து கவனத்துடன் பணியாற்றுங்கள். அப்படிச் செய்துவீட்டீர்களானால், வேலையில் உங்கள் செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் உங்களின் பெரிய செயல் ஒன்றிற்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.
இந்த வருடம் செலவுகள் ஏற்படும். ஆனாலும் செலவுகள் எல்லாம் ஒரு வகையில் முதலீடுகள் போல்தான் ஆகும். அதாவது இப்போது செய்யும் செலவுகள் பிற்காலத்தில் பல மடங்காக உயர்ந்து பலனளிக்கும். உதாரணத்துக்கு வீடு கட்டுவீர்கள். மகன் அல்லது மகளைப் படிக்க வைப்பீர்கள். ஆக, செலவு ஏதும் விரயம் ஆகாது.
சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். அல்லது உங்களின் குழந்தைகளுக்குக் குழந்தை பிறக்கும்.வருடத்தின் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆண்டின் பிற்பகுதியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு உடனே நீங்கும். சிலருக்குப் வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். முன்பிருந்த வாகனத்தைவிடவும் சிறந்த மாடல் அல்லது மேக் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் செய்யவிருக்கும் செயல் ஒன்றிற்குக் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஒத்துழைப்புத் தருவார்கள்.
குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. வாகனத்தில் பழுது ஏற்பட்டு நீங்கும். அதற்காக வேண்டி ஆண்டின் மத்தியில் செலவுகள் செய்ய வேண்டி வரலாம் என்றாலும் பெரிய செலவாக இருக்காது. எனினும் இப்போதிலிருந்தே அதற்காக ஒரு தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிக்கொண்டே வந்தீர்களானால் பெரிய சுமையாக இருக்காது.
எதிரிகளால் முன்பு ஏற்பட்ட பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் வருடத்தின் பிற்பகுதியில் நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. ஆனால் அதற்காக நீங்கள் கடும் முயற்சிகளும் உழைப்பும் மேற்கொண்டீர்கள்தானே? உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், வியாபாரிகள் மறைமுகமாகவே நேரடியாகவோ பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும் அல்லது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதுவாயினும் இறுதிச் சுற்று உங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
மொத்தத்தில் பொறுமையுடன் சமாளித்துப் படிப்படியாக வெற்றிகாண்பீர்கள்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here