பெருமாள் கோயில் போல தீர்த்தம், சடாரி வழங்கும் சிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Do you know where the Shiva temple that offers Theertham and sadari is located?
Do you know where the Shiva temple that offers Theertham and sadari is located?
Published on

சென்னை புறநகரில் அமைந்த போரூரின் மையப்பகுதியில் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல ஈசன், ஸ்ரீ இராமநாதீஸ்வரரே குருவாக அமைந்து இத்தலத்தில் அருளுவதால் குரு பகவானுக்குச் செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் இங்கு நடைபெறுகின்றன. இத்தலம் குரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதா தேவியை ஸ்ரீ ராமபிரான் தேடிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் இலுப்பை வனத்தில் ஓரிடத்தை ஸ்ரீ ராமபிரான் வேகமாகக் கடந்தபோது அவருடைய காலை நெல்லி மரத்தின் வேர் ஒன்று இடறி விட, அவருடைய உள்ளுணர்வு ஏதோ சொல்ல அங்கேயே அப்படியே நின்று விட்டார். அந்த நெல்லி மரத்தின் வேருக்கு அடியில் சிவலிங்கம் உள்ளது என்று அவருடைய உள்ளுணர்வு சொல்ல, சிவலிங்கத்தின் சிரசில் தனது கால் பட்டுவிட்டதே என வருந்திய ராமபிரான் அதனால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள அங்கேயே 48 நாட்கள் தவ வாழ்வினை மேற்கொண்டார்.

ராமபிரான் தவம் செய்த இடத்தில் பூமியானது பிளக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அங்கே ஒரு சிவலிங்கம் தோன்றியது. அப்போது அதே இடத்தில் சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் எடுத்து ஸ்ரீ ராமபிரானுக்குக் காட்சி தந்து அருளினார். சிவபெருமானின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு சிலிர்த்த
ஸ்ரீ ராமபிரான் அன்பு மிகுதியின் காரணமாக அவரைக் கட்டி அணைத்தார். அடுத்த நொடியே இறைவனின் விஸ்வரூபம் ஆறு அடி உயர அமிர்த லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை பூஜித்து சீதையைத் தேடிச் செல்ல வழி கேட்டார். அப்போது தென் திசையில் உள்ள கயிலாயகிரிபுரத்திற்கு (இராமேஸ்வரம்) செல் என்று உத்தரவு வந்தது. ஸ்ரீ ராமபிரானுக்கு ஒரு குருவாக இருந்து வழிகாட்டியதால் இத்தலத்தின் இறைவன் இராமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
பழைய வீடுகளை சொந்தமாக வாங்க பலரும் ஆசைப்படுவது ஏன்?
Do you know where the Shiva temple that offers Theertham and sadari is located?

பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் தீர்த்தம் வழங்கி, சடாரி வழங்கும் வழக்கம் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ இராமநாதீஸ்வரரை ஸ்ரீ ராமபிரான் வழிபட்டதால் இத்தலத்தில் பக்தர்களுக்கு வைணவ சம்பிரதாயப்படி தீர்த்தம் மற்றும் சடாரி வழங்கும் நடைமுறை உள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர தரிசனத்தை முடித்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தால் பிரம்மாண்டமான கொடிமரம் பலி பீடத்தோடு அமைந்துள்ளது. மகாமண்டபம், முன்மண்டபம், கருவறை ஆகிய அமைப்புடன் இத்தலம் திகழ்கிறது. மகாமண்டபத்தில் இருந்தபடியே இத்தல ஈசனை கண்குளிர தரிசிக்க முடிவது சிறப்பு.

கஜபிருஷ்ட வடிவத்தில் அமைந்த கருவறையில் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் பிரம்மாண்டமாக ஆறு அடி உயரத்தில் அமிர்தலிங்கமாக எழுந்தருளி காட்சி தருகிறார். அம்பாள் அருள்மிகு சிவகாமசுந்தரி என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளி பக்தர்களைக் காத்து வருகிறார்.

வெளித்திருச்சுற்றில் விநாயகர் ஸ்ரீ சந்தான விஜய கணபதி என்ற திருநாமம் தாங்கி தனிச் சன்னிதியில் அமைந்து அருளுகிறார். வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான், பைரவர், சனீஸ்வரர், நால்வர் மற்றும் மனைவிகளுடன் கூடிய நவகிரக நாயகர்கள் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மக்காச்சோளம் உடலுக்குத் தரும் 9 வித ஆரோக்கிய நன்மைகள்!
Do you know where the Shiva temple that offers Theertham and sadari is located?

தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இத்தலத்தின் விருட்சம் நெல்லி மரமாகும். இத்தலத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி திருவிழா நான்கு கால பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நவராத்திரி விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம் 108 சங்காபிஷேகம், பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. வருடந்தோறும் குரு பெயர்ச்சி விழா இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

பக்தர்களின் வழிபாட்டிற்காக இத்தலம் காலை 6 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இத்தலம் போரூர் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் குன்றத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தின் அருகில் உள்ள சாலையில் இடது புறம் திரும்பி பயணித்தால் சற்று தொலைவிலேயே அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com