தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பலவிதமான காவடி சுமந்து, பால்குடம் சுமந்து முருகனை ஆராதிக்கிறார்கள்.
1) பழனி:
மாங்கனிக்காக விநாயகரிடம் போட்டியிட்டு, தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம். தைப்பூச திருவிழா தோன்ற காரணமான பழனி திருத்தலத்தில் தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்துடன் நிறை சந்திரன் கூடும் நாளில் கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், மூன்றாம் படை வீடான பழனியில் நடக்கும் தேரோட்டம் மிகவும் விசேஷமானது. அன்று விடிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் பிப்ரவரி 5, 2025 கொடியேற்றத்துடன் துவங்கி, பிப்ரவரி 10ஆம் தேதி திருக்கல்யாணமும், 11ஆம் தேதி தங்க தேரோட்டமும் நடைபெறும்.14 ஆம் தேதி தெப்ப உசவமும் நடைபெறும். பழனிக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து, காவடி எடுத்து, பாதயாத்திரை சென்று நிறைய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
2) சுவாமிமலை:
தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாகா காட்சி தந்த திருத்தலம். கும்பகோணம் அருகே உள்ள நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம் போன்ற பல்வேறு வகையான வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறும். கோவில் உள்ளே உள்ள வஜ்ர தீர்த்தத்தில் தீர்த்த வாரியம் நடைபெறும்.
3) திருச்செந்தூர்:
அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகை சூடிய திருத்தலம். அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வருகிற 11ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஒன்றரை மணிக்கெல்லாம் விஸ்வரூப தீபாராதனையும், நான்கு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 6 மணியிலிருந்து ஆறரை மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறப்போகிறது.
4) பழமுதிர்ச்சோலை:
ஔவைக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழம் உதிர்த்து தந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்த திருத்தலம். அழகர் கோவில் மலை மேல் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யாகசாலை பூஜைகளும், மாலையில் சுவாமி பூத வாகனம், அன்ன வாகனம், காமதேனு, ஆட்டுக்கிடாய் வாகனம், யானை, குதிரை வாகனங்களில் பிரகாரத்தில் எழுந்தருளுகின்றார். 11ஆம் தேதி தைப்பூசத்தன்று மாலையில் தீர்த்த வாரியும் நடைபெறும்.
5) திருத்தணி:
திருத்தணி சூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணம் புரிந்த திருத்தலம். ஐந்தாம் படை வீடான திருத்தணி கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தும், விரதம் இருந்தும், காவடி எடுத்தும் வருகின்றனர். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடி கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூச நன்னாளில் அபிஷேக ஆராதனைகளும், அலங்காரங்களும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும்.
6) திருப்பரங்குன்றம்:
சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம். முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அபிஷேக ஆராதனைகளும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். தைப்பூசத்தன்று பௌர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.