
ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார் கீதையின் பகவான் கிருஷ்ணர். வியாசரை வேத வியாசர் என அழைப்பது உண்டு. காரணம் அவர் வேதங்களை தொகுத்ததாலும் ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதம் எழுதியதாலும் ஆகும். அதுமட்டும் இன்றி பல புராணங்களையும் பிரம்ம சூத்திரமும் ஸ்ரீமத் பாகவதமும் அருளப்பட்டது. பௌர்ணமி வியாச பௌர்ணமி என்று போற்றப்படுகிறது. எனவே அன்றைய தினம் குருவை போற்றும் குரு பூர்ணிமாவாக கொண்டாடுவார்கள். அன்று மெய்வாய் அறிவு புலன்கள் மனம் தூய்மையாக்கி குருவின் திருமுன் அவர் முகம் நோக்கி வணங்கிட வேண்டும்.
பரத கண்டத்தின் குருவாக தேவர்களும் மூவர்களும் போற்றுவது வியாசரைத்தான். எனவேதான் இந்நாளை வியாசபூர்ணிமா என்று கொண்டாடுகிறார்கள். அன்றுதான் சாதுர் மாசிய விரதம் துவங்குகிறது. இந்து மத துறவிகள் ஓரிடத்தில் மூன்று இரவுகளுக்கு மேல் தங்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு.
ஆனால் மழைக்காலமான நான்கு மாதங்கள் துறவரத்துக்கு பங்கம்விடக்கூடாது என்பதற்காக ரிஷிகள் வெளியில் சஞ்சரிக்காமல் ஒரே இடத்தில் தங்கி ஆன்மீக நூல்களை படித்து இல்லறத்தாருக்கு எடுத்து கூறுவார்கள்.
சதுர் என்றால் நான்கு மாஸ்ய என்றால் மாதம் சாதுர் மாஸ்ய விரதம் என்றால் நான்கு மாத விரதம் என்று பொருள். இந்த நான்கு மாத துவக்கமானது ஆஷாட சுத்தமாத பௌர்ணமியில் துவங்கும். அன்றைய தினம் அனைவருக்கும் குருவான வியாசரையும் தங்கள் குரு பரம்பரை அரியையும் வழிபாடு செய்வார்கள். சாதுர் மாஸ்ய பௌர்ணமி தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு ஜீவராசிகள் இடம்பெயர்ந்து வாழுமாம். எனவே இந்த காலகட்டத்தில் சன்னியாசிகள் அவற்றிற்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் ஒரே இடத்தில் தங்கியிருப்பார்கள். இந்த நான்கு மாதமும் உணவு அடிப்படையில் சில கட்டுப்பாடுகளோடு ஒரு விரதமுறையும் அனுசரிப்பார்கள். இதற்கு சாதுர் மாஸ்ய விரதம் என்று பெயர்.
பௌர்ணமி அன்று மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல மடங்குகளாக திருப்பித் தரும் தன்மை உண்டு.
பௌர்ணமி விரதம் மேற்கொள்பவர்கள் பௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து விரதம் தொடங்கி உண்ணா நோன்பிருந்து இரவில் பௌர்ணமி நிலவுக்கு பூஜை செய்து முடித்த பின்னர் உண்ண வேண்டும்.
பௌர்ணமி என்றாலே நினைவுக்கு வருவது கிரிவலம் தான் மனித மனத்திற்கும் நிலவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதனால்தான் ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என அழைக்கின்றனர். பௌர்ணமி தினத்தில் மனம் நிறைவாக இருக்கும் இந்த நாளில் கிரிவலம் வரும்போது இறையருள் கிடைப்பதோடு அனைத்து நன்மைகளையும் அடைய முடியும். நாம் நினைக்கும் விஷயங்கள் நிறைவேறும். அதனால் வாழ்வில் ஒருமுறையாவது பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல வேண்டும். பௌர்ணமி அன்று கிரிவலம் செல்லக்கூடியவர் வறுமையின் பிடியில் இருந்து மீண்டு தங்களின் வாழ்க்கையில் உயர்நிலையை அடைய முடியும். அவருக்கு ஞானம் செல்வம் என அனைத்தும் கிடைத்து தன்னிறைவு அடைய முடியும்.
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியும் ஒவ்வொரு சிறப்பாகும். பௌர்ணமி வழிபாட்டை திருமணமான பெண்கள் செய்வதால் மாங்கல்யம் நிலைத்து நிற்கும். திருமணம் ஆகாத பெண்கள் பௌர்ணமி விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். பௌர்ணமி வழிபாட்டின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். பௌர்ணமி நாளில் அம்பிகையை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் பொருளாதார நிலை மேம்படும்.
பௌர்ணமி அன்று பல புகழ் பெற்ற கோவில்களிலும் பௌர்ணமி பூஜை, திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அம்மனை விளக்கில் ஆவாஹனம் செய்து அம்மனின் முன்பாக நூற்றியெட்டு திருவிளக்கு ஏற்றி பௌர்ணமி பூஜை செய்வது மிகச் சிறப்பாகும்.
நூற்றியெட்டு பெண்கள் விளக்கின் முன்பு அமர்ந்து விளக்கு அஷ்டோத்திரங்களை கூறி குங்குமத்தால் பூஜை செய்வார்கள். சித்திரை மாத பௌர்ணமியை வழிபடும் பொழுது நமக்கு தாலி பலம் கிடைக்கும். வைகாசி மாத பௌர்ணமியை வழிபடும் போது திருமணம் கைகூடுகிறது. ஆனி மாத பௌர்ணமி அன்று வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. ஆடி மாத பௌர்ணமி வழிபடும் போது அனைத்து வளங்களும் கிடைக்கிறது.
ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடும்போது காரிய வெற்றி கிடைக்கிறது. எடுத்த காரியங்கள் அனைத்தும் சுலபமாக முடியும். நைவேத்தியமாக உளுத்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பாகும்.
பௌர்ணமி என்பது முழு நிலவு நாளில் அம்பிகையின் பூரண அருள் கிடைக்கும் நாளாகும். பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது, அம்பிகையை வழிபடுவது, திருக்கோவிலில் கோபுர தரிசனம் செய்வது, ஸ்ரீ சத்திய நாராயண பூஜை செய்வது என பல வழிகளில் பௌர்ணமியை கொண்டாடலாம். இதனால் வாழ்வில் பூரண நிலவு போல நமது மனதிலும் இல்லத்திலும் பிரகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்துமே கிடைத்து வாழ்க்கை சுபிட்சமாகும்.