
'வாக்கிற்கு அருணகிரி' - பகுதி 1
“ஐயா, அருணகிரி, அப்பா உனைப் போல மெய்யாக ஒரு சொல் விளம்பினர் யார்” என்று வியக்கிறார் தாயுமானவ சுவாமிகள். உலகெங்கும் கந்தவேள் புகழ் பரப்பும் திருப்புகழ் போல ஒன்பது நவரத்தினங்களைத் தமிழுக்கு அளித்த அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அதிகாரபூர்வமான குறிப்புகள் காணக் கிடைக்கவில்லை. செவி வழிச்செய்திகளாக இவரைப் பற்றிய கதைகள் உண்டு. அருணகிரிநாதர் பற்றிய வெள்ளித்திரை படத்திற்கும் இந்த செவிவழிச் செய்திகளே ஆதாரம்.
திருவண்ணாமலையில், திருவெண்காடர், முத்தம்மை தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவள் ஆதிலெட்சுமி. அவளின் தம்பி அருணகிரி. வணிகத்தில் ஈடுபட்டிருந்த வசதியான குடும்பம். உலக இன்பத்தில் அதீத நாட்டம் கொண்டிருந்த அருணகிரி, கணிகைகள் வீடே கதி என்றிருந்தான். தந்தை வணிகத்திற்காக கடல் கடந்து சென்றிருந்தார். மகனின் காமக் களியாட்டத்தில் மனமுடைந்த தாயார் உயிரிழந்தார். அருணகிரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தமக்கை ஆதிலெட்சுமியின் கடமையாகியது. மணமுடித்து வைத்தால் தம்பி திருந்துவான் என்று நம்பி அருணகிரிக்கு மணம் செய்து வைத்தாள் ஆதிலெட்சுமி.
அருணகிரி திருந்தவில்லை. சொத்து கரைந்ததுடன் அருணகிரியை தொழுநோய் தொற்றிக் கொண்டது. கணிகையர் அவனை விட்டு விலகினர். உனக்குத் தேவை ஒரு பெண் உடம்பு தானே, என்னை ஏற்றுக் கொள் என்றாள் தமக்கை. அந்த சொல் அருணகிரி மனதை தைத்தது. தன்னுடைய தவறை உணர்ந்த அருணகிரி, உயிரை மாய்த்துக் கொள்ள, கோயில் கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்தான்.
அருணகிரியை ஆட்கொண்ட முருகப் பெருமான், விழுந்த அருணகிரியைத் தாங்கி, “நீ என்னைச் சேரும் காலம் வரவில்லை என்று கூறி ஆறெழுத்து மந்திரமான ஷடாக்ஷரத்தை உபதேசம் செய்து வைத்தார். சுந்தரருக்கு “பித்தா” என்று அடியெடுத்துக் கொடுத்த சிவபெருமானைப் போன்று, கந்தவேள் அருணகிரிக்கு “முத்து” என்று அடியெடுத்துக் கொடுக்க “முத்தைத் தரு பத்தித் திரு நகை” என்ற முதல் திருப்புகழைப் பாடினார் அருணகிரியார்.
முருகன் அருணகிரியை குமார வயலூருக்கு வரச் சொன்னார். அங்கே சுயம்புவாக உள்ள பொல்லாப் பிள்ளையார், அருணகிரிநாதர் பாடலுக்குத் திருப்புகழ் என்று பெயர் சூட்டினார். உளி கொண்டு செதுக்கப்படாத 'சுயம்பு விநாயகர்' என்பதால் இந்தப் பிள்ளையார் 'பொள்ளாப் பிள்ளையார்' என்று அழைக்கப்பட்டார். 'பொள்ளா' என்ற சொல்லுக்குப் பொருள், செதுக்கப்படாத என்பது. நாளடைவில் இந்த சொல் மருவி 'பொல்லாப் பிள்ளையார்' என்று மாறியது.
திருப்புகழ் அன்பர்கள், பல முருக பக்தர்கள் இந்த வரலாறை ஒத்துக் கொள்வதில்லை. திருப்புகழில் பல பாடல்களில், அருணகிரிநாதர், மாதர்களின் மைய வலையில் விழுவதினால் ஏற்படும் துன்பங்களைச் சொல்லி, அதை விடுத்து முருகனைச் சரணடையும் படி போதிக்கின்றார்.
இந்தப் பாடல்களைப் படித்து, அருணகிரி சிறிய வயதில் தவறான வழியில் சென்றிருக்கலாம் என்று கதை புனையப் பட்டிருக்கலாம் என்று கருதுபவர் பலர்.
ஆதிசங்கரரின் அவதாரம் அருணகிரிநாதர் என்று ஒரு கருத்தும் உண்டு. ஆதிசங்கரர், ஒரு பெண் அளித்த சாபத்தால், அருணகிரியாக அவதரித்தார் என்பது அவர்கள் வாதம்.
ஒரு முறை கர்ம மார்க்கம் தான் சிறந்தது என்று கருதும் மண்டலமிஸ்ரருக்கும் ஞான மார்க்கமே சிறந்தது என்று கருதும் ஆதிசங்கரருக்கும் விவாதம் நடந்தது. விவாதத்தில் வென்றவர் யார் என்று முடிவு சொல்ல வேண்டியவர், மண்டலமிஸ்ரரின் மனைவி உபயபாரதி, வாதத்தில் தோற்றுப் போகும் நிலையிலிருந்தார் மண்டலமிஸ்ரர். ஆதிசங்கரர், தன்னுடைய கேள்விகளுக்கும் பதில் கொடுத்தால்தான் வெற்றிப் பெற்றவராக கருதப்படுவார் என்று சொன்ன உபயபாரதி, காமம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டாள். ப்ரம்மச்சரியத்திலிருந்து சன்னியாசத்திற்கு வந்த ஆதிசங்கரரால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. இதற்கு பதில் சொல்லத் தனக்கு சில நாட்கள் தேவைப்படும் என்று கேட்டுக் கொண்டார்.
கூடு விட்டுக் கூடு பாயும் கலையை அறிந்த சங்கரர், தம்முடைய உடலை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சீடர்களிடம் கூறிவிட்டு, அப்போது தான் மரித்த தமருக அரசனின் உடலில் புகுந்தார். அரசன் திரும்பி வந்ததில் மக்கள், மந்திரிகள், மனைவி ஆகியவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
அந்தப்புரத்தில் ராணியுடன் உறவாடி உபயபாரதியின் கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொண்டார். உயிர்த்தெழுந்து வந்த அரசன் தத்துவம் பேசுவதையும், தன்னுடன் காமக் கேளிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதையும் கவனித்த ராணி, அரசனின் உடலில் வேறு ஒருவர் கூடு விட்டு, கூடு பாய்ந்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டார்.
அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த உடல் ஏதேனும் தென்பட்டால், அந்த உடலை எரித்து விடும்படி, காவலர்களுக்கு ஆணையிட்டாள் அரசி. சங்கரரின் உடலைக் கண்டுபிடித்து, காவலர்கள் அதனை எரிக்க முற்பட்டனர். அப்போது சீடர்கள் எழுப்பிய “ஜய ஜய சங்கர” கோஷத்தைக் கேட்ட சங்கரர், நிலைமையை உணர்ந்து அரசன் உடலிலிருந்து தன்னுடைய உடலில் புகுந்து கொண்டார். கோபம் கொண்ட ராணி, தன்னை காமத்தீயில் தள்ளி ஏமாற்றிய சன்யாசி, காம வலையில் அகப்பட்டு உழல வேண்டும் என்று சாபமிட்டாள். அந்த சாபம் தீரவே, சங்கரர், அருணகிரியாகப் பிறந்தார்.
ஆதிசங்கருக்கும், அருணகிரி நாதருக்கும் மற்றுமொரு ஒற்றுமையைக் கூறுவார்கள். பரப்பிரும்மம் ஒன்றே என்ற பிரும்ம ஞானி ஆதி சங்கரர், ஷண்மத ஸ்தாபகர் என்ற பெயர் பெற்று, சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகிய ஆறு கடவுள்களையும் வழிபடும் முறையை வகுத்துத் தந்தார்.
முருகப் பெருமானால் முதலடி கொடுக்கப் பெற்று திருப்புகழை அளித்த அருணகிரிநாதர், திருப்புகழில் சிவன், விஷ்ணு, சக்தி, விநாயகர் என்று எல்லாக் கடவுள்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். திருப்புகழ் பாடல்கள் பெரும்பாலும் 'பெருமாளே' என்று முடியும். மற்ற கடவுளர் சிறப்பைக் கூறும் பாடல்களில் சங்கரன் தந்திடும் பெருமாளே, திருமாலின் மருகோனே என்ற வரிகளைக் காணலாம்.