
தேரழுந்தூர் கோவிலுக்குப் போகிறவர்கள், கோவிலின் வெளிப் பிராகாரத்தில் 'திருமங்கை மன்னன் மண்டபத்தில் திருமங்கையாழ்வாரின் சந்நதியைக் கண்டு வியப்பார்கள். ஆமாம், கோவிலுக்குள்ளேயே ஆரோகணித்திருக்க வேண்டிய இவர், ஏன் வெளியே வந்தார்?
ஒவ்வொரு தலமாகச் சென்று பெருமாளைத் தரிசித்து மங்களாசாசனம் செய்துவந்த ஆழ்வார், இந்தக் கோவிலுக்கு வந்தபோது தயங்கினார். இது பெருமாள் கோவில்தானா என்று அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. மூலவர் பெயர் தேவாதிராஜன் என்று கேள்விப்பட்ட அவர், அது தேவர்களுக்கெல்லாம் ராஜனான இந்திரனோ என்று யோசித்தார்.
திருமால் தலங்கள் தவிர பிறிதொன்றில் ஆர்வம் கொள்ளாதிருந்த திருமங்கையாழ்வார், ஒரு முடிவுக்கு வந்து, அந்தத் தலத்தை விட்டுப் புறப்பட்டார். நாலடி தூரம் கூட நடந்திருக்க மாட்டார், பளிச்சென்று, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி உடலில் பலவீனம் ஏற்பட்டது. அதுவரை உற்சாகமாக, ஆரோக்கியமாக இருந்த தனக்கு திடீரென்று என்ன வந்தது? மெல்லத் திரும்பிக் கோவிலைப் பார்த்தவர் அப்படியே பரவசமானார். உள்ளிருந்து பெருமாள் அவரைப் பார்த்து, ‘‘இங்கிருப்பது உன்னைக் கவர்ந்தவனான நான்தான். மயங்காதே, உள்ளே வா,’’ என்று அழைப்பது போலிருந்தது. அதேகணம் அவருடைய சோர்வு முற்றிலும் நீங்கியது.
உடனே உள்ளே ஓடோடிச் சென்று பரந்தாமனைக் கண்களால் ஆரத் தழுவினார். பாதம் பணிந்து நெக்குருகினார். இந்தத் தலத்தை விடுத்து வேறொரு தலம் செல்ல நினைத்த தன் கால்களுக்கு அருள் விலங்கிட்டுத் தடுத்த இந்த இறைவன், தன் தந்தையாரான வசுதேவரின் கால்களில் கம்சன் பூட்டிய விலங்கை அறுத்தெறிந்த கிருஷ்ணனாக அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வந்தார்.
உடனே மடை திறந்த வெள்ளம்போல பாசுரங்கள் பொங்கிப் பெருகின. ஆமாம், மொத்தம் 45 பாசுரங்களால் இந்த தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்தார் திருமங்கையாழ்வார். அவற்றில், செங்கமலவல்லித் தாயாரையும் இணைத்துப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படித் தான் ஆட்கொண்ட ஆழ்வாருக்கு இன்றைக்கும்கூட முக்கியத்துவம் தந்து சிறப்பிக்கிறார் பெருமாள். ஆமாம், ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளிலும் தனக்கு அமுது நிவேதிக்கப்பட்ட பிறகு, அந்த அமுதினை கோவிலின் அனைத்து மரியாதைகளுடன் ஆழ்வாருக்கும் சமர்ப்பிக்குமாறு பணிக்கிறார்.
இது மட்டுமல்ல, தேவாதிராஜன், உற்சவர் ஆமருவியப்பனாக திருவீதிப் புறப்பாடு போகிறார் என்றால், அவர், முதலில் நிற்பது திருமங்கையாழ்வார் சந்நதி முன்பாகத்தான். குடை, சாமரம், தீவட்டி, மங்கள வாத்தியங்கள் என்று எல்லா மரியாதைகளுடன், ஆழ்வாருக்கே முதலில் சடாரி ஆசி அருளி திவ்யமாய் தரிசனம் தருவார். அதற்குப் பிறகே திருவீதி உலா ஆரம்பிக்கும். சம்பிரதாயப்படி கோவிலிலிருந்து சுவாமி புறப்பாடு தொடங்கும்போதே அடியவர்கள் பிரபந்தங்கள் பாடுவார்கள். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் ஆமருவியப்பன் ஆழ்வாருக்குத் தன் முதல் தரிசனம் தந்த பிறகு, இவர் சந்நதியிலிருந்துதான் பாட ஆரம்பிப்பார்கள்.
இது மட்டுமல்ல, இங்கே திருமங்கையாழ்வாருக்கு, திருக்கார்த்திகைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். வைபவத்தின் பத்தாம் நாளன்று, ஆமருவியப்பன் தன் கருவறையிலிருந்து உற்சவராகப் புறப்பட்டு இந்த ஆழ்வார் சந்நதிக்கு வந்து தங்குவார். இங்கேயே மண்டகப்படி கண்டு, ஆழ்வாருக்கு ஆசி வழங்குகிறார்!
தேரழுந்தூர் தலம், மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.