கோவில்கள் ஏன் கட்டப்பட்டன?

Temples
Temples
Published on

'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது ஒரு பிரபலமான பழமொழி. ஏன் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? கோவில்களுக்கும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் அப்படி என்ன தொடர்பு? வாருங்கள். இந்த பதிவில் நாம் அதைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

மன்னர்களின் காலத்தில் கோவில்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள் என பல மன்னர்களும் கோவில்களைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் பெரும் கவனம் செலுத்தி வந்ததை நாம் கல்வெட்டுகளின் மூலமாகவும் வரலாறுகளின் மூலமாகவும் அறிய முடிகிறது. தொடக்கத்தில் செங்கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு கட்டப்பட்ட கோவில்கள் பின்னர் கருங்கற்களைக் கொண்டு கற்றளி வகைக் கோவில்களாக மாற்றம் பெற்றன. பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து அவர்கள் உருவாக்கிய குடைவரைக் கோயில்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. அவை தற்காலம் வரை நிலைத்து நிற்கின்றன.

காலம்காலமாக கோவில்கள் பலருக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்துள்ளன. சிற்பிகள், ஓவியர்கள், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பூமாலை தொடுப்பவர்கள், வாத்தியம் இசைக்கும் கலைஞர்கள், பிரசாதங்களைச் செய்ய அரிசி, எண்ணெய் முதலான பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில் பணியாளர்கள் என பலருக்கும் கோவில் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி மகிழ ஒரு சந்தர்ப்பத்தையும் கோவில் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்பதற்கான வாய்ப்பினையும் கோவில் திருவிழாக்கள் உண்டாக்குகின்றன. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கோவில் திருவிழாக்களில் சிறுசிறு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். இதனால் பலவகையான வியாபாரிகள் பலனடைகிறார்கள்.

பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் போது பலரும் ஒன்று கூடி கோவில் பணிகளைச் செய்ய நேரிடுகிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

தினமும் கோவில்களுக்குச் செல்லும் போது நம் மனதில் 'நான்' என்ற அகந்தை மெல்ல மெல்ல அழியத் தொடங்குகிறது. நமக்கும் மேலே சக்தி மிக்க இறைவன் இருக்கிறான் என்ற எண்ணம் 'நான்' என்ற அகந்தையை அழித்தொழிக்கிறது. மேலும் தூய்மையாக பராமரிக்கப்படும் கோவில் வளாகத்தினுள் நுழையும் போது நம் மனதில் ஒரு அமைதி ஏற்படுவதை உணர முடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நமது குறைகளை இறைவனிடம் முறையிடும் போது அதை அவர் கேட்டு மனதிலேயே வைத்துக் கொள்ளுவார். இதனால் நமது மனதில் உள்ள பலவிதமாக பாரங்கள் இறங்கியத்தைப் போல ஒரு உணர்வு ஏற்படும். நமக்குத் தெரிந்தவர் அல்லது உறவினர்களிடம் நமது குறைகள் அல்லது பிரச்னைகளைத் தெரிவித்தால் அது அவர்களின் மூலமாக பலருக்கும் தெரியவரும். சாதாரண பிரச்னை கூட பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். ஆனால் அமைதியே வடிவான இறைவனிடம் நமது குறைகளை முறையிடும் போது அவர் அதை எவரிடமும் சொல்லமாட்டார். இதனால் நமது மனபாரம் இறங்குவது மட்டுமின்றி நமது பிரச்னைகளும் இறையருளால் எளிதில் அகன்றும் விடுகின்றன.

திருமணத்திற்கு வரன் பார்க்கும் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் அன்று முதல் இன்று வரை முதல் சந்திப்பு நிகழ்த்துவது கோவில்களில் தான். இதன் பின்னரே இருவீட்டாரும் வீடுகளில் சந்தித்து திருமணத்தை முடிவு செய்கிறார்கள். மேலும் திருமணங்களும் கோவில்களில் பல நூறாண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மண்டபம் மற்றும் அலங்காரம் மற்றும் பிற செலவுகள் கணிசமாகக் குறைந்து எளிமையாகவும் மனநிறைவோடும் இறைவனின் பூரண ஆசிகளோடும் திருமணங்கள் நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சைத்ரா நவராத்திரியில் தரிசிக்க வேண்டிய 9 கோவில்கள் எவை தெரியுமா?
Temples

உடல் நலம் சரியில்லாதவர்கள் கோவிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிட்டால் உடல் நல பாதிப்புகள் விலகும் என்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கை நம் மனதில பல நன்மைகளை உருவாக்கும். இத்தகைய வேண்டுதல்களின் மூலம் பலரும் பலனடைந்திருக்கிறார்கள்.

இசை, நாட்டியம் முதலான பலவிதமான கலைகள் கோவில்களில் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இதனால் மக்களின் மனதில் மகிழ்ச்சி விளைவதோடு கலைகள் அழியாமல் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் கலைகளும் வளர்ந்தன.

உணவுப் பஞ்சம் ஏற்படும் சமயங்களில் மக்களுக்கு உதவுவதற்காக கோவில்களில் தானியக் கிடங்குகளையும் ஏற்படுத்தி வைத்துப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் மன்னர்கள் காலத்தில் போர்கள் நடைபெற்ற போது வீரர்கள் தங்குவதற்காகவும் கோவில்கள் பயன்பட்டுள்ளன. பல கோவில்கள் மருத்துவமனைகளாக 'ஆதுர சாலை' என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளன. உதாரணமாக செங்கற்பட்டு மாவட்டத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ள அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் இதுதொடர்பான பல கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன. சோழர்களுடைய கல்வெட்டுக்களில் அவர்களுடைய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஆதுரசாலை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான தோற்றம் கொண்ட பெருமாள் கோவில்கள்!
Temples

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com