
அருணகிரிநாதர் 16000 திருப்புகழ் பாடல்கள் அருளியதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவற்றில் கிடைத்திருப்பது 1330 பாடல்கள். இந்த 1330 பாடல்களில், 1088க்கு மேற்பட்ட சந்த வேறுபாடுகள் காணக் கிடைக்கின்றன. பாடல்கள் விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது. 8 வரிகள், 12 வரிகள், 16 வரிகள் என்று 24 வரி விருத்தங்களும் உள்ளன. சந்தச் சிறப்பினால், அதற்கேற்ப ராகங்கள் அமைத்துப் பாடுவது எளிதாகிறது. செவிக்கும், சிந்தைக்கும் நல் விருந்து வழங்கக் கூடியவை திருப்புகழ் பாடல்கள்.
திருப்பகழ் பாடல் பெற்ற தலங்கள் 215. வைப்புத் தலங்கள் 24.
திருப்புகழில், தலங்களின் பெயர் வருவது பாடல் பெற்றத் தலங்கள். இவை, அருணகிரிநாதர் அந்தக் கோவில்களுக்குச் சென்று, இறைவனை தரிசித்துப் பாடிய பாடல்கள். இதைத் தவிர அந்தத் தலங்களுக்குச் செல்லாமல், திருப்புகழ் பொதுப் பாடலில் குறிப்பிடப்படுள்ள தலங்கள் வைப்புத் தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
திருப்புகழையும் சேர்த்து அருணகிரிநாதர் மொத்தம் ஒன்பது நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றை நவரத்தினங்களுக்கு ஒப்பிடுகிறார் சாதுராம் ஸ்வாமிகள். இவற்றில் பெரும்பாலானவை விருத்தப்பாக்கள் வகையைச் சேர்ந்தவை.
திருப்புகழ் – மாணிக்கம், திரு வகுப்பு – வைரம், வேல் விருத்தம் – பவழம், மயில் விருத்தம் – மரகதம், சேவல் விருத்தம் – வைடூரியம், கந்தர் அந்தாதி – நீலம், கந்தர் அலங்காரம் – கோமேதகம், கந்தர் அநுபூதி – முத்து, திருவெழுகூற்றிருக்கை – புஷ்பராகம்.
கந்தரந்தாதி, கந்தரநுபூதி பாடல்கள் இயற்றியது பற்றிக் கதைகள் உண்டு.
கந்தரந்தாதி:
அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில், கவிச்செருக்கு கொண்ட வில்லிபுத்தூரான் என்ற புலவர் இருந்தார். அவர் மற்ற புலவர்களை வாததிற்கு அழைத்து, அவர் வென்று விட்டால், தோற்ற புலவர்களின் காதை குறும்பி கொண்டு அறுத்து விடுவார். அப்படி வாதில் வென்று அறுத்த காதுகளை மாலையாகப் போட்டுக் கொண்டு வலம் வருவார். அருணகிரிநாதரின் புகழ் பரவ, அவரை வாததிற்கு அழைத்தார் வில்லிபுத்தூரான். வாதிட விரும்பாவிட்டாலும், ஆசுகவியான அருணகிரிநாதர் போட்டிக்கு இசைந்தார். தாம் பாடல் புனைவதாகவும், அந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் புனைந்தவுடன் அதற்கானப் பொருளை வில்லிபுத்தூரான் விளக்க வேண்டும் என்றும் கூறினார். அப்படி அவர் பொருள் அறிந்து விளக்கி விட்டால், அவர் வென்றதாக ஒத்துக் கொள்வதாகவும், அப்படி வில்லிபுத்தூரானால் பொருள் சொல்ல முடியாவிட்டால், அவர் தோற்றதாக அர்த்தம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சமயத்தில் அருணகிரிநாதர் புனைந்தது கந்தரந்தாதி. ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகள். ஒவ்வொரு வரியிலும் உயிர் மற்றும் உயிர் மெய் எழுத்துகள் 64 அல்லது 68 இருக்கும். கூடவோ, குறையவோ இருக்காது. இது கட்டளை கலித்துறையின் இலக்கணம். முந்தைய பாடலின் கடைசிச் சீரலில் உள்ள சொல்லோ, எழுத்தோ அடுத்த பாடலின் தொடக்கத்தில் இருக்கும். அந்தத்தை (முடிவை), அடுத்த பாடலின் ஆதியாக (முதலாக) உடையது 'அந்தாதி'.
முதல் 53 பாடல்களுக்கு விளக்கம் சொல்லி வந்த வில்லிபுத்தூரானால், “திதத்தத்தத் தித்தத்” என்று தொடங்கிய 54வது பாடலுக்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. அதற்கான விளக்கத்தை அருணகிரிநாதர் அளித்தார். தோல்வியை ஒப்புக் கொண்ட வில்லிபுத்தூரான் தன்னுடைய காதுகளை அறுக்கச் சொல்லி வேண்டிக் கொண்டார். கருணை மன கொண்ட அருணகிரிநாதர் அதற்கு சம்மதிக்கவில்லை. வில்லிபுத்தூரார் இனிமேல் வாதில் வென்று புலவர்கள் காதை அறுப்பதை செய்யக்கூடாது என்று பணித்தார். வில்லிபுத்தூரான் வேண்டுகோளுக்கிணங்கி கந்தரந்தாதியில் நூறு பாட்டுகள் இயற்றினார் அருணகிரிநாதர்.
கந்தரநுபூதி:
அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் விஜயநகர அரசர் பிரபுட தேவராயர். அவருடைய அவையில் சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகன், அரசவைப் புலவராக இருந்தார். அருணகிரியார் புகழினால், அரசனிடம் தன்னுடைய செல்வாக்கு குறைந்து விடும் என்று அஞ்சிய சம்பந்தாண்டான், தன்னால் அரசனுக்கு காளி தேவியின் தரிசனம் கிடைக்கச் செய்ய முடியும் என்றும், அருணகிரிநாதரால், முருகப் பெருமான் தரிசனம் செய்து வைக்க முடியுமா என்று சவால் விட்டான். சொன்னபடி, சம்பந்தாண்டான் காளி தரிசனம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. “அதல சேடனாராட” என்று தொடங்கும் திருப்புகழைப் பாடினார் அருணகிரியார். ”மயிலுமாடி நீயாடி வர வேண்டும்” என்ற வரிகள் பாடிய போது, மயில் வாகனத்தில் முருகப் பெருமான் மண்டபத்துத் தூணில் காட்சியளித்தார்.
இறைவனின் ஜோதியைக் கண்ட அரசருக்கு கண் பார்வை இருண்டது. பார்வை திரும்ப, இந்திர லோகத்திலிருந்து பாரிஜாதமலர் கொண்டு வந்து கண்களைத் துடைப்பது தான் ஒரே வழி என்று சம்பந்தாண்டான் சொல்ல, அருணகிரியார், கிளியின் உடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து சொர்க்கம் சென்றார். அந்த நேரத்தில் அருணகிரியார் உடலை எரித்து விட்டார் சம்பந்தாண்டான். பாரிஜாத மலருடன் வந்த அருணகிரியார் மலரை அரசனுக்கு அளிக்க அரசன் கண் பார்வை பெற்றான். சூழ்ச்சியால் சம்பந்தாண்டான், அருணகிரியின் உடலை எரித்ததை அறிந்த அரசன் வருந்தினான்.
முருகக் கடவுளுடன் இணையும் நேரம் வந்துவிட்டது. அதனால் கலங்காதீர்கள் என்று அரசனுக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் அறிவுறுத்திய அருணகிரிநாதர் கிளி ரூபத்தில் கந்தரநுபூதி பாடி, கந்தக் கடவுளுடன் இணைந்தார். அனு என்றால் உடன், பூதி என்பது ஆதல்.. ஆன்மா இறைவனுடன் ஒன்றாவது. கந்தரநுபூதி, கந்தக் கடவுளுடன் ஒன்றுபட்டு நிற்பது.