
ஆன்மிக வரலாற்றிலும், பக்தர்கள் வாழ்க்கையிலும் காளி தேவிக்குச் சிறப்பானதோர் இடம் உண்டு. அவள் எங்கும் இருப்பவள், எளியோர் பிழை பொறுப்பவள், தீமையை வெறுப்பவள், தீயோரை ஒறுப்பவள். அந்த அன்னை, வெட்டுடைய காளி என்ற பெயரில் வீற்றிருக்கும் அற்புதத் தலம் தான் அரியாக்குறிச்சி!
அரியாக்குறிச்சியில் ஐயனார் ஆலயம் ஒன்று பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. ஐயனாரை வழிபட்டு வந்த காரிவேளார் என்பவர், கேரள மாந்திரீகம் பயின்றவர். ஐயனார் சந்நிதிக்கு முன்னால் மண்ணில் சில மந்திர எழுத்துகள் எழுதப்பட்டு, அழியாமல் இருப்பதைக் கண்டார். அவ்வெழுத்துகள் காளிக்கு உரியவை என்பதைக் கண்டுணர்ந்து அந்த இடத்தில் அன்னை காளியை நிர்மாணித்தார்.
ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதால் ஐயனாருக்கு 'வெட்டுடைய ஐயனார்' என்று பெயர். இவரருகே வீற்றிருப்பதால், அன்னையும் 'வெட்டுடைய காளி' யானாள்.
இது ஓர் எளிமையான கிராமக் கோயில். இரு சிறு கோபுரங்களும், ஓடு வேய்ந்த பிராகாரமுமாய் திகழ்கிறது. உள்ளே, சிறு கருவறையில் காவல் தெய்வம் வெட்டுடைய ஐயனார் காட்சி தருகிறார். ஐயனாருக்கு வலது பக்கம், மண்டபத்துக் கருவறையில் அன்னை வெட்டுடைய காளி எழுந்தருளியிருக்கிறாள்.
எலுமிச்சை பழங்களாலும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அன்னை செவ்வாடை தரித்து அழகிய இளம் பெண்ணாக எண் கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். இடது காலைத் தொங்கவிட்டு, வலது காலை உயர்த்தி ஆசனத்தில் அப்பாதம் படிய அமர்ந்திருக்கிறாள். வலது கரங்கள் ஒன்றில் திரிசூலத்தையும், இடது கரங்கள் ஒன்றில் அமுத கலசத்தையும் ஏந்தியிருக்கிறாள். மற்ற கரங்களில் ஜபமாலை, பதுமம் மற்றும் ஆயுதங்களை ஏந்தி, வெளியே நீண்ட நாக்குடனும், ஆனால் வசீகர வதனத்துடனும் காட்சி நல்குகிறாள்.
சின்னம்மை, சொறி, சிரங்கு முதலான சரும நோய்களை குணப்படுத்துபவள் இந்த அன்னை. உடல்நலம் வேண்டி, மனித உடலின் பல்வேறு உறுப்புகளை தங்கம், வெள்ளி போன்ற உலோக பிரதிமைகளாக அன்னைக்கு பக்தர்கள் சமர்ப்பிக்கிறார்கள்.
இழப்புகளை மீட்டுத் தந்து தம் பக்தர்களைக் காத்தருள்பவள் இந்த அம்மன். மதிப்பு வாய்ந்த பொருள் ஏதேனும் வீட்டிலோ அல்லது வெளியேயோ திருடு போய்விட்டதென்றால், அதை இந்த அன்னையிடம் முறையிட்டால், அந்தப் பொருள் மீண்டும் தம்மை வந்து அடைந்து விடுகிறது என்பது பலரின் வியப்பான அனுபவம்! அதேபோல தம்மிடமிருந்து கடனாக வாங்கிப்போய், திருப்பிக் கொடுக்காமல் தம்மை ஏமாற்ற நினைப்பவரிடமிருந்து அதையும் மீட்டுத் தரும் அருள் உள்ளம் கொண்டவள் இந்த காளி.
பிரார்த்தனையாக கேழ்வரகு, தினை அல்லது ஏதேனும் தானியம் எடுத்துச் சென்று அன்னைக்குப் படைக்கிறார்கள். கூடவே எலுமிச்சம்பழ மாலையையும் காளிக்கு சாத்துகிறார்கள். பிறகு, அன்னையின் சந்நிதிக்கு அருகில் அமைந்திருக்கும் பலிபீடத்தில் திருட்டுப் போன தங்களுடைய பொருளையோ அல்லது வராக் கடன் தொகையையோ மீட்டுத் தரும்படி வேண்டிக் கொண்டு, நாணயம் ஒன்றை வெட்டிப் போடுகிறார்கள். இதற்கென்றே அங்கே உளி அல்லது சிறு கோடாரி மாதிரியான கருவி உள்ளது. கூடவே, தம் கோரிக்கை உண்மை தான் என்றும்,
அது பொய்யாக இருக்குமானால் தமக்கே தண்டனை வழங்கலாம் என்னும்படியாக, பலி பீடத்தில் தம் தலையைப் படிய வைத்து வேண்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். அதாவது காளி பாரபட்சமற்றவள், எப்போதுமே நியாயத்தின் பக்கமே நிற்பவள் என்ற தெய்வநீதியை உணர்ந்து கொள்ளவே இந்த நடைமுறை!
காளி அருளால், திருட்டுப் போன பொருள் திரும்பக் கிடைப்பதோ, கடன் தொகை திரும்பக் கிடைப்பதோ நிகழுமானால், மீண்டும் இந்தக் கோவிலுக்கு வந்து எலுமிச்சம்பழ மாலை, அல்லது சிவப்பு வண்ண புடவையை சாத்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட கிழமை என்றில்லாமல், வாரத்தின் எல்லா நாளிலும் இவ்வாறு பிரார்த்தனையை மேற்கொள்ளலாம்.
வெட்டுடைய காளியை தரிசியுங்கள். அவளது அருள் மழையில் நனைந்து திரும்புங்கள். சிவகங்கையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும், அமைந்திருக்கிறது அரியாக்குறிச்சி வெட்டுடைய காளி கோவில்.