திருமால் ஊர்வலத்தில் பிள்ளையார் வந்தாரா? ஏன்? எதற்கு? எப்படி? காளமேகப் புலவர் தரும் விளக்கம் என்ன?

Kalamega pulavar
Kalamega pulavar

காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்காவைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். அதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. இருப்பினும், இவர் பல சிலேடை நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார்.

காளமேகப் புலவர் ஒரு வைணவர். இவரது இயற்பெயர் வரதன். இவருக்குக் காளமேகம் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது.

திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்த வரதன் திருவானைக்காவில் சிவத்தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்கு சென்று கோவிலின் உட்புறப் பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில், உறக்கம் வரப் படுத்து உறங்கிப் போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச் சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது.

அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கித் தவம் கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்க அவன் முன் தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயில் உமிழப் போக, அதை அவன் வாங்க மறுத்ததால், கோபமடைந்த சரஸ்வதி அத்தாம்பூலத்தை வரதன் வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலிதான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக் கொண்டான். அது முதல் தேவியின் அருளால் கல்வி எதுவும் கற்காமலே கவி மழையைப் பொழியத் தொடங்கினான். அதன் பிறகு வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என்று ஆனது என்பர்.

காளமேகப் புலவர், திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலிய நூல்களை இயற்றியிருக்கிறர். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும் பல உள்ளன.

ஒரே பாடல் இருவேறு விதமான பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது சிலேடை அணி அல்லது இரட்டுற மொழிதல் எனப்படுகிறது. இந்தச் சிலேடை அணியில் அமைந்த பாடல்களை, சிலேடைப் பாடல்கள் என்கின்றனர். காளமேகப் புலவர் பல சிலேடைப் பாடல்களை இயற்றி இருக்கிறார்.

அவர் எழுதிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடைப் பாடல் ஒன்று:

“பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை

ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்

மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை

பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்

உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது”

இப்பாடலின் பொருள் காணும் போது,

பாம்பு படம் எடுத்து ஆடும். குடப்பெட்டிக்குள் அடைந்து கொள்ளும். ஆடும் போது ‘உஸ்’ என்னும் இரைச்சலை உண்டாக்கும். குடப்பெட்டியின் மூடியைத் திறந்தால் தன் முகத்தைத் தூக்கிக் காட்டும். அது கடித்து விடம் மண்டைக்கு ஏறிவிட்டால் மண்டையில் எலுமிச்சம் சாற்றை ‘பரபர’ எனத் தேய்ப்பர். அதற்குப் பிளவு பட்ட நாக்கு உண்டு.

எள் செக்கில் ஆடும். எண்ணெய் குடத்தில் அடையும். ஆடும் போது செக்கில் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்து மூடியைத் திறந்தால் திறப்பவர் முகத்தை உள்ளே காட்டும். குளியலாடும் போது அதன் எண்ணெயைத் தலையில் இட்டுப் ‘பரபர’ என்று தேய்ப்பர். எள்ளுப் பிண்ணாக்கும் உண்டு.

இதையும் படியுங்கள்:
விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை!
Kalamega pulavar

ஸ்ரீரங்கத்தில் திருமால் ஊர்வலத்தில் பிள்ளையார் வருவது ஏன் என்பதற்குக் காளமேகம் பாடிய பாடல் இது:

“தந்தை பிறந்து இறவாத் தன்மையால் தன் மாமன்

அந்தம் பிறந்து இறக்கும் ஆதலால் - முந்தும் அளி

நாணிக்கு வில் வேலும் மாய்தலால் நன் மாமன்

காணிக்கு வந்திருந்தான் காண்”

பிள்ளையாரின் தந்தை சிவன் பிறப்பதும் இறப்பதும் இல்லை. மாமன் திருமால் பிறந்து இறப்பதால் வாரிசு உரிமை தோன்றும். திருமால் மகன் காமன். வண்டினை அம்பாகக் கொண்ட காமன் எரிக்கப்பட்டு விட்டான். எனவே காணியாட்சி (வாரிசுரிமை) கொண்டாடலாம் என்று பிள்ளையார், பெருமாள் ஊர்வலத்தில் வருகிறார் என்று புதிய விளக்கத்தை அளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com