
பீனியல் சுரப்பி (Pineal Gland) என்பது மூளையில் உள்ள ஒரு சிறிய நாளமில்லா சுரப்பி ஆகும். இது மூளையின் மையப் பகுதியில், கார்பஸ் காலோசத்தின் பின்னால் அமைந்துள்ளது. இந்த சுரப்பி மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதிலும், உடல் கடிகாரத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி (pineal gland) முதுகுநாணிகளின் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையேயும் மூளையின் நடுப்பகுதியிலும் காணப்படும் ஓர் அரிசியின் அளவே உள்ள சிறிய சுரப்பி ஆகும்.
மனித மூளையின் நடுவில், இரண்டு பெருமூளை அரைக்கோளங்களின் சந்திப்பில், பீனியல் சுரப்பி அமைந்து உள்ளது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல்/பீனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது. சிறிய பட்டாணி அளவில் இருக்கும் இந்த நாளமில்லா சுரப்பி மெலடோனின் என்ற முக்கியமான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த பீனியல் சுரப்பி மனித உடலில் மர்மமான ஒரு சுரப்பியாக கருதப்படுகிறது.
இது ஐந்து முதல் எட்டு மில்லி மீட்டர் அளவே உள்ளது. சில கலாச்சாரங்களில், பீனியல் சுரப்பி 'மூன்றாம் கண்' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆன்மீக திறமைகளை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. பிரெஞ்சு தத்துவஞானி ரெனேடெஸ்கார்ட்ஸ் என்பவர், இதனை ஆன்மா என்கிறார்.
பீனியல் சுரப்பி சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் ஒரு இயற்கையான தூக்க ஹார்மோனாக கருதப்படுகிறது. ஒளி குறைந்த நேரங்களில் மெலட்டோனின் சுரப்பு தொடங்குகிறது. இருட்டில், இது அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு மனிதனை விரைவாக தூங்க வைக்கிறது. மனிதனுக்கு திசைகாட்டியாக மெலட்டோனின் ஹார்மோனை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மெலடோனின் சுரப்பால் தூக்க-எழும்பல் சுழற்சி (sleep-wake cycle) ஒழுங்குபடுத்தப்படுகிறது. இது சர்கேடியன் தாளங்கள் (circadian rhythms) எனப்படும் உடல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த சுரப்பின் செயல்பாட்டினை நிறுத்தினால் தூக்கம் கெடுவதுடன் பல திடுக்கிடும் உடல்நலக் குறைவுகளும் ஏற்படும்.
பீனியல் சுரப்பியில் பாதிப்பு ஏற்படும்போது ஒருவருக்கு ஏற்கனவே சென்று வந்த பாதையை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும். இது மட்டுமின்றி, மெலட்டோனின் உற்பத்தி குறையும்போது, தூக்கமின்மை, அசாதாரண தைராய்டு செயல்பாடு, பதற்றம், குடலின் இயக்கம் சீர்குலைவு மற்றும் பெண்களிடத்தில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம்.
அதேபோல், மெலடோனின் சுரப்பு ஒரு குறிப்பிட்ட வரம்பை விட அதிகரித்தால், குறைந்த ரத்த அழுத்தம், மனக்குழப்பம், பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உடலில் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
ஒரு மனிதனுக்கு பீனியல் சுரப்பி பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இரவில் அதிக நேரம் செயற்கை ஒளியில் விழித்திருப்பது மெலடோனின் உற்பத்தியை பாதிக்கும். மேலும், மின்னணு சாதனங்களால் வெளிப்படும் மின்காந்த அலைகளும் இந்த சுரப்பியின் சரியான செயல்பாட்டை பாதிக்கும். ஒழுங்கற்ற தூக்க நேரம், போதுமான தூக்கம் இல்லாதது, மன அழுத்தம், பதற்றம், அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆகியவை பீனியல் சுரப்பியை எதிர்மறையாக பாதிக்கும். தீராத தலைவலி, மங்கலான பார்வை, தூக்கமின்மை போன்றவை பீனியல் சுரப்பி பாதிப்பு அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பீனியல் சுரப்பியின் முக்கியத்துவம், தூக்கத்தை ஒழுங்குபடுத்துதல், மனநலக் கோளாறுகளுக்கு இடையேயான தொடர்பு, ஆன்மீக நம்பிக்கை போன்ற பல்வேறு அம்சங்களால், அது சமூகத்தில் கவனிக்கப்படுகிறது. பீனியல் சுரப்பி மற்றும் மனநலக் கோளாறுகளுக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது, என்று ScienceDirect.com கூறுகிறது.