
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் செட்டிகுளம்
அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
செட்டிகுளத்தில் அருள்பாலிக்கும் சிவன்
காலமும் கட்டுமானமும்: குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.
ஆலய அமைப்பு: ஏழு நிலை ராஜகோபுரம் கொண்ட திருக்கோயில். கருவறையில் ஈசன், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுயம்பு லிங்கத்திருமேனியராய் காட்சியளிக்கிறார்.
ஆதிகாலத்தில், பேரொளியின் மத்தியில் சுயம்புவாக தோன்றியவராதலால் இறைவனுக்கு 'ஜோதிலிங்கம்' என்னும் திருப்பெயரும் உண்டு. சுவாமிக்கு இடப்புறம் உள்ள தனிக்கோயில் அமைப்பிலான சன்னதியில் அம்பாள் அழகு தேவதையாக காட்சியளிக்கிறார். இறைவி சன்னதியின் கோஷ்டத்தில் லட்சுமி, சரசுவதி உள்ளனர். உள் திருச்சுற்று மண்டபத்தில் இசையினை எழுப்பும் வெவ்வேறான இசையை எழுப்புகின்ற 10 தூண்கள் உள்ளன.
ஸ்தபன மண்டபத்தில் வலப்புறம் காணப்படுகின்ற துவாரபாலகரின் அருகே உள்ள ஒரு சிற்பம் யானையும், காளையும் ஒரே தலையைக் கொண்டு எதிர் எதிராக இணைந்து காட்சி தரும் நிலையில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.
உள் திருச்சுற்று மண்டபத்தில் கன்னி மூலையில் வரகுண கணபதி அருகே நாகர் உள்ளார். மேற்குத் திருச்சுற்றில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன.
சிவபெருமானின் அருள் பெற்ற குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. குபேரன் மீன் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். கோயிலின் பிற திருச்சுற்றில் அறுபத்துமூன்று நாயன்மார்கள், கன்னிமூல கணபதி, காசி விசுவநாதர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.
ஆலய தீர்த்தம் பிரம்மா தீர்த்தம்; விருட்சம் வில்வம்.
உற்சவங்களும் விழாக்களும் :
தினசரி நான்குகால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் சிவாலயத்துக்கே உரித்தான மாதா பட்ச உற்சவங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.
பெருந்திருவிழாவாக தை மாசம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் தைப்பூச தேர் திருவிழாவாக நடைபெறுகிறது.
பிரார்த்தனையும் பரிகாரமும்:
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள், இவ்வாலய இறைவன் மீது சூரிய பகவானின் ஒலிக்கதிர்கள் படரும் பங்குனி மாதம் 19,20,21ஆகிய தேதிகளில், நடைபெறும் சிறப்புமிகு அபிஷேகங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டு அபிஷேக தீர்த்தத்தை வாங்கி பருகுகின்றனர். இறைவன் அருளால் குழந்தை பிறந்த பிறகு ஆலயத்திற்கு வந்து அபிஷேக ஆராதனை செய்து பரிகாரம் மேற்கொள்கின்றனர்.
தல சிறப்பு:
ஏழு ஜென்ம பாவங்களின் தாக்கத்தை போக்கும் சிவாலயமாக கருதப்படும் இத்திருத்தலம் கலைநயம் மிக்க சிற்பங்களுடன் காட்சியளிக்கிறது. தூண்களில் வடிக்கப்பட்டுள்ள, பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் (அவருக்கு உரிய வாகனமான மீன் மீது அமர்ந்து) அருள்புரிவது இச்சிவத்தலத்தின் தலையாய சிறப்பாகும். இச்சிவத்தலத்தின் அருகில், எம்பெருமான் கரும்புடன் அருள்புரியும் பிரசித்தி பெற்ற செட்டிகுளம் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது.
அமைவிடம்:
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொழுதுருக்கும் பெரம்பலூருக்கும் இடையில் ஆலத்தூர் அருகில் உள்ளது செட்டிகுளம்.