
ஸ்ரீராம நவமி விஷ்ணுவின் ஏழாவது. அவதாரமாகக் கருதப்படும் இராமபெருமானின்பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.
வசந்த காலத்தில் சைத்ர. நவராத்திரியின் ஒரு பகுதியாகும். தவிர, 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில், ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. அதனால் இது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராம நவமி பண்டிகை கொண்டாட்ட விபரங்கள் :-
ஸ்ரீராமநவமி தொடர்புடைய சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள், இந்தியா முழுவதும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.
ஸ்ரீராமரின் கதையை விவரிக்கும் இந்து இதிகாசமான ராமாயணத்தை ஓதுவதின் மூலம் ஸ்ரீராமநவமி குறிக்கப்படுகிறது.
வைணவ இந்துக்கள் கோயில்களுக்குச் சென்று, பிரார்த்தனை செய்து, உண்ணாவிரதம் இருந்து, ஆன்மீக சொற்பொழிவுகளைக் கேட்டு, பஜனைகள் அல்லது பக்திப்பாடல்கள் பாடுவதன் மூலம் ஸ்ரீராமநவமி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
சில பக்தர்கள், ஸ்ரீராமரின் உருவத்தை தொட்டிலில் படுக்க வைத்து ஒரு குழந்தையைப் போல எண்ணி ஆடி - பாடி ஸ்ரீராமநவமியன்று வழிபடுகிறார்கள்.
ஸ்ரீராமநவமி தினம், பல தொண்டு நிறுவனங்கள், இலவசமாக உணவுகள், நீர்மோர், பானகம் ஆகியவைகளை விநியோகிக்கின்றன. ஸ்ரீராமநவமி விழா, பல இந்துக்களுக்கு தார்மீக பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
ஸ்ரீராமநவமி நாளில் முக்கியமான கொண்டாட்டங்கள் அயோத்தியின் ராமர் கோவில் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான ராமர் கோயில்களில் விமரிசையாக நடை பெறுகின்றன. மேலும், ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமனின் ரத ஊர்வலங்கள் பல இடங்களில் நடைபெறுகின்றன. அயோத்தியில் அநேகர் புனித நதியாகிய சரயுவில் நீராடிய பின்னர் ராமர் கோயிலுக்குச் செல்கிறார்கள்.
கிழக்கு இந்திய மாநிலங்களாகிய ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களிலும், ஜெகந்நாதர் கோயில்கள் மற்றும் பிராந்திய வைணவ சமூகங்களும் ஸ்ரீஇராம நவமியைக் கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் இந்தியாவை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட இந்திய ஒப்பந்த ஊழியர்கள் 1910 ஆம் ஆண்டுக்கு முன் காலனித்துவ தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான தோட்டங்கள் மற்றும் சுரங்கங்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததின் பேரில் பல வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள் இராமாயணத்தை பாராயணம் செய்தும், தியாகராஜர் மற்றும் பத்ராச்சல இராமதாசு ஆகியோரின் பாடல்களைப் பாடியும் இந்துக் கோவில்களில் ஸ்ரீஇராம நவமியை தங்கள் பாரம்பரிய பண்டிகைகளுடன் தொடர்ந்து அனுசரித்து வருகின்றனர்
பிஜி தீவில் வாழும் இந்துக்களாலும் வேறு இடங்களில் மீண்டும் குடியேறிய பிஜி இந்துக்களாலும் ஸ்ரீராமநவமி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்:-
தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும், அதர்மத்தை வெல்லும் தருமத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கும் வகையில் ஸ்ரீராமநவமி விழாவின் முக்கியத்துவம் உள்ளது.
சூரிய குல வழித்தோன்றல்கள், இராமனின் முன்னோர்கள் என்ற நம்பிக்கையினால் அதிகாலையில் சூரியனை வணங்கியும், விரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் ஸ்ரீஇராம நவமி விழாவைக் கொண்டாடுகின்றனர்
"ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே; ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே! ஸ்ரீராமராம வரானன ஓம் நம இதி: !"