சிதம்பரம் நடராஜர் கோவில்: மனித உடல் ஒரு கோவில் என்பதற்கு சாட்சி!
சிதம்பரம் நடராஜர் கோவில் (Chidambaram Nataraja Temple) கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக கருதப்படுகிறது. 21,600 தங்கக் கூரைகள், 72,000 தங்க ஆணிகள், 5 சபைகள், 56 தூண்கள், 64 கலைகள் போன்ற அற்புதமான கட்டடக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இங்கு திருவிழா காலங்களில், மூலவர், உற்சவரராக வலம் வருவார்.
நால்வர் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது. பதஞ்சலி முனிவர் தவம் செய்த இடமாகும். பல ஆன்மீக பெருமைகளை கொண்ட இடமாக விளங்கி வருகிறது.
1. கட்டடக்கலை மற்றும் மனித உடல் தத்துவம்
இந்தக் கோவிலின் அமைப்பு மனித உடலை அடிப்படையாகக் கொண்டது என்பது ஆச்சரியமான உண்மை:
21,600 தங்க ஓடுகள்: இது ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் சராசரி மூச்சுக் காற்றின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
72,000 தங்க ஆணிகள்: இது மனித உடலில் உள்ள 72,000 நாடிகளை (Nerves) குறிக்கிறது.
பொன்னம்பலம் (இதய வடிவம்): மூலஸ்தானம் இதயத்தைக் குறிக்கும் வகையில் இடதுபுறம் சற்றே சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
9 நுழைவு வாயில்கள்: இவை மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கின்றன.
2. சபைகள் மற்றும் தூண்கள்
சிதம்பரத்தில் 5 முக்கியமான சபைகள் உள்ளன:
சிற்சபை (Chitsabha)
கனகசபை (Kanakasabha)
நிருத்த சபை (Nrithyasabha)
ராஜ சபை (Rajasabha - 1000 கால் மண்டபம்)
தேவ சபை (Devasabha)
28 தூண்கள்: சிற்சபையில் உள்ள 28 தூண்கள் சிவபெருமான் அருளிய 28 ஆகமங்களைக் குறிக்கின்றன.
நிருத்த சபை (108 கரணங்கள்): இங்கு பரதநாட்டியத்தின் 108 முத்திரைகளும் (Karanas) சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலின் மேல் கூரையில் உள்ள 64 குறுக்கு மரங்கள் (Girders) தான் மனிதனின் 64 கலைகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
வைணவர்களுக்கு கோவில் திருவரங்கம் போல் சைவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளது. ஆனித் திருமஞ்சனம் மார்கழி திருவாதிரை திருவிழா போன்றவை சிறப்பாக நடைபெறும்.
சிற்றம்பலத்தில் நடராஜர், சிவகாமி சுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பராசக்தி, மும்மூர்த்திகள் அருள் பாலிக்கிறார்கள். திருமாலை நோக்கி நடராஜர் இருப்பது சிவ விஷ்ணு ஐக்கியத்தை காட்டுகிறது. இந்த கோவில் அனைத்து திருமுறைகளையும் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
'தில்லைக் கூத்தன் கோவில்' எனவும் அழைக்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம் என்றாலும் இந்த ஸ்தலத்தை குறிக்கும். இந்த கோவிலை 'பூலோக கைலாயம்' என அழைக்கிறார்கள். இங்கு தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
தலவிருட்சம் தில்லை மரம் ஆகும். தில்லை மரங்கள் பிச்சாவரம் வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.
இங்கு பத்து தீர்த்தங்கள் உள்ளன. 4000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
பஞ்ச பூதங்களில் முதல் ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்தக் கோவில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சன்னதிகள் உள்ளன. ஏராளமான லிங்கங்கள் காணப்படுகிறது. இந்த கோவிலில் எமனுக்கும், சித்திரகுப்தனுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கோபுரம் ஆடல் கலை அம்சமாகும். மற்றொரு கோபுரம் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், குபேரன், புதன், பத்ரகாளி, துர்க்கை, கங்கா தேவி, திருமூலர், பதஞ்சலி சிலைகள் இடம் பெற்றுள்ளனர்.
மன்னர் அசோகன் இந்த கோவிலை புத்த கோவிலாக மாற்ற எண்ணினார். மாணிக்கவாசகர் தன் திறமையால் அவர்களை ஊமையாக்கி சிதம்பரம் கோவிலை காப்பாற்றினார்.
இங்குள்ள விநாயகர் மூத்தநாயனார், பொல்லா பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். மாணிக்கவாசகர், நந்தனார், திருநீலகண்டர் ஆகியோர் முக்தி பெற்ற ஸ்தலமாகும்.
உமாபதி சிவாச்சாரியார் கொடி கவி பாடி கொடியேற்றி வைத்தார். முத்து தாண்டவர் பாடிய பாடலுக்காக தினசரி சிவன் படிக்காசு வழங்கி வந்தார் என வரலாற்று குறிப்பு உள்ளது. சங்க காலத்துக்கு முன்பாகவே இந்த கோவில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. பல்லவ மன்னரால் கட்டப்பட்டு அதன் பின்னர் சோழ மன்னரால் திருப்பணி நடைபெற்றது.
முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் இந்த கோவில் தாக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
இங்கு அர்த்த ஜாம பூஜை தாமதமாக தான் நடைபெறும். ஏனென்றால் அர்த்த ஜாமம் பூஜையின் போது அனைத்து தெய்வங்களும் இந்த பூஜையில் கலந்து கொள்வதாக ஐதீகம். நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய இந்த இடத்தில் தான் பிரபஞ்சமே இயங்குகிறது என சொல்லப்படுகிறது. சிதம்பர ரகசியம் பகுதியில் வில்வத்தலம் தொங்கும் காட்சியை பார்த்தால் முக்தி கிடைக்கும்.
சிதம்பரத்தில் மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ளனர். 'ஓம்' என்ற பிரணவ மந்திர அடிப்படையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
எட்டு திசைகளிலும் சாஸ்தாவின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் லிங்க வடிவில் 'ஆதிமூலநாதர்' என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். நடராஜர் தாண்டவம் ஆடும் இடம் பூமத்திய ரேகையின் மையப்பகுதி ஆகும்.
ஆனந்த தாண்டவம் 'காஸ்மிக் டான்ஸ்' என வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். சுவிட்சர்லாந்து பௌதிக ஆய்வு கூடத்தில் நடராஜர் சிலை பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடும் கால் பகுதி தான் இந்த உலகின் மையப் பகுதி ஆகும். பிரபஞ்சமே இதன் மூலம் இயங்குகிறது. இவ்வளவு பெருமைகள் அடங்கிய இந்த கோவிலை வாழ்க்கையில் ஒரு முறை ஏனும் பார்த்து வர வேண்டும்.

