தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே உள்ள கடிகாசலமலை சோளிங்கர் சப்தரிஷிகள் தவம் செய்த மலையாகும். சிறு குழந்தையான பிரகலாதனுக்காக எம்பெருமான் நரசிம்மனாக காட்சி கொடுத்த போது இந்த காட்சியை இங்கு தவம் செய்து கொண்டிருந்த சப்தரிஷிகள் காணத் துடித்தனர். உடனே பெருமாள் ரிஷிகளுக்காக மீண்டும் அந்த காட்சியில் தோன்றினார். ஆனால் கருணைமிக்க நரசிம்ம பெருமாளாக, யோக நரசிம்மராக காட்சி அளித்தார். நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க சப்தரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பித்த ஒரு கடிகைக்குள் இருபத்தி நான்கு நிமிடத்திற்குள் பயன் கிடைத்ததால் கடிகாசலம் என்று பெயர் ஏற்பட்டது.
சோளிங்கர் என்று பெயர் பெற்ற இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலமாகும். விசுவாமித்திரர் இங்கே நரசிம்மனை ஒரு கடிகை இருபத்தி நான்கு நிமிடம் துதி செய்து பிரம்மரிஷி பட்டத்தை பெற்றதாக ஐதீகம்.
இங்குள்ள மலை மீது ஏறி எம்பெருமானை தரிசித்தால் பேய் பிசாசு சூனியம் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் தீர்ந்து விடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள் தீக்காயங்களையும் நரசிம்மர் நீக்குகிறார். ஜாதகத்தில் செவ்வாயால் ஏற்பட்ட தோஷமும் நீங்குகிறது என்று புராணம் கூறுகிறது.
சோளிங்கரில் இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று பெரிய மலை மற்றொன்று சிறிய மலை. பெரிய மலையில் யோக நரசிம்மரும் சிறிய மலையில் ஆஞ்சநேயரும் அமர்ந்து உள்ளனர். இரண்டு மலைகளில் பெரிய மலையில் உள்ள பெருமாளை தரிசித்து விட்டு சின்ன மலையில் உள்ள ஆஞ்சநேயரை தரிசிப்பதற்காக ஏற வேண்டும். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீ ராமபிரான் வைகுண்டம் புறப்பட்டாராம். அப்போது ராமபிரான் ஆஞ்சநேயரிடம் ஆஞ்சநேயா நீ இந்த பூலோகத்தில் இருந்து சேவிக்க வேண்டிய ஒரு திருமூர்த்தி உண்டு. அவர்தான் லஷ்மி நரசிம்ம பெருமாள் அவர் கடிகாசலத்தில் யோக சாதனை புரிந்து வருகிறார். நீயும் அவரது அருளில் அவர் அருகில் யோகம் புரிந்து உலக க்ஷேமத்தை அருள்வாய் என்று கட்டளையிட்டாராம். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு பெருமாளோடு அமர்ந்தார்.
சோளிங்கர் மலையில் எழுநூற்றி ஐம்பது அடி உயரத்தில் ஆயிரத்து மூன்னூற்று ஐந்து படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலைக்குன்றின் மீது இருநூறு அடி நீளம் நூற்றியம்பது அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளகிராமமாலை அணிந்து கொண்டு சங்கு சக்கரதாரியாக நான்கு கரங்களுடன் இரு கால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோக பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அமிருதவல்லி தயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். உலக உயிர்களை காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அமிருதவல்லி என வழங்கப்படுகிறார் .
ஆரம்பத்தில் மலையேறும் வழியில் தாயாருக்கு தனி சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னிதி சிதிலமடைந்தபோது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டார்.
அக்கார வடிசல் என்னும் விசேஷ பாயாசம் நரசிம்மருக்கு படைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றை சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் பதினோரு மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார் .
இந்த மலைக்குக் கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த மலைக்கோவிலுக்கு செல்ல நானூற்றி ஆறு படிகள் ஏற வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரை போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில், சங்கு ஒரு கையில், சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உடன் அமர்ந்திருக்கிறார் ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அமிர்தவல்லி தாயாரிடம் கூறினால், அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அந்த கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார், எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும்.
பெருமாள் கோவில்கள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனியும் வீற்றிருக்கும் ஆனால் இங்கு கருவறையில் மூலவர் மட்டுமே அருள்பாலிக்கிறார். உற்றவர் பக்தோ சிதம்பெருமாள் சுதா வல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்தில் தனியாக கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லி தாயார் மற்றும் சுந்தரவல்லி தாயார், தனித்தனி சன்னதியில் அருள்பாலிகிறார்கள்
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று சோளிங்கரில் ஒரு கடியை அதாவது இருபத்தி நான்கு நிமிடம் தங்கி இருந்தாலே பீடைகள் தொலைந்து மோட்சம் சித்திக்கும். இந்த தலத்தில் ஸ்ரீ நரசிம்மரை தரிசித்து பேரருள் பெறுவோம்.
(புகழ் பெற்ற நரசிம்மர் தலங்கள் என்ற நூலில் இருந்து தொகுப்பு)