

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்தாண்டு வரும் நவம்பர் 8-ம்தேதி (ஞாயிற்று கிழமை) கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றால் "தீபங்களின் வரிசை" அல்லது "ஒளித் திருவிழா" என்று பொருள். இந்தச் சொல் சமஸ்கிருத மொழியில் உள்ள 'தீபாவளி' (Deepavali) என்பதிலிருந்து வந்தது. 'தீபம்' (விளக்கு) மற்றும் 'ஆவலி' (வரிசை) என்ற சொற்களிலிருந்து வந்த ஒளித்திருநாள் ஆகும். இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் இது குறிக்கிறது. அதாவது, இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் இந்நிகழ்வு, தீய சக்திகள் மீது நல்ல சக்திகள் பெற்ற வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றி, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாகவும், வடஇந்தியாவில் இராமன் 14 ஆண்டு வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வட இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தீபாவளி ஒரே நாளில் வருகிறது. வடமாநிலங்களில் சில பகுதிகளிலும் தீபாவளி ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் வட இந்தியாவில் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்குத் தொடங்குவதும் இந்த தீபாவளி திருநாளில் தான்.
முக்கியமாக தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது எண்ணெய்க் குளியல், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல் மற்றும் இனிப்புடன் கூடிய பலகாரங்கள் ஆகும்.
வாருங்கள் இன்று தீபாவளி குறித்த வழிபடும் முறைகளையும் கங்கா ஸ்நானம், அமாவாசை, லட்சுமி குபேர பூஜை ஆகியவை செய்ய உகந்த நேரம் என்ன என்பன குறித்தும் அறிந்துகொள்வோம்.
தீபாவளி 2026 நல்ல நேரம், பூஜை நேரம்:
சிறப்பு மிகுந்த தீபாவளி பண்டிகை இந்தாண்டு வரும் நவம்பர் மாதம் 8-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது (வாக்கியப் பஞ்சாங்கப்படி). இதேபோல் தீபாவளி அமாவாசை திதியும் நவம்பர் 8-ம்தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.
தீபாவளி அமாவாசை நேரங்கள்:
அமாவாசை தொடக்கம்: நவம்பர் 8-ம்தேதி காலை 11:28 மணி
அமாவாசை முடிவு: நவம்பர் 9-ம்தேதி நண்பகல் 12.31 மணி
சிவனின் உடலில் பாதி இடம் பெற பார்வதி இருந்த நோன்புதான் கேதார கௌரி விரதம். இது கேதாரேஸ்வரராகிய சிவபெருமானுக்கும், கௌரி (பார்வதி) தேவிக்கும் அனுசரிக்கப்படும் 21 நாள் விரதமாகும். இந்த ஆண்டு அது தீபாவளி அன்றே வருகிறது. அக்டோபர் 19 அன்று தொடங்கி, இந்த அமாவாசையில் (தீபாவளி) முடிவடைகிறது.
பக்தர்கள் 21 முடிச்சுகள் கொண்ட புனித நூலைக் கொண்டு 21 நாட்களை எண்ணி, 21 வகையான நிவேதனங்கள் அல்லது எளிய முறையில் பழங்களைச் சமர்ப்பித்து, தீபாவளியின் இருண்ட இரவான தீபாவளி அமாவாசையில் விரதத்தை நிறைவு செய்கிறார்கள். முழு 21 நாட்களும் விரதம் இருக்க முடியாத பல குடும்பங்கள், இறுதி அமாவாசை அன்றே ஒரு நாள் விரதம் அனுசரிக்கின்றன.
கங்கா ஸ்நானம்:
தீபாவளிப் பண்டிகை அன்று அதிகாலையிலேயே எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, உஷ்ண காலத்தில் (சூரிய உதயத்திற்கு முன்) கங்கா ஸ்நானம் செய்வது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.
இந்தாண்டு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணெய் குளியல்) செய்ய நல்ல நேரம் அதிகாலை 4:28 மணி முதல் காலை 6:04 மணி வரை ஆகும்.
'நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி அன்று உஷத் காலத்தில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்’ என்கிறது சாஸ்திரம். 'தைலே லக்ஷ்மீ ஜலே கங்கா' என்பது புராண வாக்கு. அதாவது, தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி உட்கார்ந்திருக்கிறாள். நீரில் கங்கை இருக்கிறாள்.
பொதுவாக கங்கையில் நீராடக் காசிக்குச் செல்ல வேண்டும். ஆனால் தீபாவளி அன்று அதிகாலை வேளையில் அனைத்து நீர்களிலும் கங்கையின் சாந்நித்தியம் (கடவுளின் தெய்வீக இருப்பு) நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட கங்கை சகல பாவங்களும் போக்கும் சக்தி கொண்டது.
லட்சுமி நம்மோடு இருந்தால் ஐஸ்வரியம் பெரும். இதற்காகவே பெரியோர்கள் இப்படிப்பட்ட நியமங்களை வகுத்திருக்கிறார்கள். அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்யச் சொல்கிறார்கள்.
லட்சுமி குபேர பூஜை நல்ல நேரம்:
தீபாவளி அன்று மாலை (அமாவாசை அன்று) லட்சுமி குபேர பூஜை செய்வது செல்வமும் வளமும் தரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வணிகத் தலங்களில் இந்த பூஜையைச் செய்துவந்தால் வியாபாரம் விருத்தியாகி லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
இந்நாளில் (தீபாவளி) லட்சுமி பூஜைக்கான நல்ல நேரம் (முகூர்த்தம்) மாலை 6:24 மணி முதல் இரவு 8:24 மணி வரை ஆகும்.
அன்றைய தினம் அமாவாசை காலை 11:53-க்கே தொடங்கிவிடுவதால், மாலை லட்சுமி குபேர பூஜை அமாவாசையிலேயே அமைகிறது. அன்றைய தினம் சூரியன் மறைந்து ராகு காலம் (4.30-6) முடிந்ததும், மாலை 6:00 முதல் விளக்கேற்றிப் பூஜை செய்யலாம்.
இந்த காலத்தில் பூஜை செய்தால் லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வந்த செல்வதற்கு பதிலாக அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கு மிகவும் நிலையான சூழல் உருவாகும்.
வீட்டில் லட்சுமி தேவியின் படம் மற்றும் குபேரனின் படங்களை வைத்து விளக்கேற்றி வீட்டில் இருக்கும் ஆபரணம் ஏதேனும் ஒன்றை அணிவித்து மகாலட்சுமிக்கு உரிய அஷ்டோத்திரம் படித்துப் பூஜை செய்வது அவசியம். "ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்ம்யை நமஹ" மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
இந்த நாளில் பூஜை முடித்து ஏழைகளுக்குத் தேவையான உடை, உணவு ஆகியவற்றை தானம் செய்தால் சகல பாவங்களும் விலகிப் புண்ணிய பலன்கள் பெருகும். எப்போதும் ஐஸ்வர்யம் நிறைந்து காணப்படும் என்பது ஐதீகம்.
இந்தாண்டு தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதாலும் சூரியன் ‘ஆத்மகாரகனாக’ இருப்பதாலும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வணிகத் தலங்களில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பூஜையையும் புதிய தொடக்கங்களையும் நல்ல நேரத்திலோ கௌரி நல்ல நேரத்திலோ வைத்துக்கொள்ளுங்கள். ராகு காலம் மற்றும் எமகண்டம் ஆகிய நேரங்களில் புதிய காரியங்களையோ அல்லது பூஜைகளையோ தொடங்குவதைத் தவிர்ப்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து ஆன்மீக மரபுகளில் மிக முக்கியமாகப் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.