அத்தனூர் பத்ரகாளி அம்மன் - ஸ்தல வரலாறு:
பஞ்சத்தையும், பட்டினியையும் தாங்க இயலாமல் எங்காவது போய், ஏதாவது உழைத்து பசியாற முடியுமா என்ற ஏக்கத்துடன், வளமான பகுதியைத் தேடிச் சென்று கொண்டிருந்தது ஒரு கும்பல். அவர்களில் ஒரு பெண், ஓரிரு பாத்திரங்கள், துணிகள் கொண்ட ஒரு கூடையை சுமந்து வந்து கொண்டிருந்தாள். திடீரென்று கூடையில் பளு கூடுவதை உணர்ந்தாள். சந்தேகப்பட்ட அவள், கூடையைக் கீழே இறக்கி வைத்துப் பார்க்க, உள்ளே ஒரு குழவிக்கல் இருப்பதைக் கண்டு திகைத்தாள்.
அது எப்படி தன் கூடைக்குள் வந்தது? தான் அதை எடுத்து வரவேயில்லையே! உடன் வந்த கணவனிடம் தன் சந்தேகத்தைச் சொன்னாள். அவனோ, ‘‘நீதான் கொண்டு வந்திருப்பாய். இப்போது மறந்துவிட்டிருக்கிறாய். ஆனாலும் இந்தக் கல் பாரம் எதற்காக, அனாவசியமாய்?’’ என்று கேட்டு, அதைத், தூர எறிந்துவிட்டான்.
ஓரளவு சமாதானமான பெண், மேலும் தொடர்ந்து சென்றபோது கூடை மறுபடியும் கனமாக மாறிற்று. உள்ளே மீண்டும் அதே கல்! இந்த முறை கணவனுக்கு சற்றே பயம் தொற்றிக் கொண்டது. தூக்கி எறிந்தது எப்படி கூடைக்குள் வந்தது? மீண்டும் அதை எடுத்து ஒரு புதருக்குள் போட்டுவிட்டு, மனைவி, மற்றும் குழுவினருடன் பயணத்தைத் தொடர்ந்தான். அனைவரும் அத்தனூர் மலையடிவாரத்தில் வந்து தங்கினர்.
இரவில் கணவனின் கனவில், ‘நான் வெறும் குழவிக்கல் அல்ல, உன்னுடைய குலதெய்வம். என்னை மட்டும் ஊரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே? அதனால்தான் நானே உங்களுடன் வந்தேன்,’ என்று ஒரு குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டான்.
கூடையில் இருந்தது குலதெய்வமா? அதுவும் அமானுஷ்யமாக உடன் வந்திருக்கிறதா? என்று பிரமித்தான். பிறரிடம் இந்த அனுபவத்தை விவரித்த அவன், கல்லைத் தேடி எடுத்துவரப் புறப்பட்டான். அப்போது தன் கூடையில் மீண்டும் அந்தக் கல் இருப்பதைக் கண்டு அவனுடைய மனைவி பரவசத்துடன் கத்தினாள்.
பிறகு, குழுவிலிருந்த பெரியவர்கள் யோசனைப்படி அந்த மலையடிவாரத்திலேயே அந்தக் கல்லை நட்டு, தங்களது குலதெய்வமான பத்ரகாளியாகவே பாவித்து வணங்கினர். நம்மோடு நம் தெய்வமும் பஞ்சம் பிழைக்க வந்துவிட்ட அதிசயத்தை வியந்த அவர்கள், அந்தப் பகுதியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். பின்னர் அந்தக் கல்லுக்குச் சிறியதாக கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அவர்கள் அம்மன் அருளால் வாழ்க்கையில் வளம் கண்டனர்.
அத்தனூர் பத்ரகாளி அம்மன் - கோவில் அமைப்பு:
கோவிலில் அம்மனின் வலது பக்கத்தில் உக்ரகாளியம்மன் அமைந்திருக்கிறாள். ஒரே கல்லினாலான இந்தச் சிலையில், அம்மனுக்கு இடப்புறம் பைரவரும், வலப்புறம் அன்னமும் காணப்படுகின்றன. அம்மனுக்கு அடுத்து சடாமுனியும், கோரமுனியும் இருக்கிறார்கள். கோரமுனிக்கு கீழே லாடசந்நியாசிகள் மூவர் உள்ளனர். அடுத்து தனி சந்நதியில் முத்து முனியப்பனை தரிசிக்கலாம்.
இவரை ‘வேல் விலங்கு’ கொண்டு வழிபட்டால் பில்லி, சூனியம், காத்து, கருப்பு பாதிப்புகள் விலகிவிடும். அம்மனின் வெளிப்பிராகாரத்தில் இடது பக்கம் விஜய துர்க்கை, வலது பக்கம் விஷ்ணு துர்க்கை, அம்மனின் பின்புறம் வராகி துர்க்கை என்று மூன்று துர்க்கைகளை தரிசிக்கலாம். அடுத்து மஹாமுனி மற்றும் ராஜமுனிகளைக் காணலாம். நவகிரகங்களுக்கும் தனி சந்நதி உள்ளது.
கோயிலின் மூலவராக விளங்கும் பத்ரகாளிக்கு எதிரில் மூன்று குதிரைகள். இவற்றின் இடப்பக்கத்தில் கத்தியால் தனது கழுத்தில் குத்திக் கொண்டு நிற்கும் சர்வேஸ்வரர் என்ற பெயர் கொண்ட ஒரு பணியாளர் சிலை உள்ளது. தனது எஜமானுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் தான் வேண்டிக் கொண்டபடி தன் கழுத்தை அறுத்துக் கொண்டாராம் அவர்! அந்தக் காட்சிதான் இங்கே சிலை வடிவாகக் காணப்படுகிறது.
அம்மனுக்கு இடப்பக்கத்தில் நவ சுப்ரமணியர்களும், காவல் தெய்வமும் அருள்கின்றனர்.
பூப்போடுதல் முறையில் அம்மனிடம் வாக்கு கேட்கும் சம்பிரதாயமும் இங்கே உண்டு. பேச்சுக் குறை, கேட்கும் திறன் குறைபாடு போக்கியும், குழந்தைப் பேறு இல்லாதோருக்கு அந்த வரம் அருளியும், பில்லி, சூனிய பாதிப்பு களிலிருந்தும் இந்த அம்மன் பக்தர்களை மீட்கிறாள்.
சேலம்-நாமக்கல் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அத்தனூர்.