தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் நான்கு முனை சாலை வரும். அதில் வலப்புரம் திரும்பி ஆறு கிலோமீட்டர் தொலைவு சென்றால் ஆய்க்குடி கிராமம் வருகிறது. செங்கோட்டையில் இருந்து கிழக்கில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம் 'ஆய்' என்னும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி என அழைக்கப்பட்டது.
இங்கே முருகப்பெருமான் ஒரு முகம் கொண்டு நான்கு கரத்துடன் ஒரு பாலகனாகத் திகழ்கிறார். முருகனுக்கு அருகே இருக்கும் மயில் முகம் இடது புறம் நோக்கி உள்ளது. ஓலைக் குடிசையாக இருந்த முருகன் கோயிலுக்கு பின்னர் வந்த சிற்றரசர்கள் திருப்பணிகள் செய்தனர். 1941-க்கு பிறகு இந்தக் கோயில் சிறப்புற எடுத்துக் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே உற்சவர் முத்துக்குமாரசாமி மயில்வாகனத்தில் நின்றபடி காட்சி அளிக்கிறார். அருகே வீரபாகு சிறப்புறத் திகழ்கிறார்.
ஒருமுறை மதுரையைச் சேர்ந்த பட்டு வணிகர் ஒருவர் குழந்தைப் பேறு வேண்டி ஆய்க்குடி முருகப்பெருமானை தரிசித்தார். தனக்கு குழந்தைப் பிறந்தால் உடன் வந்து பாலமுருகனுக்கு வைரவேல் அணிவிப்பதாக பிரார்த்தனை செய்து கொண்டார். குழந்தை பிறந்து நாட்கள் கடந்தும் அவர் வந்து அதை நிறைவேற்றி வைக்கவில்லை; மறந்துவிட்டார். ஒருநாள் அவர் மனைவியின் கனவில் தோன்றிய பாலமுருகன் கருணை மிகக் கொண்டு அவர்களின் பிரார்த்தனையை எடுத்துச் சொன்னார். கதறிய அந்தப் பெண்மணி தன் கணவரிடம் விஷயத்தை கூறி உடனே தன் மைந்தனுடன் ஆய்க்குடி வந்து வைர வேலை முருகனுக்கு அர்ப்பணித்தனர். பின்னர் ஆண்டுதோறும் படிப்பாயசம் வைப்பதாக பிரார்த்தனையையும் செய்து கொண்டனர். அதனால் இந்தத் தலத்தில் குழந்தை இல்லாதவர்கள் விரதம் இருப்பதும், மணமாகாதவர்கள் விரதம் இருப்பதும் அந்த விரதம் பலித்தவுடன் படிப்பாயாசம் நிவேதனம் செய்வதும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இங்கே குழந்தைகளுடன் முருகனும் சேர்ந்து படிப்பாயாசம் சாப்பிடுவதாக தல வரலாறு கூறுகிறது. ஒரு படி முதல் 12 படிவரையில் அரிசி பாயாசம் செய்வது பிரார்த்தனைகளில் முக்கியமானதாகும். இவர் பாலசுப்பிரமணியராக இருப்பதால் படிப்பாயசத்தில் பாசிப்பருப்பு, சுக்கு சீரகம் முதலியன சேர்க்கப்படுகின்றன. பால் குடம் எடுத்தல், காவடி பிரார்த்தனைகளும் செலுத்தப்படுகின்றன. இங்கே அரசு இலை பிரசாதம் சிறப்பானதாக உள்ளது. கோயிலில் வெள்ளி ரதமும் உள்ளது.
இந்தத் தலத்தில் முருகப்பெருமானை "வாழ்படச் சேனைப்பட" என்னும் திருப்புகழால் அருணகிரிநாதர் பாடி உள்ளார். 'பொங்கும் கொடிய சுற்றன்' என்று தொடங்கும் திருப்புகழிலும் 'ஆய்க்குடி' என்ற குறிப்பு உள்ளது.
இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக காட்சி தரும் மூலவருக்கு ஹரிராம சுப்பிரமணியர் என்ற பெயரும் உண்டு. தல விருட்சமாக ஐந்து மரங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் விளங்குகிறது. தல தீர்த்தம் வற்றாத நதியாகக் கூறப்படும் அனுமன் நதி.
கந்தர் சஷ்டியின் போது ஆறு நாட்கள், சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், தை மாத பாரிவேட்டை, தைப்பூசம், திருக்கார்த்திகை ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.