
'புத்தர்' என்பது பொதுவாக, புத்த சமயத்தை உருவாக்கிய கௌதம புத்தரையேக் குறிக்கிறது. கௌதம புத்தருக்கு முன்பாகவும் பல புத்தர்கள் தோன்றியிருக்கின்றனர். கௌதம புத்தருடன் சேர்த்து இதுவரை 28 புத்தர்கள் தோன்றியிருக்கின்றனர் என்கிறது புத்த சமயம். அடுத்து, 29 ஆம் புத்தராகத் தோன்றவிருப்பவர் பெயர் ‘மைத்திரேயர்’ (Maitreya) என்கிறது 'மைத்ரேயவியாகரணா' என்ற சமஸ்கிருத நூல்.
மைத்திரேயரின் அவதாரம் நிகழ்ந்தவுடன் உலகில் உள்ள தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களும் இவரை வழிபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது. மைத்திரேயர் இரு கால்களும் தரையில் படும் வண்ணம் ஆசனத்தில் அமர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையவில்லை என்பதைக் குறிப்பில் உணர்த்துவதாக அமைந்துள்ளது.
மேலும், அவர் பிக்ஷுவின் உடைகளுடனோ, அரச உடைகளுடனோ காணப்படுகிறார். அவரை போதிசத்துவராகச் சித்தரிக்கப்படும் பட்சத்தில் அவர் அணிகலன்கள் அணிந்து நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். அவரது கைகளில் தர்மசக்கரத்தை ஏந்தியுள்ளார். காந்தாரச் சிற்பங்களின் மைத்திரேயர், மத்திய ஆசிய அரசக் குடும்பத்தினரைப் போல் சித்தரிக்கப்படுகிறார்.
மைத்திரேயர் தற்சமயம் துஷித உலகில் இருந்து வருகிறார். மேலும், தியானத்தின் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள இயலும் எனக் கருதப்படுகிறது. கௌதம புத்தரும் கூட பூமியில் அவதரிப்பதற்கு முன் துஷித உலகில் இருந்தார். பொதுவாக போதிசத்துவர்கள், மனித உலகில் புத்தர்களாகத் தோன்றுவதற்கு முன்னர் துஷித உலகத்தில் தங்களுடையத் தோற்றக் காலத்திற்காகக் காத்திருப்பர் எனப்படுகிறது.
மைத்திரேயரின் தோற்றம், இக்காலத்து புத்தரான கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மறைந்த பின் நிகழும் எனக் கருதப்படுகிறது. மைத்திரேயரின் தோற்றம் நிகழும் காலக்கட்டத்தில், தர்மம் என்பதே இந்த உலகத்தில் இருந்து முழுவதுமாக மறைந்திருக்கும். மைத்திரேயர் தன் முன் பிறவியில் செய்த அபரிமிதமான நல்ல கர்மங்களின் காரணமாக, இவ்வுலகில் தோன்றிய ஏழே நாட்களில் போதி நிலை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்திரேயரின் தோற்றம் நிகழும் காலக்கட்டத்தை பின்வரும் நிகழ்வுகளால் அறிந்து கொள்ள முடியும்:
1. பெருங்கடல்கள் அனைத்தும் மைத்திரேயர் கடக்கும் அளவுக்கு சுருங்கிப் போகும்.
2. புத்தரின் பிச்சைப் பாத்திரம் துஷித உலகத்துக்குச் செல்லும்.
3. மனிதர்களின் வாழும் காலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைந்து போய் விடும்.
4. கௌதம புத்தரின் மீதம் உள்ள அனைத்து உடற்பாகங்களும், போதி கயை சேகரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு விடும்.
5. மைத்திரேயர் அவருடைய போதனைகளால் தர்மசக்கரத்தை மீண்டும் சுழல வைப்பார். மறைந்த தர்மத்தை அறிவுறுத்தி, அனைத்து உயிர்களும் நற்பலன் பெற்றிட வழி வகுப்பார்.
மைத்திரேயர் என்ற சொல், ‘மைத்ரீ’ என்ற வடமொழி சொல்லில் இருந்து பிறந்தது. ‘மைத்ரீ’ என்றால் ‘அன்பு’ என்று பொருள். மைத்திரேயர் குறித்த கருத்துக்கள் முதன் முதலில் சகவத்தி சூத்திரம் என்ற பாளி சூத்திரத்தில் காணப்படுகிறது. தேரவாத பௌத்தத்தினர் நம்பும் ஒரே போதிசத்துவர் மைத்திரேயரே ஆவார். மைத்திரேயரின் தோற்றம், இந்து சமயத்தின் கல்கி அவதாரதத்துடன் ஒத்து இருப்பதைக் கவனிக்கலாம். எனவே, சிலர் மைத்திரேயரின் தோற்றம் கல்கி அவதாரத்தில் இருந்து என்று கருதுகின்றனர்.
சிரிக்கும் புத்தராக சித்தரிக்கப்படும் புடாய் என்ற சீன பௌத்த துறவி மைத்திரேயரின் அம்சமாக மக்களால் கருதப்படுகிறார். வரலாற்றில் பலர் தங்களை மைத்திரேயரின் அவதரங்களாக அறிவித்துக் கொண்டனர். ஆனால், எவரையும் மக்களோ, பௌத்த சங்கமோ அங்கீரிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.