சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்து கிளம்பி சேர நாட்டை நோக்கிப் பயணப்பட்டார். வழியில் திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்படும் அவிநாசியை அடைந்தார். அங்கே வேதியர்கள் சகல மரியாதையுடன் சுந்தரரை வரவேற்று மாடவீதி வழியாக அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது எதிர் எதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் இருந்து மங்கல வாத்தியம் முழங்கும் ஓசை கேட்டது. அதற்கு நேர் எதிர் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. அதைக் கேட்ட சுந்தரர் மனம் வாடினார். அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.
“சுவாமி, இந்த இரண்டு வீட்டின் குழந்தைகளும் மூன்று ஆண்டுகளுக்கு முன் தாமரைக் குளத்தில் குளிக்கப் போனார்கள். அதில் ஒரு பிள்ளையை முதலை இழுத்துப் போய்விட்டது. இன்னொரு குழந்தை தப்பிப் பிழைத்து வந்தான்.
பிழைத்து வந்த குழந்தைக்கு இன்று உபநயனம் நடக்கிறது. அதனால் அந்த வீட்டில் மங்கல ஓசை கேட்கிறது. குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்கள் கலங்கி நிற்கிறார்கள். அவர்களின் தாளாத துக்கம் அழுதாலும் தீராமல் தொடர்கிறது,” என்று அங்கிருந்தவர்கள் விளக்கமளித்தனர்.
சுந்தரர், அந்தப் பெற்றோர்களைக் கண்டு ஆறுதல் சொல்ல அவர்கள் வீட்டுக்குச் சென்றார். வீடு தேடி வந்த இறைத் தொண்டரைக் கண்டதும், தங்கள் துன்பத்தை மறைத்துக்கொண்டு, அவரைப் பணிந்து வரவேற்றனர் பெற்றோர். சுந்தரர் அவர்களின் முகவாட்டத்தைக் குறித்து வினவினார்.
“ஐயனே, எங்கள் மகனை முதலை விழுங்காமல் இருந்தால் இப்போது அவனுக்கும் உபநயனம் செய்திருப்போமே. அதை நினைத்தால் மனம் ஆற மறுக்கிறது,” என்று அவர்கள் சொன்னதும், சுந்தரர் அவர்களை தேற்றினார்.
"கேடுகளைக் களையும் இறைவனின் தொண்டனாக என்னை ஏற்று, என் பாதம் பணிந்து வணங்கிய இவர்களின் துயரைத் துடைக்காமல் அவினாசி அப்பரைத் தரிசிக்க மாட்டேன்,” என்ற சூளுரைத்த சுந்தரர் தாமரைக் குளத்திற்குச் சென்றார்.
“எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய் என்(று) உன்னையே உள்குகின் றேன் உணர்ந்(து) உள்ளத்தால்….”
என்று தொடங்கும் தேவாரப் பாடலை மனமுருகப் பாடினார்.
“உரைப்பார் உரை உகுந்(து) உள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அலைக்(கு) ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே.”
எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானை நினைத்து பதிகத்தைப் பாடும்போது, பாலகனை விழுங்கிய முதலையை மட்டும் குறிப்பிடாமல், சிறுவனின் உயிரை எடுத்துக்கொண்ட காலனையும் இறைஞ்சிக் கேட்பதுபோல் இந்தப் பதிகத்தை அவர் பாடினார்.
இந்த நான்காம் பாடலைப் பாடியதும், காலன் சிறுவனுக்கு உயிர் தந்து, அவன் உடலை மறுபடியும் முதலைக்குள் செலுத்தினார். முதலையும் கரைக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் விழுங்கிய சிறுவனை, உயிரோடும், மூன்றாண்டு வளர்ச்சியோடும் திருப்பித் தந்தது.
பெற்றோர்கள் தங்கள் மகனைத் தழுவி உச்சி முகர்ந்தனர். சுந்தரரை நன்றியுடன் பணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சுந்தரர் அந்தச் சிறுவனை அவிநாசி கோவிலுக்கு அழைத்துச் சென்று, அவரே முன் நின்று உபநயனம் செய்து வைத்தார்.
இந்த தாமரைக் குளம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குத் தெற்கில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குளத்தின் கரையில் சுந்தரருக்கு ஆலயம் இருக்கிறது. முதலை பாலகனைக் கக்கிய வடிவமும் இருக்கிறது!