

டிசம்பர் 19-ம்தேதியை தவறவிடாதீர்கள். அன்றைய தினம் மார்கழி மாதத்தில் வரும் கடைசி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி வருகிறது. மார்கழி மாத அமாவாசை துனர் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை திதி மார்கழி மாதம் 4-ம் தேதி(டிசம்பர் 19-ம்தேதி) வெள்ளிக்கிழமை காலை 5.57 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் சனிக்கிழமை காலை 7.54 மணி வரை உள்ளது. மார்கழி மாதம் அமாவாசை என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒருநாள். இந்த நாளில் பித்ருக்களுக்கு உணவு வைத்தால் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும்.
பொதுவாக ஆன்மிக ரீதியாக மார்கழி மாதம் என்பது ஆண்டின் மிகச்சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இது வழிபாட்டிற்கும் வரங்களை பெறுவதற்கும் உகந்த மாதம். மார்கழியில் மறவாமல் வழிபட்டால் வருங்காலம் செழிக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப நாளை தினம் நாம் செய்யும் தர்ப்பணம் நமது பரம்பரையை வாழவைக்கும்.
நாளை அமாவாசை நாளில் வீட்டில் ஒரு சின்ன பாத்திரத்தில் கருப்பு எள் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவன், அம்மன், பெருமாள் என அந்த கடவுளாக இருந்தாலும் சரி மனதார வேண்டிக்கொண்டு இதை மனதார சொல்ல வேண்டும்...
"என் முன்னோர்கள் அனைவரும் திருப்தி அடைய என் வீட்டில் வளமும் செல்வமும் நிலைக்க இந்த எள்ளை சமர்ப்பிக்கிறேன்."
இத்தனைக்கு இந்த நாளில் இதை ஒன்றை செய்தால் போதும், உங்கள் வாழ்க்கையில் கடன் சுமை, தடைப்பட்ட பணவரவு, குடும்ப பிரச்சனை, மன அமைதி இல்லாமை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் பனிபோல் கரைந்து விடும்.
அதுமட்டுமின்றி இந்த அமாவாசை நாளில் முருகப்பெருமானுக்கு இதை செய்தால் முருகனின் அருளை முழுமையாக பெறமுடியும். முன்னோர்களுக்கு தர்ப்பணம், படையல் செய்ய முடியாதவர்கள் இதை முருகனுக்கு செய்தால் உங்களின் பித்ரு சாபங்கள் நீங்கும். இந்த அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாள் என்பதால் நாம் வேண்டியதை முருகன் சோதனைகள் இல்லாமல் நடத்திக்கொடுப்பார்.
ஒரு வாழை இலை அல்லது ஒரு வெற்றிலை வாங்கி கொள்ளுங்கள். இந்த இலைக்கு மேலே நவதானியங்கள் அல்லது நெல் இல்லை என்றால் பச்சரிசி வைத்துக்கொள்ளுங்கள். அதன் மேல் ஒரே ஒரு அகல் விளக்கு வைத்து அதில் ஐந்து முகத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி இட்டு மனதார முருகனை வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வேண்டும். நாளை தினம் அமாவாசை காலை 5.57க்கு தொடங்குகிறது. நீங்கள் இந்த விளக்கை 6.30 மணிக்கு ஏற்ற வேண்டும்.
மேலும் நாளை தினம் (டிசம்பர் 19-ம்தேதி) வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி என்பது ராமபிரானின் பரம பக்தரான ஆஞ்சநேயர் அவதரித்த தினமாகும். மார்கழி மாத மூல நட்சத்திரமும் அமாவாசையும் இணையும் நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அனுமனுக்கு துளசி மாலை சாற்றி, உளுந்து வடை பிரசாதமாக படைத்தால் ராகு தோஷம் நீங்கும். நாளைய தினம், ராமநாமம் சொல்லி ஆஞ்சநேயரை மனதார வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். கஷ்டங்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை இருக்காது. கிரகதோஷம் நீங்கும். குடும்பத்தில் துன்பங்கள் விலகும், சகல மங்கலங்களும் வந்துசேரும் என்பது நம்பிக்கை.
அனுமன் ஜெயந்தி அன்று நாம் செய்யும் சிறிய வழிபாடு கூட மும்மடங்கு பலனைத்தரும். அனுமனுக்கு மிகவும் பிடித்தது பணிவு மற்றும் ராமநாமம். நாளைய தினம் வெள்ளிக்கிழமை 10 ரூபாய் கொடுத்து சிறிய மண் அகல்விளக்கு வாங்கி நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரிட்டு தீபம் ஏற்றி ராமநாமம் பாடுவது நிச்சயமாக அனுமனை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி ராம நாமத்தை ஜெபித்தபடி நாள் முழுவதும் இறை சிந்தனையில் இருக்க வேண்டும். கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வீட்டில் அனுமனுக்கு உளுந்து வடை, வெண்பொங்கல், வெண்ணெய், செவ்வாழை, வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
அனுமன் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தை, 108, 1008, 10,008 முறை உச்சரிப்பது மன அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும். மேலும் நாளைய தினம் அனுமனுக்குரிய பாடல்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டம் போன்றவற்றை படிப்பது சிறப்பு. குறிப்பாக சுந்தர காண்டம் படித்து வழிபட்டால், ஆஞ்சநேயர் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.