விநாயகர் மடியில் கிருஷ்ணர்! எங்கும் காண முடியாத மள்ளியூர் ஆலயத்தின் ரகசியம்!

malliyoor-ganapathy-temple
malliyoor-ganapathy-templeImage Credit: tsaravanan.com
Updated on

கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில்  மள்ளியூர் ஆலயத்தில்  விநாயகர் மடியில் க்ருஷ்ணர் அமர்ந்திருக்கும் அத்புதக் காட்சியைக் காணலாம். இந்த காட்சி வேறெங்கிலும் காணமுடியாது. 

தல வரலாறு

பல நூற்றாண்டுக்கு முன்  கணபதி மீது பற்றுகொண்ட ஒருவர் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார்.  ஆர்யபள்ளி மனை, வடக்கேடம் மனை என்ற இரு குடும்பத்தினர் அந்த கணபதியை சுற்றிக் கட்டடம் கட்டி வழிபட்டனர்.  பிற்காலத்தில் வறுமை அவர்களை காட்டியதால் அந்த குடும்பத்தினரால் கோவிலை பராமரிக்க இயலவில்லை.  கோவிலில் மேற்கூரை இல்லாத  நிலையிலும்  அவர்கள் தொடர்ந்து கணபதியை வழிபட்டு வந்தனர்.

அவர்கள் மரபு வழியில் வந்த  சங்கரன் நம்பூதிரி என்பவர்  குருவாயூரப்பன்  மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.  அவர் தினமும் கோவில் கணபதி முன் அமர்ந்து வேதவ்யாசரின் கிருஷ்ணன்  பெருமைகளைச் சொல்லும்  பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார்.

பின்னாளில் அவர் குழந்தை வடிவ கிருஷ்ணர் சிலை செய்து கணபதி மடியில்  வைத்து வழிபடத் தொடங்கினார்.  அதன் பின்னர் அந்தக் கோவிலை வழிபட்டு வந்த இரு குடும்பத்தினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். கோவிலும் புதுப்பிக்கப்பட்டு  அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது‌. 

கோவில் அமைப்பு

கருவறையில் கணபதி மடியில் கிருஷ்ணர் அமர்ந்திருக்கிறார்.  ஆலய வளாகத்தில் சாஸ்தா, பகவதி, அந்திமகாகாலன், பிரம்ம ராட்சசன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.  நோயிலிருந்து விடுபட விரும்புவோர்  தடி வைத்தியம்  எனப்படும் பச்சரிசி மாவை படைத்து வழிபடுதல்,  குழந்தை பேறுக்காக பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.

முன்னோர் வழிபாட்டில் சதுர்த்தியூட்டு எனப்படும்  சோறு காய்கறி படைத்து வழிபடுதல், திருமணத்தடை நீங்க செவ்வாய் வெள்ளியில்  சுவாமிக்கு பழமாலை,என பல சிறப்பு வழிபாடுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
தாணுமாலயன் கோவில்: பிரம்மா, விஷ்ணு, சிவன் - ஒரே இடத்தில்! இதற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் ரகசியம்...
malliyoor-ganapathy-temple

வழிபாட்டுக்கு அனைத்து பொருட்களையும்  பணம் செலுத்தி கோவிலிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.  வெளியிலிருந்து கொண்டு வரக்கூடாது. ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் விநாயக சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மண்டல வழிபாடு புஷ்பாஞ்சலி போன்றவைகள் நடைபெறுகின்றன.  தைமாதம் மூலம் நட்சத்திரத்தில் பாகவத சப்த யக்ஞம்  எனும் சிறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

இக்கோவிலில் ஐயப்பனுக்கான மண்டல வழிபாட்டு நாட்களில் கணேச சங்கீத உத்சவம்  என்று இசை விழா நடத்தப்படுகிறது.‌

முக்குற்றி புஷ்பாஞ்சலி

இந்த புஷ்பாஞ்சலி எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் என நம்பப்படுகிறது. 108 முக்குற்றி செடிகளை வேரோடு வைத்து கணபதிக்கு மந்திரங்கள்  108 கூறி  இந்த பூஜை நடைபெறுகிறது.‌ ஒருநாளைக்கு 5 முறை மட்டுமே இந்த புஷ்ப்ஞ்சலி பூஜை நடைபெறுகிறது.

உதய அஸ்தமனபூஜை

காலையிலிருந்து மாலைவரை 18 பூஜைகள்,சீவேலி, விளக்கேற்றும் மற்றும் நவகாபிஷேகம்  போன்றவை நடைபெறுகிறது.

அஷ்ட திவ்ய கணபதி ஹோமம்

விநாயக சதுர்த்தியன்று  1008 தேங்காய்கள், அவல், வறுத்த அரிசிமாவு, தேன், எலுமிச்சை மற்றும்1008 மூலிகை செடிகளுடன்  இந்த  ஹோமம் நடத்தப்படுகிறது.  புதிய பாடகர்களும், இசை கற்பவர்களும் இங்கு வந்து அரங்கத்தில் பாட அவர்கள் இசைத்துறையில் சிறந்து விளங்குவர் என்று கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com