நினைத்தது நடக்கும்! பெங்களூரு காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலின் மர்மத் தேங்காய் வழிபாடு!

ஆஞ்சநேயர் கோவில் - Karya Siddhi Anjaneya
ஆஞ்சநேயர் கோவில் - Karya Siddhi Anjaneya
Updated on

மீபத்தில் பெங்களூரு சென்றிருக்கையில், ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் நடக்கும் தேங்காய் வழிபாடு பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்று பார்க்கையில், பல சுவாரசியமான விபரங்கள் தெரியவந்தன. ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் கோவில் வளாகத்தினுள் அடி ஆத்தி! பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் அநேகர் என உள்ளே ஒரே பக்தர்கள் கூட்டம்.

கிரி வலம் மாதிரி ஆஞ்சநேயர் சந்நிதியைச் சுற்றி-சுற்றி வருகிறார்கள். ஆங்காங்கே நம்பர் மற்றும் பெயர் எழுதிய முழுத் தேங்காய்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

நுழைவாயிலினுள் முழு தேங்காய்களின் குவியல் வைக்கப் பட்டிருக்கின்றன. வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும், ஒரு முழுத் தேங்காயை எடுத்து குலுக்கி பார்த்து எடுத்துக்கொண்டு பெரிய ஹாலுக்குள் சென்று rs. 100/- கட்டணம் செலுத்தி ரசீது வாங்கிய பிறகு, தேங்காயின் மீது ஸ்கெட்ச் பேனாவால் ரசீது நம்பர் மற்றும் பெயர் எழுதிக் கொடுக்கப்படுகிறது.

ஹாலில் பண்டிட்ஜி ஒருவர் அமர்ந்திருக்க, காத்திருப்பவர்கள், 30. - 30 பேர்களாக (பேட்ச்-பேட்ச்சாக) அவரது முன்பு சென்று வணங்கி கைகளில் முழுத் தேங்காயுடன், கண்களை மூடியவாறு அமர்கின்றனர். அவரவது மனதில் பெயர், நட்சத்திரம், கோத்திரம் ஆகியவைகளை நினைத்துக்கொள்ளக் கூறப்படுகிறது.

நினைத்ததை முடிக்கும் ஆஞ்சநேயர் கோவில் 16 நாள் பூரண பால பூஜை முறை:

ஆஞ்சநேயரின் ஸ்லோகம் ஒன்றை பண்டிட்ஜி கூற, அமர்ந்திருப்பவர்களும் சொல்கிறார்கள். பிறகு அவர்கள் ஆஞ்சநேயரின் ஸ்லோகத்தை மனதிற்குள் கூறியவாறு எழுந்து சென்று, தாங்கள் எண்ணிய காரியம் சித்தி பெற ஆஞ்சநேயரிடம் மனதார வேண்டி, தேங்காயைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு, அதற்குரிய இடத்தில் கட்டுகின்றனர். A, B, C, D என அநேக பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 100 தேங்காய்கள் வரை கட்டப்பட்டுள்ளன.

Karya Siddhi Anjaneya - ஆஞ்சநேயர் கோவில்
Karya Siddhi Anjaneya - ஆஞ்சநேயர் கோவில்AI Image

தேங்காயை நம்பர் மற்றும் பகுதி படி அதற்குரிய இடத்தில் கட்டிய பிறகு, பக்தர்கள் ஆஞ்சநேயர் ஸ்லோகம் சொல்லியவாறே, கோவிலினுள் இருக்கும் ஆஞ்சநேயர், சிவபெருமான், பிள்ளையார் சந்நிதிகளை 16 முறை வலம் வருகின்றனர். இறுதியில் ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

16 நாட்களுக்குள், குறிப்பிட்ட ஏதேனும் நான்கு நாட்கள் ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் வந்து 16 சுற்றுக்கள் ஸ்லோகம் கூறியவாறு சுற்றவேண்டும்.

கடைசி நாள், அதாவது ஐந்தாவது முறையாக வரும் நாளன்று ரசீதைக் காட்டி, தேங்காயை கட்டிய பகுதிக்குச் சென்று தேங்காயை எடுத்துக் கொண்டு சந்நிதியைச் சுற்றி வலம் வந்த பின் வீடு சென்று அதை உடைத்து ஏதாவது ஸ்வீட் செய்து இறைவனுக்கு நிவேதனம் பண்ணிய பிறகு சாப்பிடவேண்டும்.

இவ்வாறு செய்வதின் மூலம் எண்ணிய காரியம் சித்தி பெறுகிறது என்கிற நம்பிக்கையில், ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

இதையும் படியுங்கள்:
விநாயகர் மடியில் கிருஷ்ணர்! எங்கும் காண முடியாத மள்ளியூர் ஆலயத்தின் ரகசியம்!
ஆஞ்சநேயர் கோவில் - Karya Siddhi Anjaneya

ஆஞ்சநேயர் கோவில் தரிசன நேரங்கள் மற்றும் உபரி தகவல்கள்:

கிரி நகர், பெங்களூரில் உள்ள ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் கோவில், 1984 ஆம் ஆண்டு அவதூத தத்த பீடத்தைச் சார்ந்த ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளால் நிறுவப்பட்டுள்ளது. கோவில், ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற, முழுத்தேங்காய் வைத்து மனதார வழிபடும் 16 நாட்கள் பூரண பால பூஜை மிகவும் பிரசித்தமானது. அநேகர் 41 தடவைகள் பிரதட்சிணம் செய்கின்றனர். 16 நாட்களும் 108 முறை ஆஞ்சநேயர் ஸ்லோகம் கூறுகின்றனர்.

ஆஞ்சநேயர் சிலை, 200 டன் எடையில், ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் எண்கோண வடிவமைப்பினைக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
ஒரு கிலோ எடை தங்க சடாரி: வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கிடைக்கும் பெருமாள் பாத தரிசனம்!
ஆஞ்சநேயர் கோவில் - Karya Siddhi Anjaneya

காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 9 மணி வரை. அடியேனும், லோக ஷேமம், மற்றும் அனைவரது நலனுக்காகவும், ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயரை மனதார வழிபட்டு வணங்கினேன்.

ஆஞ்சநேய மந்திரம்

"ஓம் ஆஞ்சநேய வித்மஹே

வாயு புத்ர தீமஹி

தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத்!"

இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வாழ்வில் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வரும் காரியங்கள், கல்வி அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான தடைகளை பெங்களூரு காரிய சித்தி ஆஞ்சநேயரின் அருள் பெற்ற தேங்காய் வழிபாட்டு முறையைச் சரியாகச் செய்து எப்படி மிக எளிதாக வெல்லலாம் என்ற தெளிவான ஆன்மீகத் தீர்வை நீங்கள் அடைவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com