

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சமீபத்தில் (ஜூன் 12, 2026 அன்று) கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். மூகாம்பிகை அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளைக் காணிக்கையாகச் செலுத்தினார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பாரம்பரிய முறையில் "பூர்ணகும்ப" வரவேற்பு அளிக்கப்பட்டதைப் பார்த்திருப்போம், அத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மனைப் பற்றிய அரிய தகவல்களை அறிவோம்.
மூகாம்பிகை கோவில் உருவான வரலாற்றுப் பின்னணியும் கொல்ல மகரிஷியின் தவமும்!
கொல்ல மகரிஷி என்பவர் இங்கே வந்து தவம் செய்ததினால் இந்த ஊர் கொல்லூர் என்று பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. மூகாசுரனை அழித்ததினால் அன்னை மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். குடஷாத்ரி மலை அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்கிறாள் அன்னை பராசக்தி சக்தியும் சரஸ்வதியும் லட்சுமியும் சேர்ந்த சக்தி வடிவந்தான் மூகாம்பிகை.
ஆதிசங்கரர் உலக நலத்தின் பொருட்டு அன்னையின் அருள் வேண்டி அழைத்தார். பக்தனின் விருப்பத்திற்கு இணங்கிய அன்னை ஒரு நிபந்தனை விதித்தாள் நீ திரும்பி பாராமல் எவ்வளவு தூரம் போகிறாயோ அதுவரை நானும் உன் பின்னால் வந்து கொண்டே இருப்பேன் எக்காரணத்திலாவது நீ திரும்பி பார்த்தால் அங்கே அதே இடத்தில் நின்று விடுவேன் என்றாள் அன்னை. அந்த நிபந்தனைக்கு இணங்கி சங்கரரும் திரும்பி பார்க்காமல் சென்றுகொண்டே இருந்தார். அன்னையின் பாதச் சிலம்பின் சதங்கை ஒலி பின்னால் கேட்டுக்கொண்டே இருந்தது பல காலமாக ஒரு யக்ஷினி தன் சாப விமோசனத்திற்காக கொல்லூரில் காத்திருந்தாள்.
அவள் மணி அடிக்கவே சங்கரர் சட்டென திரும்பி பார்த்தார். உடனே அகிலாண்டேஸ்வரி இங்கே உறைந்து விட்டாள். கொல்லூர் திருத்தலம் சிறிய ஊர் தான் என்றாலும் கோவில் அவ்வளவு சிறியதல்ல நான்கு சுற்றுப்புற வீதிகள் உள்ளன கோவிலின் கோபுர அமைப்பு உள்ளே அகலமான சுற்று பிரகாரம் ஒரு பிரகாரம் கொடி மரம் கலா அரங்கேற்ற மண்டபம் மூலஸ்தானம் ஆகியன கேரள மாநில பாணியில் அமைந்துள்ளன பெரும்பாலும் கற்கட்டடங்களாகவே இருக்கின்றன. கோவிலுக்கு செல்லும் முக்கியமான வாசல் கிழக்கு திசையில் இருக்கிறது.
இங்கு கருவறையில் அன்னை மூகாம்பிகையும் அன்னைக்கு முன்னால் சிவலிங்கமும் உள்ளது. அன்னையின் பஞ்சலோகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னையின் சிலை ரத்தின ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி அபய ஹஸ்தங்கள்டனும் தங்க வாளும் கொண்டு அலங்கார தேவதையாக கொலு வீற்றிருக்கிறாள்.
சௌந்தர்ய லஹரி என்றால் அழகுக்கலை என்று பொருள் அழகு கலையாக உள்ள அம்பிகையை ஸ்லோகங்களால் வர்ணிக்கும் துதி ஆதிசங்கரரால் இந்த தலத்தில்தான் அருளப்பட்டது.
மூகாசுரனை கொன்ற பிறகு தேவி மிகவும் உக்கிரமாய் இருந்தாள். ஆதிசங்கரர் அங்கு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து அம்பாளின் கோபத்தை தணித்து சாந்த ஸ்வரூபியாகச் செய்தார் என்று கூறப்படுகிறது. அன்னையின் முன்னால் இருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கமாகும் கொல்ல மகரிஷி இங்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தபோது தானாகவே தோன்றியது இந்த லிங்கம் ஆதிசங்கரர் இந்த லிங்கத்தை பூஜை செய்ததாகவும் பிறகு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.
மூகாம்பிகை கோவில் சுயம்பு லிங்கத்தின் தங்கக் கோடு காட்டும் அர்த்தநாரீஸ்வர வடிவம்!
அபிஷேகம் அர்ச்சனை நைவேத்தியம் எல்லாம் இந்த சுயம்பு லிங்கத்துக்குதான் லிங்கத்தோடு உள்ள அன்னை அமைப்பு மிகவும் அபூர்வமானது. இந்த சுயம்பு லிங்கம் தங்க கோட்டினால் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அபிஷேகம் முடிந்த பிறகு சூரிய வெளிச்சத்தை கண்ணாடி மூலம் பிரதிபலித்தால் லிங்க மத்தியில் தங்க ரேகையை காணலாம். இந்த மாதிரி லிங்கம் வேறு எங்குமே இல்லை என்று சொல்லப்படுகிறது
தங்கக்கோடு வலப்புறம் சிறியதாகவும் இடப்பக்கம் பெரியதாக உள்ளது. வலப்புறம் மும்மூர்த்திகளையும் பிரம்மா விஷ்ணு ஈஸ்வரன் இடப்புறமானது காளி லஷ்மி சரஸ்வதி ஆகிய வரையும் குறிக்கிறது. இவ்வாறு இரு பக்கத்திலும் இருக்கின்ற சக்திகளை இந்த தங்க கோடு சேர்க்கின்றது. இவ்வாறாக இந்த லிங்கம் அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டு விளங்குகின்றது .
சுயம்பு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள். லிங்கத்திற்கு தங்க கவசம் அணிவிக்கிறார்கள் பின்னால் பிரதிஷ்டை செய்திருக்கும் பகவதிக்கும் தங்க கவசம் அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். தீப ஒளியில் ஜோதிஸ்வரூபமாக அன்னையின் நெற்றிச்சுற்றி தெரியும் சிறிய மரகதமும் மார்பில் தெரியும் பெரிய மரகத மணியும் கூடவே சுடர்விடுகின்றன. பராசக்தி சர்வாலங்கார புஷிதையாக பொன்னொளி வீசும் நெய் தீப ஆரத்தி ஒளியில் நம்மை மெய்மறக்க செய்கிறாள்.
ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும் சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்மனை சீவேலி என்று ஆலயத்தை திருவலம் செய்விக்கும்போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும், இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
அன்னை மூகாம்பிகை எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானத்தைச் சுற்றிலும் தென்கிழக்கு பக்கத்தில் சுப்பிரமணியருக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு சுப்பிரமணியர் நாகரூபமாக காட்சியளிக்கிறார் .
கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது விநாயகரை பார்க்கலாம். இவர் ஹஸ்தகனபதி பஞ்சமுக கணபதி வெள்ளைநிறத்தில் பத்து கரங்களுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத காட்சியாகும்.
இந்த கோவிலின் தென்புறம் ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி ஆலயம் உள்ளது. அன்னை மூகாம்பிகையின் சன்னதிக்கு வந்து வணங்கியவுடன் ஸ்ரீ வீரபத்திர சாமி ஆலயத்திற்கு சென்று வணங்க வேண்டும் என்பது மரபு.
தினமும் விடியற்காலை காலை சன்னதி திறக்கப்பட்டவுடன் புதிய பூக்களால் அன்னை அலங்கரிக்கப்படுகின்றாள். அதற்கு பிறகு தந்த தாவன பூஜையும் உதய கால பூஜையும் நடக்கிறது. ஸ்ரீபலி பிரதட்சணத்தை அடுத்து பக்தர்களுக்கு குடிசாந்தி எனப்படும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இங்கு ஏகாந்த சேவைக்கு பிறகு கஷாயம் தீர்த்தம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இது சுக்கு கஷாயமாகும். ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது அம்பிகை தாமே தயாரித்த சுக்குக் கஷாயம் கொடுத்ததாக புராணம் சொல்கிறது . இந்த சுக்கு கஷாயம் சர்வ ரோக நிவாரணியாக கருதப்படும் இந்த பிரசாதத்தை பக்தர்கள் அனைவரும் உட்கொண்டு பயனடைகிறார்கள்.
கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் நடக்கும் சண்டி ஹோமம் குடும்பத்தோடு செய்யப்படும் ஒரு அபூர்வ பூஜையாகும் கோவிலிலேயே அதிக செலவில் நிறைவேற்றப்படும் ஹோம பூஜை இதுதான். அதற்கேற்ற சக்தியும் அந்த பூஜைக்கு உண்டு எந்த காரியத்தையாவது செய்யும் முன்னர் கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் வந்து அம்பாளை பிரார்த்தித்து அவள் எல்லைக்குள் சண்டி ஹோமம் செய்தால் எந்த அந்த காரியம் எந்த விக்னமும் இல்லாமல் வெற்றியடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
இந்தக் கோவிலில் பிரார்த்தனை செய்து வழிபட்டவர்கள் அரசியல் தலைவர்களும் பக்தர்களும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறி அன்னை மூகாம்பிகையின் அருளை பெற்று வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம். உடுப்பியிலிருந்து சுமார் எழுபத்தி மூன்று கிலோமீட்டர் தூரத்திலும் மங்களூரில் இருந்து சுமார் நூற்றி முப்பத்தி மூன்று கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது இந்த தலம்.