
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ள தேரழுந்தூர் 108 வைணவ திருக்கோவில்களில் பத்தாவது ஆகும். இங்குள்ள பெருமாளை கோசகன் என்றும் தேவாதி ராஜன் என்றும் அழைக்கிறார்கள். பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன மேனி. 13 அடி உயரத்தில் நின்ற கோலம்.
உற்சவர் - ஆமருவியப்பன்
தாயார் - செங்கமலவல்லி
பஷ்கரிணி - தர்சண புஷ்கரிணி
மங்களாசாசனம் செய்தவர்கள் - திருமங்கை ஆழ்வார் 45 பாசுரங்களை பாடியுள்ளார்
விமானம் - கருட விமானம்
2000 ஆண்டுகள் பழமை கொண்டது. தர்ம தேவதை, உபரி 20 சரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோருக்கு இந்த பெருமாள் காட்சி தந்துள்ளார்.
தலவரலாறு:
கோகுலத்தில் ஒருநாள் பசுவை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன் பசுக்களை ஒரிடத்தில் விட்டு விட்டு யமுனைக்குச் சென்றபோது பிரம்மா பசுக்களை தேரழுந்தூருக்கு ஓட்டி வந்துவிட்டதால் உடனே அதே இடத்தில் அதேபோன்ற பசுமந்தையை படைத்துவிட பிரம்மா தன் தவற்றை உணர்ந்து கண்ணன் முன் தோன்றி தேரழுந்தூரில் கோயில் கொள்ள வேண்டும் விண்ணப்பிக்க ஆமருவியப்பனாக இங்கு வந்தான் என்கிறது தலவரலாறு.
இதற்குச் சான்றாக பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்து பேரழகுடன் காணப்படுகிறார். பெருமாளும், சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதி தேவியை நடுவராக நியமித்ததில் காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாக கூற சிவபெருமான் பார்வதி தேவியை பசுவாக மாற சாபமிட அவருக்குத் துணையாக சரஸ்வதி தேவியும், லட்சுமி தேவியும் பசுவாக பூமிக்கு வந்தபோது பெருமாள் ஆமருவியப்பன் என்ற பெயரில் வந்த திருத்தலம் இது.
கோவில் கருவறை விமானம் கருட விமானம். தேவேந்திரன் ஒருமுறை கருடனிடம் வைரமுடியையும் ஒரு விமானத்தையும் கொடுத்து அவர் மனதுக்குகந்த பெருமாளுக்கு கொடுக்கச் சொல்ல கருடன் வைரமுடியை மேல் கோட்டை திருநாராயண பெருமாளுக்கும் கொடுத்து, தேரழுந்தூரில் விமானத்தை தேவாதிராஜனுக்குக் கொடுத்தாராம். இதனால் மனம் நெகிழ்ந்த பெருமாள் கருடனை தன் கூடவே சன்னதியில் எழுந்தருளப் செய்தார்.
உபரிசரவசு என்ற மன்னன் தன் தேரில் ஏறி ஆகாயத்தில் வலம் வருவாராம். அந்த தேரின் நிழல் எதன்மீது விழுந்தாலும் கருகி விடுமாம். இப்படி வரும் காலத்தில் கண்ணன் 3 பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்க உபரிவசரவசுவின் தேரின் நிழல் பட்டு பசுக்கள் அலறியதாம். கண்ணன் நிழலை ஓங்கி அழுத்த தேர் நின்றது. அப்படி தேர் அழுந்தின இடம்தான் இந்த தேரழுந்தூர்.
இக்கோவில் உள்ளே கம்பர் மற்றும் அவருடைய மனைவி சிலைகள் உள்ளது. அடுத்து ஆஞ்சனேயர், இடதுபுறம் ஆண்டாள் சன்னதி மூலவர் தேவாதி ராஜன் கிழக்கு நோக்கி உள்ளார். கருடாழ்வார் மற்றும் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது புறம் காவிரி தாய் மண்டியிட்டு உள்ளார்.
தலத்தின் சிறப்புகள்
கம்பன் பிறந்த ஊர் இது.
முன்பு கரிகாலனின் தலைநகரமாக விளங்கியது.
இத்தலத்தில் பெருமாளை சேவித்து மார்க்கண்டேயர் மோட்சம் பெற்றார்.
அகத்திய முனிவரின் சாபத்தை பெற்ற காவிரி இந்த பெருமாளை வேண்டி சாபம் நீங்கப் பெற்றாள்.
நரசிம்ம அவதாரத்தை கண்டு அஞ்சிய பிரகல்லாதனுக்கு சாந்த சொரூபமாக ஆமருவியப்பனாக பெருமாள் காட்சி தந்த இடம்.